கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 16 – வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்!

சிலர் கடன் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் வாங்கித் தள்ளிவிடுகிறார்கள். பிற்பாடு, வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையை  இ.எம்.ஐ-யாகவே செலுத்துகிறார்கள். அதையும் சரியான தேதியில் செலுத்தத் தவறிவிடு கிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் இருக்கிறார். கைநிறைய சம்பாதித்த அவர், கடன் வலையில் எப்படிச் சிக்கினார் என்பதை அவரே சொல்கிறார்…

“எனக்கு வயது 40. காப்பீட்டுத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். ரூ.80,000 சம்பளம் வாங்கி வந்தேன். அவ்வப்போது குடும்பச் செலவுகளுக்காக வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ மட்டுமே மொத்தம் ரூ.1.15 லட்சம் வரை கட்டி வருகிறேன். கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நான் செய்துவந்த வேலையைக் கடந்த மாதம் விட்டுவிட்டேன். தற்போது, அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறேன். இதன் மூலமாகவும், கன்ஸ்யூமர் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் எம்.எல்.எம் பிசினஸ் செய்வதன் மூலமாகவும் மாதமொன்றுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால், இந்த வருமானத்தைப் பெற எனது வேலையை மனஉளைச்சல் இல்லாமல் செய்ய வேண்டும்.

 

 

 

கடந்த காலத்தில் நான் செய்த மிகப் பெரிய தவறு, கடன் எளிதாகக் கிடைக்கும்போதெல்லாம் வாங்கியதுதான். கார் லோன், பர்சனல் லோன் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களில் பொருள்கள் வாங்கியதற்கான இ.எம்.ஐ என ஒன்பதுக்கும் மேலான கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்திவருகிறேன். ஏழு கிரெடிட் கார்டுகள் வரை பயன் படுத்தி வந்தேன். அதிலும் சில கடன்களை வாங்கியிருந்தேன். அந்தக் கடன்களை வேறு இடத்தில் கடன் வாங்கியதன் மூலம் ஐந்து கார்டுகளை குளோஸ் செய்துவிட்டேன். இப்போது இரண்டு கார்டுகளில் ரூ.2.10 லட்சம் கட்ட வேண்டும். இதற்கு மினிமம் தொகையாக மாத மொன்றுக்கு ரூ.15,000 கட்டுகிறேன். கிரெடிட் கார்டுகளுக்கான தொகையைச் சரியாகக் கட்டாத தினாலும்,  இ.எம்.ஐ தொகையைச் சரியாகக் கட்டாததினாலும் என் சிபில் ஸ்கோர் கடந்த ஆறு மாதங் களில் 350-ஆகக் குறைந்துவிட்டது.

என் முதல் குழந்தை 6-ம் வகுப்பும், இரண்டாவது குழந்தை 1-ம் வகுப்பும் படிக்கிறார்கள். என் மனைவி வீட்டில் தையல் வேலை செய்கிறார். ஆனால், பெரிதாக வருமானமில்லை. சேமிப்பு, முதலீடு, சொத்து என எதுவும் இல்லை. வீட்டு வாடகை ரூ.11,000, படிப்புச் செலவு, மளிகைச் செலவுகள் என மாதம் ரூ.35,000 ஆகிறது. இன்றைய நிலையில்,  வீட்டு வாடகை, மளிகைச் செலவு, பல்வேறு கடன்களுக்கான இ.எம்.ஐ என மாதமொன்றுக்கு ரூ.1.50 லட்சம் தேவை.  அதனால் தான் வேலையை விட்டுவிட்டு, தனியாக முயற்சி  செய்துவருகிறேன்.

என் நிலை சீராக மூன்று மாதம்  ஆகலாம். அதுவரை இ.எம்.ஐ தொல்லை இல்லாமல் இருக்க என்ன வழி, இந்தக் கடன் சுழலில் இருந்து மீண்டுவர என்ன வழி?’’ என விரக்தியுடன் பேசியவர் தான் வாங்கிய கடன் பட்டியலை அனுப்பி வைத்தார்.

கடன் விவரங்கள்

* பர்சனல் லோன் 10 லட்சம். பாக்கி ரூ.8 லட்சம். இதற்கான இ.எம்.ஐ 23,000.

* கார் லோன் ரூ.8 லட்சம். இன்னும் ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ ரூ.14,000.

* இன்னொரு பர்சனல் லோன் ரூ.3 லட்சம் வாங்கினேன். இன்னும் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ ரூ.8,000.

* தனியார் நிதி நிறுவனக் கடன் ரூ.4 லட்சம். இன்னும் ரூ.2.5 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ. ரூ.10,000.

* தனியாரிடம் வாங்கிய நகைக்கடன் ரூ.3.80 லட்சம். மாதம் ரூ.25,000 செலுத்தி வருகிறேன். மொத்தம் 20 மாதங்கள். இன்னும் 7  மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.

* இரண்டு கிரெடிட் கார்டு களில் உள்ள கடன் ரூ.2.10 லட்சம். இதற்கு மினிமம் தொகை மட்டும் மாதம் ரூ.15,000 செலுத்தி வருகிறேன்.

*  பொருள்கள் வாங்கியதற்கான கடன் இன்னும் ரூ.1 லட்சம் உள்ளது. இ.எம்.ஐ ரூ.20,000.

இந்த எல்லாக் கடன்களுக்கும் சேர்த்து மாதமொன்றுக்கு  செலுத்தும் மொத்த இ.எம்.ஐ தொகை 1.15 லட்சம்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்த சாரதி.

 

“இன்ஷூரன்ஸ் துறையில் பணிபுரியும் நீங்கள் பலருக்கு ஆலோசனைகள் சொல்லி வழிநடத்தி ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நீங்களே செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்து, முன்னுதாரணமாக மாறியிருக்கிறீர்கள். பல விஷயங் களில் நீங்கள் அலட்சியமாகச் செயல்பட்டதுதான் இதற்குக் காரணம். ரூ.30,000 சம்பளம் வாங்குபவர்களே வாழ்க்கையைத்   திட்டமிட்டு சிறப்பாக வாழும்போது, ரூ,80,000 சம்பாதித்த நீங்கள் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியுமே!

நீங்கள் வாங்கிய கடன்கள் எல்லாமே எதிர்பாராத செலவு களுக்கும், அவசர செலவுகளுக்கும் வாங்கவில்லை.  எல்லாமே தவிர்த் திருக்க வேண்டிய கடன்கள்தான். ரூ.80,000 சம்பளம் வாங்கிக்கொண்டு, ரூ.10 லட்சம் மதிப்பில் கார் வாங்கியது என்பது மிகப்பெரிய தவறு. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் பதவியின் கெளரவத்துக் காக நிறைய பேர் ஆடம்பர வாழ்க் கைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். வருமானப் பெருக்கம் சார்ந்து வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறவர்களுக்கு சிக்கல் வராது.  அப்படியில்லாமல் கடன் வாங்கி வசதிவாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்கிறவர்கள் சுலபமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நீங்கள் இன்ஷூரன்ஸ் துறையில் இருப்பதால், உங்கள் மனைவியை இன்ஷூரன்ஸ் முகவராக பயிற்சி தந்திருந்தால், வேலையிலிருந்து விலகிய இந்த நேரத்தில் ஓரளவு வருமானம் சம்பாதித்திருக்கலாம்.  நீங்கள் சேமிப்பு, முதலீடுகளைக் கொஞ்சம்கூட செய்யவில்லை; எதிர்காலத்துக்குத் தேவைப்படும் சொத்துகளை கொஞ்சமும் உருவாக்கவில்லை. இனி, சில அதிரடியான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தால்தான், கடன் இ.எம்.ஐ தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும்.

முதலில், நீங்கள் காரை விற்றுவிடுங்கள். கடன் கொடுத்த நபர்களிடம் அவமானப்படுவதை விட கார் இல்லாமல் இருப்பது சிரமமான விஷயமில்லை. நீங்கள் கார் வாங்கி இரண்டு ஆண்டுகளே ஆவதால், குறைந்த பட்சம் ரூ.7.75 லட்சத்துக்கு விற்க முடியும். இதன்மூலம் கார் கடன் ரூ.6 லட்சத்தை அடைத்துவிடலாம். மீதமுள்ள ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு தனிநபரிடம் வாங்கிய நகைக் கடனை அடைத்துவிடுங்கள். அந்த நகையைப் பொதுத்துறை வங்கிகளில்  அல்லது நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களில் அடைமானம் வைத்தால், ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்தத் தொகையை நீங்கள் காலஅவகாசமாகக் கேட்கும் மூன்று மாதங்களுக்கு குடும்பச் செலவுகள், இ.எம்.ஐ செலுத்தப் பயன் படுத்திக்கொள்ளவும். செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. குறைந்தபட்ச அளவுக் காவது கடனைத் திரும்பச் செலுத்திவருவது அவசியம்.

நீங்கள் மன உளைச்சல் இல்லாமல், செய்யும் காரியங்களை கவனத்துடன் செய்ய இந்த மூன்று மாத காலஅவகாசம் உதவியாக இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொண்டால், அதன்பிறகு கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிட முடியும்.

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மறக்கவே கூடாது – கடன் வாங்குவது தவறல்ல. அநாவசியமான விஷயங்களுக்கு அதை வாங்குவது மகா தவறு.’’

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

This article was posted on Mahayana vikatab last week(14/10/2018)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *