கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்!

சிலர் எவ்வளவு வருமானம் வருகிறது, எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் உயரும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அதேபோல் வருகிற வருமானத்தில் தப்போது ஆகும் செலவுகள் எவ்வளவு, வருங்காலங்களில் அதிகரிக்கும் செலவுகள் எவ்வளவு என்றும் யோசிப்பதில்லை. வருமானம் உயர்கிறதோ இல்லையோ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவார்கள். இப்படி வரவுக்கு மீறிச் செலவுகளை கட்டமைத்துக்கொள்கிறவர்கள் கடன் வலையில் மிகச் சுலபமாகச் சிக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் திருச்சியைச் சேர்ந்த முருகப்பன் இருக்கிறார். அவர் நம்மிடம் பேசுப்போது…

 

“எனக்கு வயது 35. நான் சிகை அலங்காரக் கடை நடத்தி வருகிறேன். இரண்டு நபர்களை வேலைக்கு வைத்துள்ளேன். மாதம் சராசரியாக ரூ.60 ஆயிரம் வரை வருமானம் வருகிறது. இதிலிருந்துதான் இரண்டு பேருக்கான சம்பளம் ரூ.32 ஆயிரம் கொடுத்துவருகிறேன். 2015-ம் ஆண்டில் வீட்டுக் கடன் ரூ.35 லட்சம் 30 ஆண்டுகள் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் வாங்கி வீடு வாங்கினேன். அதற்கான இ.எம்.ஐ மட்டும் மாதம் ரூ.31 ஆயிரம் செலுத்திவருகிறேன். வீட்டின் ஒரு போர்ஷனை ரூ.6,500-க்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன்.

என்னுடைய மனைவி வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. என்னுடைய அப்பா அம்மா மதுரைக்கு அருகில் என் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அங்கே விவசாய நிலம் மூன்று ஏக்கர் எனக்கு உள்ளது. வரவுக்கு மீறிச் செலவுகள் ஏற்பட்டு, தவிக்கும் நேரத்தில் அவ்வப்போது 30 ஆயிரம் 40 ஆயிரம் ரூபாய் எனப் பெற்றோர்தான் பணம் கொடுத்து உதவுகிறார்கள்.

செலவுகளைச் சமாளிப்பதற்காக இன்னொரு பிசினஸை ஆரம்பித்தேன். என் கடைக்குப் பக்கத்திலேயே டீக்கடையை இரண்டு மாதங்களுக்குமுன் தொடங்கினேன். இரண்டு பேரை டீக்கடையில் வேலைக்கு வைத்துள்ளேன். இப்போது நாள் வருமானமாக ரூ.4,000 வரை வந்துகொண்டிருக்கிறது. இரண்டு பேர் சம்பளமாக ரூ.1,400 மற்றும் பொருள்கள் வாங்கும் செலவுகள் ரூ2,400 என வரவுக்கும் செலவுக்கும் ஏறக்குறைய சரியாகப் போய்விடுகிறது. நாளுக்கு நாள் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வருங்காலங்களில் இந்த வருமானம் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

வீட்டுக் கடன் அல்லாமல் வெளியில் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளேன். இதற்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி செலுத்தி வருகிறேன்.

சிகை அலங்காரக் கடை ஊழியர்களின் சம்பளம் ரூ.32 ஆயிரம், வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.31 ஆயிரம், கடை வாடகை ரூ.7 ஆயிரம், வீட்டுச் செலவுகள் ரூ.12 ஆயிரம், வெளிக் கடன் வட்டி ரூ.12 ஆயிரம் என மாதம் ரூ.94 ஆயிரம் வரை செலவாகிறது. அடுத்த மூன்று மாதங்களில் டீக்கடை வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.6,000 வரும் என எதிர்பார்க்கிறேன். விரைவில் டிபன் வகைகளும் விற்பனை செய்யும் திட்டம் உள்ளதால் ஒரு வருடத்தில் டீக்கடை பிசினஸ் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை வருமானம் வரும் என எதிர்பார்க்கிறேன். இருக்கும் கடன்களை அடைத்து முடிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் வழிகளைச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“உங்களின் வருமானம், செலவுகளைக் கணக்கிட்டுப் பார்த்து, ஒப்பிடும்போது, நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன் அதிகமாக உள்ளதால்தான் உங்களுக்கு நெருக்கடியும், பற்றாக்குறையும் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு போர்ஷன் உள்ள வீடு என்ற அளவில் திட்டமிட்டிருந்தால், ரூ.20 லட்சம் என்ற அளவில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். இரண்டு போர்ஷன் வீட்டுக்குத் திட்டமிட்டு அதிக கடன் வாங்கி மாதம் ரூ.31 ஆயிரம் இ.எம்.ஐ செலுத்தி வருவதால்தான் உங்களுக்குப் பணச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீங்கள் கூடுதலாக ஒரு போர்ஷன் கட்டியதால் கிடைக்கும் வாடகை வருமானத்தைவிட நீங்கள் கூடுதலாகப் பெற்ற கடனுக்குச் செலுத்தும் வட்டி அதிகம். இப்போது வருமானத்துக்கு மீறிச் செலவுகளை விஸ்தரித்துக்கொண்டு, அதைச் சமாளிக்க இன்னொரு பிசினஸ் ஆரம்பித்துள்ளீர்கள். அதற்கும் கடன் வாங்கி மேலும் சுமையை அதிகப்படுத்திக்கொண்டுள்ளீர்கள்.

பிசினஸ் வளர்ந்து வரும் வேளையில் மற்ற தேவைகளுக்காகக் கடன் வாங்குவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு மட்டும் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் இந்த அளவுக்குக் கடன் சுமை இருந்திருக்காது. வீடு கட்டி வாடகைக்கு விடுவதால் லாபம் இல்லை என்பதை ஒரு பிசினஸ்மேனாக நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். பிசினசில் 30-40% லாபம்கூட சாத்தியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் டீக்கடை லாபத்தை அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வந்தாலும்கூட அந்த அளவுக்கு நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உங்களுக்கான பற்றாக்குறைகளுக்குப் போக, நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் லாபமாகக் கொண்டே தீர்வுகளைச் சொல்கிறேன்.

நீங்கள் வெளியிடத்தில் வாங்கியுள்ள கடனுக்கு 24% வட்டி செலுத்தி வருகிறீர்கள். இந்தக் கடனை உடனே அடைக்க வேண்டும்.

டீக்கடை வருமானம் ரூ.30 ஆயிரத்தை வெளிக் கடன் ரூ.6 லட்சத்தை அடைக்க அப்படியே பயன்படுத்துங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தக் கடன் முடிந்துவிடும்.

கடன் முடிந்ததும் அந்த ரூ.30 ஆயிரத்தில் 12,500 ரூபாயை 2020 முதல் 10 ஆண்டுகளுக்கு 10% வருமானம் தரும் பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவந்தால் ரூ.28,75,000 கிடைக்கும். 2030-ல் வீட்டுக் கடன் பாக்கி ரூ.29,30,000 இருக்கும். மூன்று நான்கு மாதங்கள் கூடுதலாக முதலீட்டைத் தொடர்ந்தால் இந்தக் கடனை முழுமையாக அப்போது அடைத்துவிடலாம்.

மீதி ரூ.12,500 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால், 12% வருமான அடிப்படை யில் ரூ.1.23 கோடி கிடைக்கும். இதனை உங்கள் ஓய்வுக்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னும் மீதமுள்ள 5,000 ரூபாயை 18 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால் 12% வருமான அடிப்படையில் ரூ.38 லட்சம் கிடைக்கக்கூடும். உங்களுக்குக் குழந்தை பிறக்கும்பட்சத்தில், குழந்தையின் மேற்படிப்புக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

கடன் முடிந்த பிறகு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சத்துக்கு எடுத்துக்கொள்ளவும். மற்றும் 50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

பிசினஸில் கூடுதல் லாபம் கிடைக்கும்போது பிசினஸ் டெவலப்மென்ட் ஃபண்டை உருவாக்கி வைத்துக்கொண்டால், பிசினஸ் வளர்ச்சிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

 

This artifice was posted on last Sunday Nanayam Vikatan


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *