கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 2 – கடனில் மூழ்கவைத்த கம்பெனி!

சிலர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும்  சமாளிப்பார்கள். இன்னும் சிலர், சின்னதாக ஒரு தோல்வி வந்தால்கூட, உலகமே சூனியமாகிவிட்டது போலத் துவண்டுபோவார்கள். திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் இதில் எந்த வகை என அவர் பேசுவதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

“எனக்கு வயது 34. பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். 2015-ல் நான் வேலையை விட்டு நிற்கும்போது ரூ.56 ஆயிரம் சம்பளம் வாங்கி னேன். என் மனைவியும் பி.இ மெக்கானிக்கல் படித்தவர்தான். பணிக்குச் செல்லவில்லை.

என் பெரியப்பா மகன் எம்.இ படித்தவர். மலேசியாவில் பணியாற்றிவிட்டு, இங்கே வந்து சின்னதாக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அதில் நானும் பார்ட்னராகச் சேர்ந்தேன். என் பங்காக ரூ.30 லட்சம் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. பி.எஃப் பணம் ரூ.12 லட்சம், நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம், வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் எனப் புரட்டிக் கொடுத்தேன்.

திருச்சி புறநகர் பகுதியில் கம்பெனியைத் திறந்தோம். பெரிய பெரிய கம்பெனிகளில் ஜாப் ஒர்க் எடுத்துச் செய்தோம். ஆரம்பத்தில் கம்பெனி நன்றாகவே போனது. திடீரென எங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுத்த கம்பெனிகளில் சில சொந்தமாக யூனிட் போட்டுவிட்டதாகச் சொல்லிவிட்டன. இதனால் எங்கள் பாடு திண்டாட்டமானது. என் சேமிப்பில் இருந்த ரூ.4 லட்சத்தைக் கொண்டுதான் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வருகிறேன்.

என் மகன் 4-ம் வகுப்பு படிக்கிறான். குடும்பத்தை நடத்த நாம் படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு, என் மனைவி வேலைக்குப் போவதாகச் சொல்கிறாள். ‘நான் வேலைக்குப் போனால் ரூ.35 ஆயிரம் கிடைக்கும்; வீட்டுச் செலவைச் சமாளிக்கலாம்’ என்கிறாள். நான் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறேன்.

வீட்டு அடமானக் கடன் இன்னும் ரூ.13 லட்சம் செலுத்த வேண்டும். கடந்த ஒரு வருடமாக கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளேன். செய்துமுடித்த ஆர்டர் களுக்கும் இன்னும் பணம் வராமல் ரூ.4 லட்சம் நிலுவையில் உள்ளது. அந்தப் பணம் வந்தால், வெளியிலிருந்து கடனாக நான் வாங்கித் தந்த  ரூ.10 லட்சத்தில் ஒருபகுதியை அடைக்க முடியும்.

நிலைமையைச் சமாளிக்க கம்பெனியை விற்கப் போனால், வெறும் ரூ.40 லட்சத்துக்குக் கேட்கிறார்கள். விற்றுத் தொலைத்துவிட்டு என் பங்கு ரூ.20 லட்சத்தில் கடனை அடைத்துவிடலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், என் பெரியப்பா மகனோ, கம்பெனியை அடிமாட்டு விலைக்கு விறகத் தயாரில்லை என்று அடம்பிடிக்கிறார்.  அவருக்கு வசதிவாய்ப்பு இருப்பதால், குடும்பச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே, பொறுமையாக இருக்கிறார்.

எனக்குக் குடும்பச் செலவுகள் மாதம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. இதுபோக, என் மகனின் மேற்படிப்பு, என் ஓய்வுக்காலம் எல்லாமே இருண்டு கிடைக்கிறது. என் நண்பன் ஒருவன் சிங்கப்பூரில் இருக்கிறான். அவன்மூலமாக சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல ஒரு வாய்ப்பும் வருகிறது. அப்படிப் போனால் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். மூன்று வருடம் இருந்தால், கடனை அடைத்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், எந்தத் தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை. எனக்கு நல்லதொரு தீர்வைச் சொல்லுங்கள்” என கொஞ்சம் விரக்தியுடனே பேசி முடித்தார் சந்திரசேகர்.

இனி, இவருக்கான கடன் சிக்கலுக்குத் தீர்வுகளைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“சிலர் எதற்கெடுத்தாலும் சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடு வார்கள். சின்ன இழப்பைக்கூட தாங்க முடியாமல் தவிப்பார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர்தான் நீங்கள். என்னைப் பொறுத்தவரை, உங்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையுமே இல்லை. 34 வயதில் இதற்கெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை.

உங்களுக்குத் நிர்வாக அனுபவம் போதிய அளவு இல்லை என்பது தான் உங்கள் மனச் சிக்கலுக்கும், பணச் சிக்கலுக்கும் காரணம்.  பொதுவாக, பிசினஸ் ஆரம்பிக்கும்முன் தெளிவான திட்டத்தை  அமைத்துக்கொள்வது அவசியம். நீங்கள் தொடங்கும் பிசினஸில்  சாதகம் மற்றும் பாதகம் ஆகிய இரண்டையுமே நீங்கள் ஆராய வேண்டும். பாதகமான விஷயங்களை எப்படி சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதற்கான தீர்வுகளை பிசினஸ் தொடங்கும் முன்பே கண்டறிந்திருந்தால், உங்களுக்குப் பெரிய  சிக்கல் ஏதும் வந்திருக்காது.

உங்கள் அடமானக் கடன் ரூ.13 லட்சம், நகைக் கடன் ரூ.3 லட்சம், வெளிக்கடன் ரூ.10 லட்சம் என மொத்தமே ரூ.26 லட்சம்தான் உங்களுக்குக் கடன் இருக்கிறது. உங்கள் கம் பெனியை நஷ்டத்துக்கு விற்றாலும் ரூ.20 லட்சம் கிடைக்கும். நிலுவைத் தொகை ரூ.4 லட்சம் உள்ளது. இதுபோக இன்னும் ரூ.2 லட்சம் மட்டுமே உங்களுக்குக் கடன் இருக்கிறது. பிசினஸ் செய்கிறவர்கள் இதையெல்லாம் பார்த்து அஞ்சத் தேவையில்லை.

கம்பெனியை ஆரம்பிக்கும்போது எடுத்த ஆர்டர்களை வைத்து மட்டுமே பிசினஸ் செய் திருக்கிறீர்கள். புதிய கம்பெனிகளைத் தொடர்ச்சி யாக அணுகி ஆர்டர் பெற்றிருந்தால், ஒன்றிரண்டு ஆர்டர்கள் கைவிட்டுப் போனாலும் கவலைப் படாமல் பிசினஸ் செய்திருக்க முடியும்.

இப்போதுகூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. உங்கள் பிசினஸை மீட்டெடுத்து அதை இன்னும் சிறப்பாக நடத்த உங்களால் முடியும். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் புதிய முயற்சி களைச் செய்யுங்கள். இல்லையென்றால், பின்வரும் யோசனைகளைப் பின்பற்றுங்கள்.

முதலில், உங்கள் வீட்டுச் செலவுகளுக்கான தொகைக்கான வழியைப் பார்ப்போம். நீங்கள்  இன்னும் ரூ.2 லட்சத்தை அடமானக் கடனாக  வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் பெரியப்பா மகனிடம் சூழ்நிலையை விளக்கிச் சொல்லி மாதம் ரூ.30 ஆயிரம் கேளுங்கள். கம்பெனி விற்றவுடன் உங்களுக்குத் தந்த பணத்தைக் கழித்துக்கொள்ளச் சொல்லுங்கள். அவர் இப்போதும் வசதியாக இருப்பதால், உங்கள் கோரிக்கையை  நிச்சயம்  ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. கம்பெனியை விற்றுக் கடனை அடைக்கும்வரை இது தற்காலிகமான தீர்வாகவே இருக்கும்.

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்குப்போகும் பட்சத்தில் செலவுகள்போக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வரை மிச்சமாகும். மிச்சமாகும் இந்தத் தொகையை அப்படியே அவசரகால நிதியாக இரண்டு ஆண்டுகளுக்குச் சேர்த்துவரவும்.       2020-ல் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய ஆரம்பித்தால்கூட ஆறு ஆண்டுகளில் 11% வருமானம் என்றாலும் ரூ.15 லட்சம் சேர்க்க முடியும். உங்கள் மகனின் மேற்படிப்புக்கு இது உதவும்.

2020-ல் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால்கூட உங்கள் ஓய்வுக்காலத்தில் 1.2 கோடி கார்ப்பஸ் தொகை சேர்க்கலாம். உங்கள் மகன் மேற்படிப்புக்கு சேர்த்துவரும் ரூ.15 ஆயிரத்தை, ஆறு வருடங் களுக்குப்பிறகு தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.89 லட்சம் கிடைக்கும். வருமானம் உயரும்போது இன்னும் கொஞ்சம் முதலீட்டை உயர்த்திக்கொண்டால் நிச்சயம் ரூ.3 கோடிக்கு மேலாக கார்ப்பஸ் தொகையைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

உங்கள் குழந்தை வளர்ந்தபிறகு உங்கள் மனைவி வேலைக்குப் போகும் சூழல் வந்தால் இன்னும் பல புதிய இலக்குகளுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகக்கூடும். எனவே, எந்தப் பிரச்னையும் இல்லாத நீங்கள், கவலைப்படுவதை விட்டுவிட்டு கம்பெனியை மேம்படுத்துவதா, அல்லது வேலைக்குப் போவதா என்கிற முடிவை எடுங்கள்’’ என்று முடித்தார் அவர்.  நீங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள் சந்திரசேகர்..?

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

This article was posted in last sunday NANAYAM VIKATAN.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *