கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்!

சுலபமாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைப்படுகிறதோ, இல்லையோ இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளுவார்கள் சிலர். அப்படி நிறையக் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர்தான் சண்முகம். அவர் தன் நிலையை விளக்குகிறார்…

“என் வயது 41, திருவள்ளூரில் வசிக்கிறேன். தனியார் பார்மா நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளம் ரூ.72,000. என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார்.

எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் 9-ம் வகுப்பும், இளையவன் 3-ம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஆகிறது. கிரெடிட் கார்டு மூலம் வீட்டுக்குத் தேவையான பொருள்களை பர்ச்சேஸ் செய்தது, பள்ளிக் கட்டணம் செலுத்தியது, அவ்வப்போது வெவ்வேறு செலவுகளுக்குக் கடன் வாங்கியது என்ற வகையில் ரூ.13 லட்சத்துக்கு மேல் கடன் ஆகிவிட்டது.

என் கம்பெனி மூலம் எப்போதாவது ஃபாரின் டூர் அழைத்துப் போவார்கள். அப்போது என் குடும்பத்தையும் அழைத்துப் போவதுண்டு. எனக்கு மட்டும்தான் கம்பெனி செலவு செய்யும். என் குடும்பத்தினருக்கு நான் செலவு செய்த வகையிலும் கடன் அதிகமாகிவிட்டது.

 

 

கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்திவரும் நிலையில், என் உறவினர்கள் சிலர், ‘இன்னும் வீடு வாங்காமல் இருக்கிறாயே… இத்தனை வயதாகிவிட்டது. சீக்கிரம் வாங்கிவிடு’ எனச் சொல்கிறார்கள். என் மாமனார் இப்போது வீடு வாங்குவதுதான் நல்லது என ஆலோசனை சொல்கிறார்.

எனக்கு பி.எஃப் ரூ.3,800 பிடிக்கிறார்கள். அதே அளவுக்கு வி.பி.எஃப் செலுத்தியும் வருகிறேன். இதுவரை என் கணக்கில் ரூ.5 லட்சம் உள்ளது. பி.எஃப் பணத்தை எடுத்து கடனை அடைக்கலாமா, இரண்டு பர்சனல் லோனை இணைப்பதன்மூலம் இ.எம்.ஐ கட்டுவதைக் குறைக்கலாமா, சொந்த வீடு வாங்கும் யோசனை இருப்பதால் ரூ.35 லட்சத்துக்கு வீடு வாங்கினால், முன்பணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாமா என்பது போன்ற பல யோசனைகள் மனதில் ஓடுகிறது. என்ன செய்தால் சரியாக இருக்கும்?

என் கம்பெனி எனக்கு 100 ஷேர் கொடுத்துள்ளது. ஒரு ஷேரின் தற்போதைய விலை ரூ.850. அதை விற்பது சரியா? எனக்கு அவ்வப்போது இன்சென்டிவ் கிடைக்கும். ஆணடுக்கு 15% அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும்.

என் மைத்துனரிடம் வாங்கிய கடனைத் திரும்பத் தரும்படி  கேட்கிறார். அவருக்கு வட்டி தருவதில்லை. வட்டியாவது தர வேண்டிய சூழலில் இருக்கிறேன்” என்றவர், தன்னுடைய வரவு செலவு, கடன் விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்

மாதச் சம்பளம்: ரூ.72,000

அம்மாவின் பென்ஷன்: ரூ.5,000

குடும்பச் செலவு: ரூ.40,000

கடன் இ.எம்.ஐ: ரூ.26,000

தனியார் நிறுவனக் கடன் வட்டி: ரூ.2,000

நகைக் கடன் வட்டி: 1,000 (ஆண்டுக்கு 12,000)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.8,000

கடன் விவரங்கள்

பர்சனல் லோன் 1: இ.எம்.ஐ ரூ.13,958 (கட்ட வேண்டிய தொகை ரூ.4.26 லட்சம். 4.1.2022-ல் முடியும்)

பர்சனல் லோன் 2: இ.எம்.ஐ ரூ.11,965 (கட்ட வேண்டிய தொகை ரூ.1.64 லட்சம். 4.2.2020-ல் முடியும்)

தனியார் நிதி நிறுவனக் கடன்: ரூ.1.62 லட்சம் (வட்டி மட்டும் ரூ.2,000 செலுத்தி வருகிறேன்)

மைத்துனரிடம் வாங்கிய    கடன் : ரூ.4.5 லட்சம்

நகைக் கடன்: ரூ.2 லட்சம்

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

 

 

“பலரும் செய்யும் தவற்றைத் தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். கடன் வாங்கக்கூடிய வாய்ப்பு கைமேல் இருக்கிறது என்பதற்காக இஷ்டத்துக்குக் கடனை வாங்கிக் குவிப்பது தவறு என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. தேவைக்காகக் கடன் வாங்கு வதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்துக்காகக் கடனை வாங்குவது தவறு. நீங்கள் தேவைக்கு வாங்கினீர்களா, ஆடம்பரத்துக்கு வாங்கினீர்களா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

மாதச் சம்பளத்தில் ரூ.28,000 வரை கடன் இ.எம்.ஐ, வட்டிக்குப் போய்க்கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் வீடு வாங்கும் ஆசையில் கடனை வாங்கினால் மேலும் சிக்கலில் கொண்டு போய்தான் விடும்.
சொந்த வீடு வாங்கிவிட்டேன் எனச் சொந்தக்காரர்கள் மத்தியில் பெருமைப்படலாம். ஆனால், கடன் சுமையில் அன்றாடச் செலவுகளுக்கே பணமில்லாமல் திண்டாடும் போது நிம்மதி போய்விடும். எனவே, கெளரவத்துக்காக வீடு வாங்க வேண்டாம்.

முதலில் தற்போது இருக்கும் கடனைக் கட்டி முடியுங்கள். அடுத்த மூன்று வருடங்களில் உங்களுக்கு இருக்கும் கடனைக் கட்டி முடிக்க எல்லாவித முயற்சிகளையும் எடுங்கள். இரண்டு பர்சனல் லோன் மற்றும் மைத்துனரிடம் வாங்கிய கடன் மொத்தம் ரூ.10.40 லட்சம் வருகிறது. நான்கு ஆண்டுகளில் செலுத்திமுடிக்கும் வகையில் 14% வட்டியில் ரூ.10.40 லட்சம் கடன் பெற்று இந்த மூன்று கடன்களையும் செலுத்தி முடியுங்கள். இதற்கான இ.எம்.ஐ ரூ.28,500 செலுத்த வேண்டி யிருக்கும். ஒரே கடனாக மாற்றிக் கொள்வதால் குழப்பம் இருக்காது.

இன்சென்டிவ், போனஸ் எனக் கூடுதலாக கிடைக்கும் எல்லாப் பணத்தையும் கொண்டு தனியார் நிறுவனக் கடனைக் கட்டி முடியுங்கள்.

நகைக் கடன் இப்போதைக்கு இருக்கட்டும். சூழல் மாறியவுடன் அடைத்துக்கொள்ளலாம். வட்டி மட்டும் செலுத்திவரவும்.

உங்கள் மூத்த மகனுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்ப தால், உங்களிடம் உள்ள 100 பங்குகளை விற்காமல் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டு உள்ள பங்கின் விலை மூன்றாண்டு களுக்குமுன் ரூ.2,400 என்ற விலையில் இருந்தது. தற்போது சந்தை சரிவினால் ரூ.850-க்கு வந்துவிட்டது. அடுத்த மூன்றாண்டுகளில் நல்ல விலைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அந்தப் பங்குகளை உங்கள் மகனை கல்லூரியில் சேர்க்கும்போது விற்றுக் கொள்ளலாம். அடுத்த நான்கு ஆண்டுகளில் பர்சனல் லோன் முடிந்துவிடும் என்பதால், அதற்குச் செலுத்தும் இ.எம்.ஐ தொகையைச் சேர்த்து வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளின் படிப்புச் செலவைச் சமாளிக்க முடியும். தற்போது மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் முதலீட்டைத் தொடரவும். உங்கள் இளைய மகன் மேற்படிப்புக்கு அது கைகொடுக்கும்.

உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என லிக்விட் ஃபண்ட் அல்லது ஆர்.டி மூலம் பணத்தைச் சேர்த்து வந்தால், அதற்கான கடனைத் தவிர்க்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், பி.எஃப் தொகை என்பது உங்களின் ஓய்வுக்காலத்துக்கானது. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் எடுத்துச் செலவு செய்யாமல் இருப்பதே நல்லது.

ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கும்போது, அதைக் கட்டி முடிக்கும் காலகெடுவை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் மைத்துனரிடம் வாங்கிய கடனை எப்போது செலுத்தி முடிக்கவேண்டும் எனக் காலக்கெடுவை நிர்ணயம் செய்யாததால்தான், அவர் நெருக்கடி தரும்போது அதைப் பற்றி யோசிக்கிறீர்கள். உங்களிடம் சரியான நிதி நிர்வாகத் திட்டமிடல் இல்லை என்பதுதான் எல்லாச் சிக்கலுக்கும் காரணம்.

அகலக்கால் வைப்பதும், ஆடம்பரத்துக்கு ஆசைப்படுவதும் நிம்மதியைப் பறித்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாகச் செயல்படுங்கள். எப்போதுமே சரியான பிளானிங் இருந்தால்தான், சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கடன்பட்டு நமது வசதிகளைப் பெருக்கிக்கொள்வதைவிட, கடன்படாமல் நிம்மதியாக வாழ்வது நல்லது என்பதைப் புரிந்துகொண்டு இனி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்!”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்

This article was posted on Last sunday nanayam vikatan-(11/11/2018)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *