கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்!

ப்போதுமே எல்லா விஷயங்களுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. அதேசமயம், பட்ஜெட்டுக்குள் அந்த விஷயத்தைச் செய்துமுடிப்பதும் அவசியம். தேவையில்லாத ஆலோசனைகளைக் கேட்டோ, அதிக ஆசைப்பட்டோ அகலக்கால் வைக்கும்போது நிச்சயமாகக் கடன் சுழலில் சிக்க வேன்டிவரும். அப்படி அகலக்கால் வைத்துக் கடன் சிக்கலில் சிக்கிக்கொண்ட மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் தன் நிலையை விளக்கினார்…

“எனக்கு வயது 36. சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஐந்து ஆண்டுகள் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40,000 சம்பளத்துக்குப் பணியாற்றி வந்தேன். நான்கு ஆண்டுகளுக்குமுன் பிறகு நானும், என் இரண்டு நண்பர்களும் ஆளுக்கு ரூ.8 லட்சம் முதலீடு செய்து, கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருள்களை சப்ளை செய்யும் பிசினஸை நடத்திவந்தோம். பிசினஸில் வரும் லாபத்தை மூவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்வோம். என் மனைவி குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். 

இந்த நிலையில்தான் நான் சொந்த வீடு கட்ட ஆரம்பித்தேன். நான் வீடு கட்டுவதற்கான சிமென்ட், செங்கல், மணல், கம்பி உள்ளிட்ட பொருள்களை எங்கள் நிறுவனத்திலேயே எடுத்துக்கொண் டேன். சரியாகக் கணக்குவழக்கு களைக் குறித்து  வைத்துக்கொண்டே எடுத்துப் பயன்படுத்தினேன். சொந்தக் கடையில் பொருள்களை எடுத்துக்கொள்வதால், எனக்குக் கட்டுப்பாடு இல்லாமல் போனது. சிலரின் ஆலோசனைகளைக் கேட்டு வீட்டை பிளான் மாற்றி பெரிதாகக் கட்ட ஆரம்பித்தேன். ரூ.15 லட்சம் வரையிலான பொருள் களை என் கடையில் எடுத்துப் பயன்படுத்தியிருந்தேன். தவிர, பூர்வீகச் சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.15 லட்சத்தைக் கொண்டும், மனைவியின் நகை களை அடமானம் வைத்ததன் மூலமான ரூ.4 லட்சத்தைக் கொண்டும் வீட்டைக் கட்டி முடித்தேன்.

 

 

புது வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர் பொருள்கள் மற்றும் உள் அலங்காரப் பொருள்களை வாங்குவதற்காக ரூ.4 லட்சம் பர்சனல் லோன் வாங்கினேன். இந்த சமயத்தில்தான், எங்களுக்குள் எழுந்த சின்ன பிரச்னை பெரிதாகி நாங்கள் பிசினஸை பிரித்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. நபர் ஒருவருக்கு ரூ.18 லட்சம் என மதிப்பிடப்பட்டது. நான் வீடு கட்ட ரூ.15 லட்சத்துக்கான பொருள்களைப் பயன்படுத்தி யிருந்ததால், அதைக் கழித்துக் கொண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மட்டுமே எனக்குத் தருவதாகச் சொன்னார்கள். நான் பிசினஸை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ரூ.3 லட்சம் பணமாக வாங்கிக்கொண்டேன்.

அடுத்து, சொந்தமாக பிசினஸ் ஆரம்பிக்க ரூ.20 லட்சமாவது முதலீடு போட வேண்டும். அவ்வளவு பணத்தைக் கடனாக வாங்கித் தொழிலை ஆரம்பிக்க லாமா, மீண்டும் வேலைக்கே போகலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். வருமானம் நின்று போன நிலையில் கடன் தொகை ரூ.8 லட்சம் எனக்குச் சுமையாக அழுத்த ஆரம்பித்துவிட்டது.

ரூ.20 லட்சம் பட்ஜெட்டில் பிளான் போட்ட வீட்டை, ரூ.35 லட்சம் வரை செலவு செய்து விட்டதுதான் என் பிரச்னைக்குக் காரணம் என்பதை உணர முடிகிறது. வீட்டைப் பெரிதாகக் கட்டிவிட்டேன். ஆனால், அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

குடும்பச் செலவுகள், கடன் இ.எம்.ஐ எனச் சேர்த்து மாதம் ரூ.35 ஆயிரம் ஆகிறது. பிசினஸில் என் பங்குப் பணம் ரூ.3 லட்சத்தைக் கொண்டுதான் கடந்த இரண்டு மாதங்களைக் கடத்தி வருகிறேன். விரைவில் வருமானத்துக்கு வழி செய்ய வில்லையென்றால் குடும்பச் செலவுகளுக்கே கஷ்டப்பட வேண்டியிருக்கும். என்ன செய்தால் நான் மீண்டு வர முடியும்’’ என்று வருத்தத்துடன் கேட்டார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

 

 

“சொந்த வீடு கட்டுவதற்காக ஒரு பட்ஜெட்டைப் போட்டு, பிறகு கட்டுமான பொருள்களின் தேவையைச் சரியாகக் கணக்கிட முடியாமல் அதிக செலவு செய்வது என்பது சராசரி மனிதர்களின் இயல்புதான். ஆனால், கட்டுமானத் துறையிலி ருக்கும் நீங்கள் பட்ஜெட்டைத் தாண்டி செலவு செய்திருப்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.

சொந்தக் கடைதானே என இஷ்டத்துக்குப் பொருள்களை எடுத்துப் பயன்படுத்தியுளீர்கள். ஆனால், பங்கு பிரிக்கும்போதுதான் பிசினஸில் முதலீட்டில் பெரும் பகுதியை எடுத்து வீட்டைக் கட்டியுளீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்திருந்தால் பட்ஜெட்டுக்குள் வீட்டைக் கட்டி முடித்திருக்கலாம்.

சரி, இனி பிரச்னையிலிருந்து வெளிவரும் வழியைப் பார்ப்போம். நீங்கள் வேலைக்குப் போவதா, மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதா எனக் கேட்டால், அது உங்கள் மனநிலையைப் பொருத்தது. மீண்டும் வேலைக்குப் போகும் பட்சத்தில், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் உங்களால் ரூ.45-50 ஆயிரம் சம்பளம் வாங்க முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு வேலைக்குச் சென்று, சூழல் சரியான பிறகுகூட தொழிலை ஆரம்பிக்கலாம். ஆனால், இதுவரையான தொழில் அனுபவம் வீணாகப் போவதுடன், வாடிக்கையாளர்களின் தொடர்பும் விடுபட்டுப் போகக்கூடும்.

எனவே, திரும்பவும் பிசினஸை ஆரம்பிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கான வழி இருக்கிறது. உங்கள் வீட்டை அடமானமாக வைத்துக் கடன் வாங்குங்கள். ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடு என்பதால் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கலாம். 9.5% வட்டி என்றாலும் 10 ஆண்டு களுக்குள் திரும்பச் செலுத்தும் வகையில் ரூ.25,900 இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ரூ.8 லட்சம் கடனை அடைத்து விடுங்கள். மீதியுள்ள ரூ.12 லட்சத்தில் சிறிய அளவில் பிசினஸை ஆரம்பித்து, படிப்படியாக விரிவு படுத்திக் கொள்ளலாம். குடும்பச் செலவுகளைச் சிக்கனமாக ரூ.15,000-க்குள் செய்தால், மாதம் ரூ.41,000 இருந்தால் ஒரு மாதத்தைச் சமாளிக்க முடியும்.

உங்களிடம் இருக்கும் ரூ.2.30 லட்சத்தைக் கொண்டு இன்னும் 5-6 மாதங்களைச் சமாளிக்க முடியும். பிசினஸ் மூலம் கிடைக்கும் லாபத்தைச் சேர்த்து வைப்பதன்மூலம் அடுத்த ஆறு மாதங்களைச் சமாளிக்கலாம். இந்த ஓராண்டுக்குள் உங்களுக்கு இருக்கும் பிசினஸ் அனுபவத்தைக்கொண்டு சராசரியான வருமானத்தைப் பெறும் வகையில் பிசினஸை வளர்த்தெடுக்க முடியும். அடுத்துவரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் எனக் கணிக்கப் படுவதால், கட்டுமானத் துறையும் புதிய எழுச்சி பெறும் வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை நீங்கள் மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் செய்த தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் அந்தத் தவற்றை செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையான குழந்தையின் படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்யுங்கள். பிசினஸ் அவசர கால நிதியைக் கட்டாயமாக உருவாக்கிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பட்ஜெட்டைத் தாண்டினால் சிக்கல் நிச்சயம் என்பதை உணர்ந்து எச்சரிக்கை யாக இருந்தால் எப்போதும் பிரச்னை இருக்காது.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– ஓவியம்: ராஜேந்திரன்

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *