கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 14 – நிம்மதி இழக்க வைத்த அவசரம்!

சில இளைஞர்கள் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கும்போதே வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன் காரணமாக அவசரமும் படுகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்கும் இளைஞர்களைக் குறிவைத்து பல வங்கிகள் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கின்றன. வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனத் தொடர்ந்து வங்கிகள் தரப்பிலிருந்து அழைப்புகள் வரும்போது, நம் இளைஞர்கள் பலருக்கும் எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்கிற ஆசை துளிர்விடுகிறது. அப்படி ஆசைப்பட்டு அகலக்கால் வைத்து அகப்பட்டுக் கொண்டவர்தான் கடலூரைச் சேர்ந்த சித்தார்த்.அவர் தனது நிலை குறித்துக் கவலையுடன் பேச ஆரம்பித்தார்.

“எனக்கு வயது 28. நான் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் நான்கு வருடங்களுக்குமுன் பணியில் சேர்ந்தேன். சம்பளம் ரூ.65 ஆயிரம். என்னுடன் பணிபுரிந்த சுமதியைக் காதலித்து, மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டேன். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால், யாரும் திருமணத்துக்கு வரவில்லை.

திருமணமான ஒரு சில மாதங்களில் சென்னைப் புறநகரில் சொந்தமாக ரூ.35 லட்சம் மதிப்பில் வீடு வாங்கிக் குடியேறினோம். அதற்காக வீட்டுக் கடன் ரூ.30 லட்சம் வாங்கினேன். அடுத்ததாக, ரூ.5 லட்சம் கார் கடன் வாங்கினேன். அதுமட்டுமல்லாமல், வீட்டுக்கு ஃபர்னிச்சர் மற்றும் பொருள்கள் வாங்க ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். ஆக,  இ.எம்.ஐ-ஆக மட்டும் மாதம் ரூ.37 ஆயிரம் செலுத்தி வருகிறேன். என் வருமானத்தில் இ.எம்.ஐ செலுத்தியதுபோக, குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருந்தது.

 

 

இந்தச் சூழ்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென நான் வேலையை விட்டு விலக வேண்டியதாயிற்று. வேலை போனதும் கையிருப்பாக இருந்த ரூ.2 லட்சத்திலிருந்துதான் செலவுகளைச் சமாளித்து வருகிறேன். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எனக்குப் புதிய வேலை அமையாவிட்டால் இ.எம்.ஐ செலுத்தி, குடும்பச் செலவுகளையும் சமாளிப்பது சிரமமாகிவிடும்.

கடந்த வருடம் எங்களுக்குக் குழந்தை பிறந்ததால், என் மனைவி வேலையை விட்டுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் மனைவி மறுபடியும் வேலைக்குச் செல்கிறேன் என்கிறார். ஆனால், குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சிக்கல் உள்ளது. எங்கள் இருவர் பெற்றோர்களிடம் சமாதானம் பேசலாம் என்றாலும் யோசனையாக இருக்கிறது. எனக்கு சரியான வேலை அமையும்வரை சூழ்நிலையைச் சமாளிப்பது எப்படி என்று  குழப்பமாக இருக்கிறது. ரூ.40 – 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல மனம் இடம்கொடுக்கவில்லை.

பணம் சேர்த்துக்கொண்டு படிப்படியாகச் செய்யாமல், ஒரே நேரத்தில் கடனை வாங்கிவிட்டது தான் நான் செய்த தவறு என்பதை இப்போது உணர்கிறேன். இந்தச் சிக்கலிலிருந்து மீள நான் என்ன செய்தால் சரியாக இருக்கும், இன்றைய சூழலில் என் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது” என விரக்தியுடன் பேசினார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்த சாரதி.

“இன்றைய இளைஞர்களில் பலருக்கு உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. வாழ்க்கையில் ஆசைகளும், இலக்குகளும் தவறில்லை. ஆனால், அவற்றை அடைவதில் அவசரமும், பதற்றமும் இல்லாத நிதானமான திட்டம் அவசியம்.

நீங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதும், உங்கள் பெற்றோர்கள் உங்கள்மீது கோபப்பட்டதும் இயல்பான விஷயம்தான். ஆனால், மூன்று வருடங்களாக அவர்களை அணுகி சமாதானம் ஆகாமல் இருந்தது மிகமிகத் தவறு. குழந்தை பிறந்த பிறகாவது அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றிருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இன்றைக்கு உங்களுக்குச் சிக்கல் வந்தபிறகு, உங்கள் குழந்தைக்கு ஆயா வேலை பார்ப்பதற்காக அவர்களை அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல.

உங்கள் அவசரமான செயல் பாடுகளால் ஏற்பட்ட சிக்கலி லிருந்து முதலில் வெளிவரக்கூடிய வழிகளைப் பார்ப்பதுதான் இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது. முதலில் உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல் என்பது தற்காலிகமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி உங்கள் வாழ்க்கை இருண்டெல்லாம் போய்விடவில்லை.

உங்கள் தகுதிக்கேற்ற வேலை அமையும் வரை மாதாந்திரச் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டுக் கடன் 20 ஆண்டுகளில் செலுத்தி முடிக்கும் வகையில் உள்ளது. அதனை 30 ஆண்டுகளாக மாற்றிக்கொண்டால் 3,000 ரூபாய் இ.எம்.ஐ குறையும்.

 

 

 

 

உங்கள் தகுதிக்கு ஒவ்வாத சம்பளம் குறைவான வேலை களில் அவசரப்பட்டுச் சேர வேண்டாம். அது உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும்.  உங்களாலும் ஊக்கமுடன் செயல்பட முடியாது. உங்கள் முயற்சியைப் பொறுத்து எப்படியும் ஆறு மாதங்களுக்குள் ஏற்ற வேலையில் நீங்கள் சேர்ந்துவிட முடியும். அதுவரை உங்களின் தற்காலிகச் சிக்கலுக்கு தீர்வுகாண மூன்று வழிகளை நீங்கள் கையாளலாம்.

ஒன்று, உங்கள் மனைவியை வேலைக்கு அனுப்பலாம். இரண்டாவது, உங்களிடம் தங்க நகை இருப்பின் அடமானம் வைத்து கடன் பெறலாம். மூன்றாவதாக, உங்கள் நண்பர்கள் சிலரிடம் கைமாற்றுக் கடன் வாங்கலாம். எல்லா வழிகளிலும் சில பிரச்னை இருக்கலாம். ஆனால், உங்களுக்கான உடனடித் தீர்வு இதன்மூலம் கிடைக்கலாம்.

உங்கள் மனைவி வேலைக்குப் போகும்பட்சத்தில், குழந்தையைக் கவனித்துக் கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருப்பதாகத் தோன்றலாம். ஒரு வயது ஆகிற குழந்தையை உங்களால் ஏன் கவனித்துக்கொள்ள முடியாது..? ஆண்களால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற மனநிலையிலிருந்து நீங்கள் வெளியே வந்தால், உங்களால் முடியும். உங்களுக்கு நல்ல வேலை அமையும்வரை உங்கள் மனைவியை வேலைக்கு அனுப்புவது சரியாக இருக்கும்.

உங்களிடம் 15 பவுன் நகை  இருக்குமானால், ரூ.2.4 லட்சம் வரை கடன் பெறலாம். இதைக்கொண்டு அடுத்த ஆறு மாதங்களைச் சமாளிக்க முடியும். தங்க நகைக் கடன் வாங்க வாய்ப்பில்லாத பட்சத்தில், உங்கள் நண்பர்கள் நான்கு பேரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி ஆறு மாதங்களைச் சமாளிக்க லாம். ஆறு மாதங்கள் என்பது அதிகபட்ச காலக்கெடுதான். அடுத்த மாதமே நல்ல வேலை அமைந்து விட்டால் எல்லாச் சிக்கலும் நொடியில் அவிழ்ந்துவிடும்.

உங்களுக்கு நல்ல வேலை அமைந்து பிரச்னைகள் தீர்ந்தவுடன் முதலில் உங்கள் இருவரின் பெற்றோரையும் சந்தித்துப் பேசுங்கள். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உண்மையான அக்கறையுடன் உதவுபவர்கள் அவர்கள்தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு முக்கியமான விஷயம், திருமணம் ஆனவுடனேயே சொந்த வீடு, கார் என அதிரடியாக நீங்கள் செய்திருப்பதைப் பார்த்தால், ‘நீங்கள் யாரும் இல்லாவிட்டாலும் என்னால் வசதியாக வாழ முடியும்’ என உங்கள் இருவரின் பெற்றோர் களுக்கும் சவால்விட்டு செய்ததாகவே தோன்றுகிறது. மற்றவர்கள் முன்னிலையில் வசதியாக வாழ்வதாகக் காட்டிக் கொள்வதற்காக ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்கினால், இதுபோன்ற சிக்கல் வரும்போது சமாளிப்பது மிகக் கஷ்டமாகி விடும் என்பதை இனியாவது புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

வீட்டுக் கடனை தொடர்ந்து செலுத்த முடியாத சூழலில், சில வங்கிகளில் மண்டல அளவில் முடிவெடுத்து, ஆறு மாதங்கள் வரை அவகாசம் தருகிறார்கள். இதைக் கடைசியாகச் சொல்வதற்குக் காரணம், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. வேறுவழியே இல்லாத சூழலில் இந்த முயற்சியை எடுக்கலாம். ஆனால், நீங்கள் சூழ்நிலையை எதிர்கொண்டு மீள்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)

is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

 – கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *