கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – ஃபைனான்ஷியல் தொடர் – 1

நிம்மதியைப் பறித்த சொந்த வீடு!

டன் வாங்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அந்தக் கடன் நம் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியைப் பறித்துவிடுமா என்பதைக் கடன் வாங்கும்முன் யோசித்தால், கடன் வலையில் சிக்காமல் தப்பித்துவிட முடியும்.

 

 

ஆனால், பேராசை என்னும் பேய் பலரையும் அப்படி யோசிக்க விடுவதில்லை கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்தச் சிக்கலின் சரியான முடிச்சைக் கண்டுபிடித்து விட்டால், எல்லாச் சிக்கல்களையும் அவிழ்த்துவிட முடியும். இதற்கான வழிமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்வதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். இனிவரும் வாரங்களில் உங்கள் கடன் சிக்கலைச் சொல்லுங்கள்… அதிலிருந்து மீண்டுவரும் வழிகளை நாங்கள் சொல்கிறோம்.

நிம்மதியைப் பறித்த சொந்த வீடு!

“இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு வரை சிக்கல் இல்லாமல்தான் என் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. நண்பர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு நான் கண்மூடித்தனமாகச்  செயல்பட்டதால்தான் கடன் சுழலில் சிக்கி நிம்மதியில்லாமல் தவித்து வருகிறேன்” என ஆரம்பித்தார் சிவக்குமார்.

 

“என்ன பிரச்னை, என்ன சிக்கல்” என நாம் கேட்டதும் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

“நான் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். வயது 38. மாதம் 45 ஆயிரம் சம்பளம். என் மனைவி பி.எஸ்.சி, பி.எட் படித்தவர். திருமணத்துக்குமுன் தனியார் பள்ளியொன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு எங்கள் வீட்டில் வேலைக்குப் போக வேண்டாம் எனச் சொன்னதால், வீட்டுப் பொறுப்பை மட்டும் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு ஒரே ஒரு பையன் மட்டுமே. எட்டு வயது ஆகிறது. தற்போது மூன்றாம் வகுப்புப் படித்து வருகிறான். நான் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு கட்டிக் குடிவந்தேன். அதிலிருந்துதான் சிக்கலே ஆரம்பித்தது.

என் நண்பர் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். கொஞ்சம் வசதியான குடும்பப் பின்னணியை உடையவர். ஒருநாள் அவர் குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்தபோது, எத்தனை நாளுக்குத்தான் இப்படி வாடகை வீட்டிலேயே இருப்பது. சொந்தமாக வீட்டைக் கட்டி வாழ வேண்டும் என ஆசையில்லையா உனக்கு என ஆரம்பித்தார். நான் வசதி வாய்ப்பு வேண்டுமே எனத் தயங்கினேன்.

உடனே அவர் புறநகர் பகுதியில் இரண்டு கிரவுண்ட் நிலம் குறைந்த விலைக்கு வருவதாகவும், இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு கிரவுண்ட் வாங்கினால் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவிடலாம் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

என் மனைவிக்கும் சொந்த வீட்டு ஆசை வந்துவிடவே, தொடர்ந்து நிர்பந்தப்படுத்தி வந்தார். எனக்கும் நண்பருடன் அருகே இருக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதே எனத் தோன்றியது. ஒரு கிரவுண்ட் 22 லட்சம். என் சேமிப்பாக இருந்த ரூ.10 லட்சம் போக, ஊரிலிருந்த பூர்வீக இடத்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். பற்றாக்குறைக்கு என் உறவினர் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினேன்.

வீட்டுக் கடன் ரூ.20 லட்சம் வாங்கி, சிக்கனமாக ரூ.13-15 லட்சத்துக்குள் வீட்டை முடித்துவிட்டால், உறவினரிடம் வாங்கிய கடனை அடைத்து விடலாம் எனக் கணக்குப்போட்டேன். 900 சதுர அடியில்தான் முதலில் பிளான் பண்ணினேன். பிறகு 1100 சதுர அடி வரை அதிகப்படுத்திக் கொண்டேன். சதுர அடி ரூ.1,900 என்ற கணக்கில் ரூ.20 லட்சம் ஆகி விட்டது. நண்பர் செய்வதைப் பார்த்து இன்டிரியர் டிசைனுக்கு நானும் கூடுதலாக ரூ.4 லட்சம் வரை செலவு செய்தேன். அதற்காக நகையை ரூ.4 லட்சத்துக்கு அடமானம் வைத்துவிட்டு, மேலும் கடன் சுமையை அதிகப்படுத்திக்கொண்டேன்.

 

நண்பரின் வருமானத்துக்கு எல்லாம் சரிதான். ஆனால், நான்தான் என் தகுதிக்கு மீறி செய்துவிட்டேன். இப்போது வீட்டுக் கடன் இ.எம்.ஐ மட்டும் மாதம் ரூ.19,000 வரை செலுத்திவருகிறேன். அதில்லாமல் உறவினரிடம் வாங்கிய ரூ.7 லட்சம், நகைக் கடன் ரூ.4 லட்சம் என ரூ.11 லட்சம் கடனாகி விட்டது.

என் மகனின் படிப்புக்கும், என் ஓய்வுக்காலத்துக்கும் மாதம் ரூ.9,000 வரை முதலீடு செய்துவந்தேன். அதையெல்லாம் எடுத்து வீடு கட்டிவிட்டதால் இப்போது பூஜ்யமாக இருக்கிறேன். இப்போது இ.எம்.ஐ செலுத்திவிட்டு வீட்டுச் செலவுகளையே சமாளிக்க முடியவில்லை. என் எதிர்கால இலக்குகளுக்குத் துளியும் முதலீடு செய்ய முடியவில்லை.

மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டால் ரூ.12,000-க்கு விடலாம். ஒரு போர்ஷனை மட்டும் வாடகைக்கு விட்டால் ரூ.5000-க்கு விடலாம். இப்போது முழு வீட்டையும் நான் பயன்படுத்தி வருகிறேன். முன்பு சிட்டிக்கு கொஞ்சம் அருகில் 600 சதுர அடி வீட்டில் ரூ.8,000-க்கு வாடகைக்கு இருந்தேன். புது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, சிறிய வீட்டுக்கு வாடகைக்குச் சென்று விடலாமா என்றுகூட யோசித்து வருகிறேன்.

மனைவி வேலைக்குச் செல்வதில் விருப்பமாகத்தான் இருக்கிறார். என் அம்மாவுக்குத்தான் அவர் பணிக்குச் செல்வது பிடிக்கவில்லை. அவரைச் சமாதானப்படுத்தினால் மனைவியைப் பணிக்கு அனுப்பும் சூழல் வரலாம். அம்மா என்னுடன்தான் இருக்கிறார். என் மனைவி என் மகன் படிக்கும் பள்ளியில் பணிக்குச் சென்றால்கூட இன்றைய நிலையில் சம்பளம் மாதம் ரூ.15-20 ஆயிரம் கிடைக்கும்.

அம்மாவுக்கும் சேர்த்து மெடிக்ளெய்ம் பாலிசி ரூ.2 லட்சத்துக்கு வைத்துள்ளேன். ஆனால், டேர்ம் பாலிசி எடுக்கவில்லை.

இன்றைய சூழலில் ஏதாவது திடீர் செலவுகள் என்றாலே கடன் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறேன். மகனுடைய மேற்படிப்புக்கும், என் ஓய்வுக்காலத்துக்கும் மறுபடியும் முதலீட்டை ஆரம்பிக்க முடியுமா என்பதே பெரிய கவலையாக இருக்கிறது. நான் இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர என்னதான் வழி..?” என்றவர் தன் வரவு செலவு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

*  மாத சம்பளம்: ரூ.45,000

*  குடும்பச் செலவுகள்: ரூ.18,000

*  இ.எம்.ஐ: ரூ.19,000

*  ஃபர்னிச்சர் கடன்: 3,000 (இன்னும் 18 மாதங்கள் செலுத்த வேண்டும்)

*  நகைக் கடன்: ரூ.5,000 (இன்னும் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும்)

இ.பி.எஃப் பிடித்தம்: 3,600 + 3,600 இதுவரை உள்ள தொகை: ரூ.6 லட்சம். இ.பி.எஃப்-ல் இதுவரை பணம் எதையும் எடுக்கவில்லை.)

இனி இவருக்கான கடன் சிக்கலுக்குத் தீர்வுகளைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“குறைவான சம்பளத்தில் இருப்பவர்களும், சம்பளம் பெரிதாக உயர வாய்ப்புகள் குறைவாக இருப்பவர்களும் கடன் வாங்கும்முன் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டியது மிக அவசியம். இல்லையென்றால், ஏதாவது சிறு தவறு நடந்துவிட்டாலும்கூட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

உங்களுக்கான சிக்கலும் அப்படிப்பட்டதுதான். நண்பரின் யோசனையைக் கேட்டது தவறில்லை. ஆனால், அதிகம் சம்பாதிக்கும் நண்பரைப் பின்பற்றியே எல்லா விஷயங்களையும் செய்துகொண்டதுதான் இன்றைய சிக்கலுக்குக் காரணம். உங்கள் பட்ஜெட்டுக்குள் நின்றிருந்தால் இந்த அளவுக்கு நீங்கள் கவலைப்படும் நிலை வந்திருக்காது.

சரி, இனி சிக்கலில் இருந்து மீண்டுவர என்ன வழி எனப் பார்ப்போம். உங்கள் மனைவி வேலைக்குப் போகும் தகுதியுடன் இருப்பதும், ஆர்வமாக இருப்பதுமே உங்களுக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லிச் சம்மதிக்க வைப்பது மட்டுமே உங்கள் பொறுப்பாக இருக்கிறது. சூழலை விளக்கிக் கூறி உங்கள் மனைவியைப் பணிக்கு அனுப்புங்கள். தகுதி இருப்பவர்களை வீட்டில் முடக்கி வைக்காமல் இருப்பதும் நல்லதுதானே.

இ.பி.எஃப் பணம் ஓய்வுக்காலத்துக்கானது, எடுக்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வீடு வாங்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உண்டாக்கிக் கொண்டபிறகு, வெளியில் கடனை வாங்கிக் கஷ்டப்படுவதைவிட இ.பி.எஃப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. வீட்டுக் கடனை அடைப்பதற்காக நீங்கள் இ.பி.எஃப்-ல் ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும். வீட்டுக் கடனில் ரூ.5 லட்சத்தை அடைத்துவிட்டு, பிறகு அதே அளவுக்கு டாப்அப் லோன் வாங்கிக்கொள்ளவும். அந்த ரூ.5 லட்சத்திலிருந்து நகைக் கடன் ரூ.3 லட்சத்தை அடைத்துவிடுங்கள். மீதியுள்ள ரூ.2 லட்சத்தை உறவினரிடம் வாங்கிய தொகையில் ஒருபகுதியை அடைத்துவிடுங்கள். இன்னும் ரூ.5 லட்சம் மட்டுமே கடன் இருக்கும்.

நகைக் கடன் முடிக்கப்பட்டதால் அதற்குச் செலுத்திவரும் ரூ.5,000-த்தை ஓர் ஆண்டுக்கு அவசரகால நிதியாகச் சேர்க்கவும். பிறகு அந்த ரூ.5,000-த்தில் ரூ.4,000-த்தை எட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால் ரூ.6.4 லட்சம் கிடைக்கும். இதை உங்கள் மகனுடைய மேற்படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.

உங்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள 1,000-த்தை இதற்கான பிரீமியம் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளவும்.

இப்போது குடும்பச் செலவுகளுக்கு ரூ.18 ஆயிரம் ஆகிறது எனில் உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.69,600 தேவைப் படும். இதற்கு ரூ.1.96 கோடி கார்ப்பஸ் தொகை சேர்க்க வேண்டும். உங்கள் இ.பி.எஃப் மூலம் ரூ.55 லட்சம் கிடைக்கக்கூடும். இன்னும் ரூ.1.4 கோடி சேர்க்க வேண்டும். உங்கள் மனைவியின் ரூ.20,000 சம்பளத்தில் அவருடைய செலவுகள் போக ரூ.14,400-ஐ முதலீடு செய்துவந்தால் இந்த இலக்கை அடையலாம்.

உங்கள் வீட்டைத் தடுத்து இன்னொரு போர்ஷனை வாடகைக்குவிட்டால் ரூ.5,000 கிடைக்கும் எனச் சொல்லியுள்ளீர்கள். இதைக்கொண்டும், சம்பளம் உயரும் போது கிடைக்கும் கூடுதல் தொகையைக் கொண்டும் உறவினரிடம் வாங்கிய கடனில் மீதியுள்ள ரூ.5 லட்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வரவும்.

இந்தக் கடனை உடனடியாக அடைக்க இன்னொரு வழியும் இருக்கிறது. உங்களுக்கான ஒரு கிரவுண்ட் இடத்தில், கால் கிரவுண்ட் அளவுக்கு உங்கள் நண்பரை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லுங்கள். அவர் பொருளாதார வசதியுடன் இருப்பதாலும், உங்களுக்கு உதவி செய்யக்கூடிய நட்புடன் இருப்பதாலும் சுலபமாக அவர் வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி வாங்கிக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கான கடன் பிரச்னைக்கு முழுமையான தீர்வு உடனடியாகக் கிடைத்துவிடும்.”

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

Note: This article was posted in last Sunday Nanayam Vikatan.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *