கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்!

பிசினஸ் செய்வதில் கில்லிகளாக இருக்கும் பலரும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் கோட்டைவிட்டு   விடுகிறார்கள். பல பிசினஸ் சாம்ராஜ்யங்கள் சரிந்து போகக் காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டதுதான். கெமிக்கல் பிசினஸ் செய்துவரும் கோவையைச் சேர்ந்த சுப்புராமன் இன்று கடனில் தத்தளிப்பதற்கு என்ன காரணம்..? அவரே சொல்கிறார்…

“எனக்கு 50 வயது. நான் 15 ஆண்டுகளாக பிசினஸ் செய்துவருகிறேன். என் பிசினஸ் நன்றாகத்தான் போகிறது. ஆனால், சமீப காலமாக என்னால் முழுக் கவனமும் பிசினஸில் செலுத்த முடியவில்லை. காரணம், ரூ.32 லட்சம் வரை இருக்கும் கடன் சுமைதான்.          ரூ.35 லட்சத்துக்கு வீட்டுக் கடன் மூலம் வீடு ஒன்றை வாங்கினேன். என் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். என் மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். நான் பிசினஸ் வளர்ச்சிக்காகவும், வெவ்வேறு செலவுகளுக்காகவும் பல்வேறு காலகட்டங்களில் வாங்கிய கடனும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையும் சேர்ந்து ரூ.19 லட்சம் வரை கடன் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், கம்பெனியின் விரிவாக்கத்துக்காக ரூ.13 லட்சம் வரை டேர்ம் லோன் வாங்கியிருக்கிறேன். தற்போது, வங்கிகளில் கடன் வாங்கும் தகுதியில் என் கிரெடிட் ஸ்கோர் இல்லை.

 

 

என்னுடைய சொத்து என்று பார்த்தால், ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடு, தவிர ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை (தற்போது அடமானத்தில் உள்ளது). உள்ளது. என் மனைவியின் இ.பி.எஃப் இருப்புத் தொகை ரூ.50,000 இருக்கக்கூடும். பிசினஸ் மூலம் வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4 லட்சம்.

என்னுடைய பிசினஸுக்குத்  தற்போது நல்ல பிராண்ட வேல்யூ இருப்பதால், பங்குதாரர்களை இணைத்துக்கொண்டால் கடன் சுமை குறைய வாய்ப்புள்ளதா, எனக்குப் பாரமாக உள்ள கடனை கட்டி முடிக்க என்ன வழி..? அடுத்ததாக, மகளின் மேற்படிப்பு, திருமணம், என் ஓய்வுக்காலத்துக்கு பணம் சேர்க்கவில்லையே என்கிற கவலையும் என்னை வாட்டி வதைக்கிறது” என்றார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நீங்கள் மட்டுமல்ல, பிசினஸ் செய்பவர்கள் பலர், பிசினஸைத் திறம்பட செய்கிறார்கள். ஆனால், கணக்குவழக்குகளைப் பராமரிப்பது முதல் முதலீடு செய்வது வரை நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்து வதில்லை. நிறுவனத்தில் உற்பத்தி எவ்வளவு, விற்பனை எவ்வளவு, இருப்பு எவ்வளவு, தொடர்ச்சி யான முதலீடுகள் அவசியமா, பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கினால் அதற்கேற்ற வருமான உயர்வு இருக்குமா என்பது போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் போதிய அக்கறையும், கவனமும் இல்லாமல் மேம்போக்காகச் செயல்படுகிற போதுதான் சிக்கல் வருகிறது. நீங்கள் செய்த தவறும் இதுதான்.

உங்கள் கம்பெனி அக்கவுன்ட் டையும், உங்கள் தனிப்பட்ட நிதி சார்ந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனித்திருந்தாலே ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்திருக்கலாம். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிக மாகும்போதே நீங்கள் உஷாராகி யிருக்க வேண்டும். உங்களுக்கு வீட்டுக் கடன் இருப்பதால், டாப்அப் லோன் வாங்கி கிரெடிட் கார்டு கடனை அடைத்திருக்கலாம். கடன் பற்றிய மன உளைச்சலிலிருந்து மீண்டு பிசினஸில் கவனம் செலுத்தியிருக்க முடியும்.

 

 

உங்களுக்கு இருக்கும் ரூ.13 லட்சம் டேர்ம் லோனைப் பற்றி  கவலைப்படத் தேவையில்லை. பிசினஸ் நன்றாக இருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்திவிடலாம். வெளிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் ரூ.19 லட்சம் கடனைக் கட்டி முடித்து விட்டால் நீங்கள் கவலைப் படாமல் பிசினஸில் கவனம் செலுத்த முடியும். இனி நீங்கள் கடன் சுமை யிலிருந்து மீண்டுவர ஐந்து விதமான வழிகளைச் சொல்கிறேன். உங்களுக்கு ஏற்புடைய வழியைத் தேர்வு செய்துகொள்ளவும்.

முதல் வழி

உங்கள் நிறுவனம் தொடர் பான விவரங்களை ஆராய்ந்து பார்த்ததில்,  உங்களுக்கு இருக் கும் மிகப் பெரிய பலம் உங்கள் பிசினஸின் பிராண்ட் வேல்யூ மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியிலான வரவேற்பும்தான். எனவே, நீங்கள் உங்கள் பிசினஸில் பணம் மட்டும் முதலீடு செய்யக்கூடிய பங்கு தாரர் (Sleeping partner) ஒருவரை இணைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் முதலீடாக ரூ.20 லட்சம் வாங்க முடியும். இதைக் கொண்டு ரூ.19 லட்சம் கடனை அடைக்க முடியும்.

இரண்டாவது வழி

பிராண்ட் வேல்யூ மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியிலான வரவேற்பு நன்றாக இருப்பதால், ரூ.10 லட்சம் யாராவது ஒரு பங்குதாரரிடம் முதலீடாக வாங்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ.5 லட்சம் வட்டியில்லாக் கடனாகக் கேளுங்கள். ரூ.4 லட்சம் உங்களுக்கு பிசினஸ் நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். இதனைக் கொண்டு, உங்கள் கடன் ரூ.19 லட்சத்தை அடைத்துவிடலாம்.

மூன்றாவது வழி

அதிக முதலீடு செய்ய பங்குதாரர் முன்வராதபட்சத்தில், ரூ.5 லட்சம் மட்டும் முதலீடாகப் பெறுங்கள். ரூ.10 லட்சம் வட்டியில்லாக் கடனாக வாங்குங்கள். நீங்கள் வொர்க்கிங் பார்ட்னர் என்பதால், உங்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்துகொள்ளுங் கள். மாத சம்பளத்திலிருந்து வட்டியில்லாக் கடனை அடைக்க நடவடிக்கை எடுங்கள். இன்னும் ரூ.5 லட்சம் டாப்அப் லோன் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு டாப்அப் லோன் கிடைப்பதில் சிக்கல் இருந்தால், வீட்டை உங்கள் மனைவி பெயருக்கு மாற்றிவிட்டு, அவர் பெயரில் டாப்அப் லோன் வாங்குங்கள்.

நான்காவது வழி

இரண்டு பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் மற்றும் இரண்டு பங்குதாரர்களுக்கு 40:30:30 என்ற விகிதத்தில் பங்கீட்டை அமைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் கம்பெனி நடத்த ஆகும் செலவுகளை அவர்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். ரூ.35 லட்சத்துக்கு வீட்டை விற்று விடுங்கள். அதில் ரூ.19 லட்சம் கடனை அடைத்துவிடுங்கள். கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் கட்டியதுபோக மீதம் ரூ.10 லட்சம் இருக்கும். இதில் ரூ.3 லட்சத்தை உங்கள் மகளின் படிப்புக்கு ஒதுக்கிவிடுங்கள். மீதம் ரூ.7 லட்சத்தை முதலீடு செய்து வையுங்கள். சூழ்நிலை சீரானவுடன் வீடு வாங்க இதனை முன்பணத் தொகையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐந்தாவது வழி

உங்களுக்கும், உங்கள் இரு பார்ட்னர்களுக்கும் சேர்த்து சரிசமமான பங்கீடு அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். வொர்க்கிங் பார்ட்னர் என்ற அடிப்படையில் உங்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அவர்களிடம் வட்டியில்லாக் கடன் ரூ.19 லட்சம் வாங்கிக் கடனை அடையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பங்குதாரர் களிடம் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்துவிடலாம்.
இந்த ஐந்து வழிகளில் சுலபமாக அமையக்கூடிய ஏதாவது ஒரு வழியைத் தேர்வுசெய்து கடன் சிக்கலிலிருந்து மீண்டுவாருங்கள். ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் பாலிசியும், ரூ.75 லட்சத்துக்கு டேர்ம் பாலிசியும் வாங்கிக்கொள்ளுங்கள்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.!

Suresh Parthasarathy  (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்

This articel was posted on nanyam vikatan on (28/10/2018)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *