கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 13 – சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை!

சில விஷயங்கள் எதிர்காலத்தில் ‘நிச்சயமாக நடக்கும்’ என்று சிலர் நினைத்து, சில விஷயங்களை தடாலடியாக செய்துவிட்டு, பிற்பாடு அந்த விஷயங்கள் நடக்காமல் போகும்போது சிக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரகுநாதன். அவர் சொல்வதைக் கேட்போம்…

“நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு 29 வயது. அரசுப் பணியில் இருக்கிறேன். பணியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளாகிறது. மொத்த சம்பளம் ரூ.32 ஆயிரம். பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.29 ஆயிரம். ஜி.பி.எஃப்-ல் இதுவரை ரூ.1.5 லட்சம் இருக்கக்கூடும். தற்போது ஜி.பி.எஃப்-ல் பிடித்தம் ரூ.2,800.

7-வது சம்பள கமிஷனுக்குப்பிறகு, எனது சம்பளம் ரூ.13 ஆயிரம் வரை அதிகரிக்கும் என நினைத்தேன். அந்த எண்ணத்தில்தான் சொந்த வீடு கட்டினேன். 2016-ல் வங்கியில் ரூ.13 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.13 ஆயிரம். 2031-ல் இந்தக் கடன் முடியும்.

ரூ.15 லட்சத்தில் வீட்டைக் கட்டி முடித்தேன். ரூ.2 லட்சம் வெளியில் கடன் வாங்கினேன். வெவ்வேறு செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் எல்லாம் சேர்த்து வெளிக் கடன் மட்டும் ரூ.5 லட்சம் உள்ளது. இதற்கு 36% வட்டியாக மாதம் ரூ.15 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.

 

 

இதில்லாமல் கூட்டுறவு வங்கிக் கடன் ரூ.3 லட்சம் 2013-ல் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.5,000. இந்தக் கடன் 2023-ல் முடிவடையும்.

எங்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்கிறோம். அப்பாவுக்கு 60 வயதாகிவிட்டதால், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியவில்லை.

வீட்டுத் தேவைக்குப் போக, நெல் விளைச்சல் மூலம் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் வரை வருமானம் வருகிறது. இந்தப் பணம் மொத்தமும் வெளிக் கடனுக்கான வட்டி கட்டவே போய்விடுகிறது. சில சமயம், வட்டித் தொகை ரூ.15 ஆயிரத்தைக் கட்ட முடியாமல் தவிக்கவேண்டிய நிலையில்தான் உள்ளேன்.

செலவுகளைச் சமாளிப்பதற் காக மூன்று மாதங்களுக்குமுன் மீன் பண்ணை அமைத்தோம். ஆண்டுக்கு ரூ35 ஆயிரம் செலவு செய்தால், ரூ.80 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும் எனக் கணக்குப் போட்டேன். ஆனால், ஆரம்பகட்டச் செலவுகளுக்கே பணமில்லாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளேன்.

இதற்கிடையே அடுத்த ஆண்டுக்குள் எனக்குத் திருமணத்தை முடிக்க வேண்டும் எனத் தீவிரமாகப் பெண் பார்த்து வருகின்றனர் என் பெற்றோர்.  சம்பள உயர்வு பெரிதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கடனை வாங்கிவிட்டேன். இப்போது கடன் சுமையில் நிம்மதியிழந்து  தவிக்கும் நான் எப்படி மீண்டு வருவது?  நல்ல வழி காட்டினால் நிம்மதியாக இருப்பேன்” எனப் புலம்பித் தீர்த்த ரகுநாதன் தன் வரவு செலவு மற்றும் கடன் விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

 

வரவு செலவு மற்றும் கடன் விவரங்கள்

சம்பளம்  ரூ.29,000, குடும்பச் செலவுகள் ரூ.10,000, வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.13,000, கூட்டுறவுக் கடன் இ.எம்.ஐ ரூ.5,000, இதர செலவுகள் ரூ.1,000, வெளிக் கடன் வட்டி ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம், விவசாய வருமானம் ரூ.80 ஆயிரத்தைச் செலுத்தியது போக பற்றாக்குறை ரூ.1 லட்சம்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்த சாரதி.

“எருமை வாங்கும்முன்னே நெய் விலை கூறாதே என்று சொல்வார்கள். உங்களைப் போல, எதிர்காலத்தில் இவ்வளவு வரும் அவ்வளவு வரும் என அவர்களாகவே வருமானத்தை அளவிட்டுக் கொண்டு முன்கூட்டியே செலவுகளைச் செய்து சிக்கிக் கொள்கிறவர்கள் ஏராளம். சம்பளம் ஏறிய பிறகு வீடு கட்டும் திட்டத்தை வைத்திருந் தால், இந்த அளவுக்கு கடனில் சிக்காமல் தப்பித்திருக்கலாம்.

சென்னை உள்ளிட்ட சில பெருநகரங்களில் திருமணத் துக்குப் பெண் பார்க்கும்போது சொந்த வீடு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதுபோன்ற சிக்கல் உங்களுக்கு இருந்து அவசரமாக வீட்டைக் கட்டினீர்களா எனத் தெரிய வில்லை. சரி, இனி எப்படி கடனிலிருந்து மீள்வது எனப் பார்ப்போம்.

நீங்கள் வீடு கட்ட கூடுதலாகப் பணம் தேவைப்பட்டிருப்பின், கடனைதி திரும்பக் கட்டி முடிக்கும் காலத்தை நீடித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதைத்  தவிர்த்திருக்கலாம்.

இனி வீட்டுக் கடனை மாற்றி அமைப்பதன் மூலம் (பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்) உங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் குறைந்தபட்ச வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனத்தைத் தேர்வுசெய்து உங்கள் கடனை மாற்றுங்கள். 30 வருடங்களில் செலுத்தி முடிக்கும் வகையில் நீங்கள் ரூ.18.5 லட்சம் வரை கடன் வாங்க வாய்ப்புள்ளது. 8.7% வட்டி என்றால், ரூ.14,400 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் வெளியில் வாங்கியுள்ள ரூ.5 லட்சம் கடனை அடைத்துவிடவும்.

இப்படிச் செய்வதன் மூலம் விவசாய வருமானமாகக் கிடைக்கும் தொகையில் ஆண்டுக்கு ரூ.63 ஆயிரம் வரை மிச்சமாகும். ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்கிறீர்கள். மற்ற காலங்களிலும் கூடுதல் முயற்சியெடுத்து விவசாயம் செய்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் பெற முடியும்.

மிச்சமாகும் விவசாய வருமானத்தைக் கொண்டு உங்கள் திருமணத்தை முடித்துக் கொள்ளவும். அதன்பிறகு அந்தத் தொகையைக் கொண்டு கூட்டுறவு வங்கிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கவும்.
நீங்கள் இந்த அளவுக்குக் கடனை வைத்துக்கொண்டு மீன் பண்ணை அமைப்பது சரியாக இருக்காது. கடன் பிரச்னை முடிந்தபிறகு ஆரம்பித்தால்தான், அதற்கான முதலீட்டை மேற்கொண்டும் கடன் வாங்காமல் உங்களால் செய்ய முடியும்.

எல்லாப் பிரச்னைகளும் முடிந்த பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களின் எதிர்கால இலக்குகளுக்கு முதலீட்டை ஆரம்பிக்கவும்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *