கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – கனவுக் கோட்டை… கடன் சிறை!

வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்துத் திட்டமிடும்போது கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. அப்படிக் கடன் வாங்கும் போது, நாம் வளர்ச்சி என நினைப்பது நிஜமான வளர்ச்சிதானா, கடன் வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நம் வருமானம்  எந்தளவுக்கு அதிகரிக்கும், வளர்ச்சித் திட்டத்தில் ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் கட்டாயம் யோசிக்க வேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யோசிக்காமல், ஆராயாமல் கண்மூடித்தனமாகக் கனவுக் கோட்டை கட்டுகிறவர்கள்தான் கடன் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு உதாரணமாக இருப்பவர்கள் பலரில் ஜானகியும் ஒருவர். அவர் கடன் சுழலில் சிக்கிய கதையைச் சொல்கிறார்…

“திண்டுக்கல் அருகில் உள்ள கிராமம் என் சொந்த ஊர். நான் மில் ஒன்றில் பணிபுரிகிறேன். என் வயது 36. என் கணவர் விவசாயம் பார்க்கிறார். அவருக்கு 40 வயது. சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் எங்களுக்கு உள்ளது. தண்ணீர் அதிகம் இல்லாத காரணத்தால் விவசாயத்தில் பெரிய  வருமானமில்லை. எங்கள் சாப்பாட்டுக்கு மட்டும் நெல் விளைச்சல் இருக்கும்.

 

 

நான் மாதம் ரூ.14 ஆயிரம் சம்பாதிக்கிறேன். தற்காலிக ஊழியர் கணக்கில் நான் பணிபுரிவதால் எனக்கு பி.எஃப், போனஸ் என எந்தச் சலுகையும் இல்லை. நான் சம்பாதிக்கும் தொகையில்தான் மற்ற குடும்பச் செலவுகளைச் செய்கிறேன். சொந்தமாக வீடு இருப்பதால், சிக்கனமாகச் செலவு செய்துவிட்டு, மாதம் ரூ.5,000 வரை சீட்டுப் போட்டு அதன்மூலம் சேர்த்த பணம் ரூ.4 லட்சம் வங்கியில் வைத்திருந்தேன்.

எங்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும்தான். அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவனை இன்ஜினீயரிங் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துப் பணத்தைச் சேர்த்தேன். ஆனால், விதி வேறுவிதமாக இருந்தது. எங்கள் நிலத்துக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் தரிசு நிலம் மூன்று ஏக்கர் ரூ.4 லட்சத்துக்கு விலைக்கு வந்தது. என் கணவர் அந்த நிலத்தை வாங்கி, ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்தால், ஆண்டுக்கு ஐம்பது, நூறு மூட்டை நெல் விளைய வைக்கலாம். ஆண்டுக்கு மூன்று, நான்கு லட்சம் சம்பதிக்கலாம் என்றார்.

எனக்கும் நம் நிலத்துக்குக் கொஞ்சம் அருகிலேயே இருப்பதை விட்டு விடவேண்டாமே எனத் தோன்றியது. மகன் படிப்புக்காகச் சேர்த்து வைத்த ரூ.4 லட்சத்தை எடுத்து நிலத்தை வாங்கினோம். பிறகு, நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி இரண்டு இடங்களில் போர் போட்டோம். நன்றாகத்தான் தண்ணீர் கிடைத்தது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் கோடை ஆரம்பித்ததும் படிப்படியாகத் தண்ணீர் குறைந்தது. கிடைக்கும் தண்ணீர் அரை ஏக்கர் நிலத்துக்குக்கூட போதவில்லை. எதிர்பார்த்த வருமானம் வரவில்லை.

கடனுக்காக வட்டி மட்டும் மாதம் ரூ.6,000 வரை செலுத்தி வருகிறேன். இதனால் மாதம் ரூ.5,000 சீட்டு கட்டுவதையும் நிறுத்திவிட்டேன். சேர்த்து வைத்த பணமும் போய், இப்போது சேர்க்கக்கூடிய வாய்ப்பும் போய்,  கடனுக்கு வட்டி கட்டி வருவதால், நிம்மதி இழந்து தவிக்கிறோம். கடன் வாங்கி வாங்கிய நிலத்தை மறுபடியும் விற்க என் கணவர் முயற்சி செய்து வருகிறார். மிகக் குறைந்த விலைக்கே நிலத்தைக் கேட்கிறார்கள். வாங்கிய விலைக்கு விற்றாலும் போர் போட்ட பணம் நஷ்டம்தான்.

பரவாயில்லை, நிலத்தை விற்றுவிடலாம் என்று பார்த்தால், மழை பெய்தால் போரில் தண்ணீர் வந்துவிடும்; எனவே, விற்காதீர்கள் என்கிறார்கள் வேறு சிலர். என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது. எப்படி இந்தச் சிக்கலில் இருந்து மீள்வது எனத் தெரியாமல் தவிக்கும் எனக்கு நல்ல யோசனை சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார் ஜானகி.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி. “நூறு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும், அந்தப் பொருளை வாங்குவதினால் நமக்கு என்னவிதத்தில் பயன்படும் என்று  யோசிக்க வேண்டியது அவசியம். நீங்கள் விவசாய நிலத்தை வாங்கும்முன், அந்த நிலத்தை நீங்கள் நினைத்தபடி நன்செய் நிலமாக மாற்ற முடியுமா, மண் வளம் எப்படி இருக்கிறது, நிலத்தை விற்பவரின் நோக்கம் என்ன, நீராதாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே அந்த இடத்தை வாங்கியிருக்கிறீர்கள். நடந்தது நடந்துவிட்டது. இனி அதை என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நீங்கள் கடனாக வாங்கிய ரூ.2 லட்சத்துக்கு ரூ.6,000 வட்டி செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் 36% வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளீர்கள். வங்கியில் அக்ரி லோன் 7 சதவிகிதத்துக்கு  வாங்க முடியும். அதிலும் 3% உங்களுக்கு வட்டி மானியம் கிடைக்கும். மானியம் தள்ளுபடி போக, நீங்கள் ரூ.2,400 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால், மழை பெய்யும்போது மானாவாரி விவசாயம் செய்தால்கூட ஆண்டுக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்க முடியும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் வருமானம் வந்தால்கூட நீங்கள் சுலபமாகச் சமாளிக்கலாம்.

நீங்கள் எதிர்பார்த்தபடி மழை பெய்து போரில் தாராளமாகத் தண்ணீர் கிடைத்தால், நல்ல லாபம் பார்க்க வாய்ப்பு உண்டு. விவசாயமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் லாபத்திலிருந்து ஒரு பகுதியைச் சேர்த்து வைத்து அந்தப் பணத்தில் விரிவாக்கம் செய்தால் கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது.

மதுரையைச் சேர்ந்த சிவராமன் இண்டிரியர் டெக்ரேட் தொழிலை அருமையாகச் செய்கிறார். நல்ல வருமானம். ஆனால், மாதம் ரூ.1.5 லட்சம் வரை கடனுக்கான இ.எம்.ஐ செலுத்திவருகிறார். காரணம், மொத்தப் பணத்தையும் தொழில் விரிவாக்கத்துக்குப் பயன்படுத்திவிடு கிறார். இப்படிச் செய்வது ஏதாவது ஒரு சூழலில் சிக்கலில் கொண்டு விட்டுவிடும் என்பதை நீங்கள் மட்டுமல்ல, எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கூடுதலாக நிலம் வாங்க வேண்டும் என்ற இலக்கை லாபத்தைக் கொண்டு அடைய முயற்சி செய்திருக்க வேண்டும். இனியாவது கவனமாகச் செயல்படுங்கள்.

இப்போது அக்ரி லோனுக்கு முயற்சி செய்யுங்கள். சீட்டு கட்டிவந்தது, ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.4 லட்சம் வரை சேர்த்தது உள்ளிட்ட ஆவணங் களைக் காட்டி உங்களின் கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதியை எடுத்துச்சொன்னால், உங்களுக்கு அக்ரி லோன் சுலபமாகக் கிடைக்க வாய்ப்புண்டு.

கொஞ்சம் யோசித்தால், உங்களுக்குப் பெரிய  பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், நினைத்தது நடக்கவில்லை என்றதுமே, மாற்று என்ன என்று யோசிக்காமல், பதற்றப் படுவதால்தான் பெரிய பிரச்னையில் சிக்கிக்கொண்டோமோ என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அக்ரி லோன் ரூ.2,400 செலுத்தியது போக, ரூ.2,500 வீதம் 48 மாதங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அதற்கு 12% வருமான அடிப்படையில் ரூ.1.5 லட்சம் கிடைக்கும். இதை உங்கள் மகனின் முதலாம் ஆண்டு படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். விவசாயத்தில் வரும் கூடுதல் வருமானத்தை அப்படியே சேர்த்து வந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளின் படிப்புச் செலவைச் சுலபமாகச் சமாளிக்கலாம். இனிவரும் நாள்களில் விவசாயத்தைத் திட்டமிட்டுத் திறம்படச் செய்ய வேண்டியது உங்கள் கணவரின் கையில்தான் இருக்கிறது.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

 

This article was posted in last week sunday( 26/08/2018) Nanayam Vikatan .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *