கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 21 – குறையும் சம்பளம்… கடன் வாங்காமல் தப்புவது எப்படி?

குழப்பமான தருணங்களில் சரியான ஆலோசனையைப் பெறாததால், கடன் சிக்கலில் சிக்கியவர்கள் ஏராளம். சரியான நேரத்தில் ஆலோசனை பெற்றுச் செயல்படும்போது கடன் சுழலில் சிக்காமல் பலரும் தப்பி விடுகிறார்கள். அந்த வகையில் சரியான நேரத்தில் ஆலோசனைக்கு வந்ததன் மூலம் நிதிச் சிக்கல் வராமல் எப்படிச் சமாளிக்க முடியும் என்ற ஆலோசனைகளைப் பெற்றுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த பரிமளா. அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்…

“எனக்கு வயது 26. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் குஜராத்தில் டெக்ஸ்டைல் தொடர்பான நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. என் குழந்தை மற்றும் மாமியாருடன் நான் திருப்பூரில் வசித்து வருகிறேன்.

இப்போது, என் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கே வேலைக்கு வந்துவிட லாம் என்று யோசித்து வருகிறார். ஆனால், சொந்த ஊரில் வேலை பார்த்தால், போதுமான வரு மானம் கிடைக்காது என்பதால், இங்கு வர மறுக்கிறார்.  அவர் இங்கு வந்து வேலை செய் தால், ரூ.25,000-தான் கிடைக்கும்.

 

 

 

என் கணவர் 2013-ல் வீட்டுக் கடன் ரூ.15 லட்சம், கையில் இருந்த சேமிப்புப் பணம் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு வீடு கட்டியுள்ளார். வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.15,500 செலுத்தி வருகிறோம். என் கணவர் இப் போதைக்கு இங்கு வந்தால் வீட்டுக் கடனுக்கே பெரும்பகுதி சம்பளம் போய்விடும் என்பதால், கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்.

நான் முதுகலை ஆங்கிலம் படித்தவள். நான் பள்ளியில் ஆசிரியராகப் போனால்கூட குறைந்தது ரூ.30,000 சம்பளம் கிடைக்கும். ஆனால்,  நான்கு மாத குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் இப்போது ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வேலைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

என் கணவர் 2007 முதல் குஜராத்தில் வேலை பார்த்து வருவதால், பி.எஃப் தொகை ரூ.6 லட்சம் இருக்கக்கூடும். தற்போது பி.எஃப் மொத்தம் மாதம் ரூ.6,000 பிடிக்கிறார்கள். வேறு சொத்து எதுவுமில்லை.

கடன் சிக்கலில் சிக்காமல், என் கணவர் சொந்த ஊரில் வேலை பார்க்க வழி சொன்னால் நன்றாக இருக்கும்’’ என்றவர், தன் வரவு செலவு விவரங்களை நமக்கு அனுப்பிவைத்தார்.

வரவு செலவு விவரங்கள் 

சம்பளம்        : ரூ.53,000

குடும்பச் செலவு    : ரூ.15,000

கணவரின் செலவு    : ரூ.8,000

வீட்டு இ.எம்.ஐ    : ரூ.15,000

தபால் ஆர்.டி    : ரூ.2,000

ஏலச்சீட்டு    : ரூ.5,000

காப்பீடு பிரீமியம்    : ரூ.5,000

மொத்தம்        : ரூ.50,000

மீதி        : ரூ.3,000

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலிடே ஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

 

 

 

“ஆரம்பத்திலேயே ஆலோசனைக்கு வந்ததற்கு உங்களைப் பாராட்டலாம்.  கொஞ்சம் நிதானமாக அணுகினால், நீங்கள் கடன் சிக்கலில் சிக்காமல் நிலைமையை எளிதாகச் சமா ளிக்க முடியும்.  உங்கள் கணவ ரின் உடல்நிலை தான் முக்கியம் என்பதால், சொந்த ஊரில் வேலை பார்க்கும் முடிவை நீங்கள் எடுப்பதே சரியாக இருக்கும்.

மாத சம்பளம் ரூ.25,000 மட்டுமே கிடைக்கும் என்றாலும், நீங்கள் வேலைக்குப் போகும் வரையோ, அதிக சம்பளத்துக்கு உங்கள் கணவருக்கு வேலை அமையும் வரையோ இங்கே சொல்லப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றி நிதிச் சிக்கலை எதிர் கொள்ளலாம். குடும்பச் செலவுகள், வீட்டுக் கடன் இ.எம்.ஐ என இரண்டும் தற்போதைக்கு மிக முக்கியமான செலவுகள். குழந்தையின் எதிர் காலத்துக்கான முதலீட்டை சூழல் சரியான பிறகு ஆரம்பித்துக் கொள்ளலாம்.

ஆர்.டி-யைத் தற்போதைக்கு நிறுத்திவிடவும். ஏலச் சீட்டு முடிந்ததும் அதில் கிடைக்கும் தொகையை அவசரகால நிதியாக வைத்துக்கொள்ளவும். இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூன்றாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் பெய்ட்அப் பாலிசியாக மாற்றிக்கொள்ளவும்.  இந்தச் செலவு களைத் தவிர்க்கும் நிலையில், குடும்பச் செலவுகள் மற்றும் வீட்டுக் கடன் இ.எம்.ஐ மட்டுமே முக்கிய செலவுகளாக இருக்கும். உங்கள் கணவரின் சம்பளம் ரூ.25,000 எனில், குடும்பச் செலவுகள் 15,000, இ.எம்.ஐ 10,000 எனப் பிரித்துக் கொள்ளவும். உங்கள் வீட்டுக் கடனை 25 ஆண்டு காலமாக மாற்றிக்கொண்டால் இ.எம்.ஐ ரூ.11,750 வரும். ரூ.1,750 பற்றாக்குறை வரக்கூடும்.

உங்கள் கணவர் வேலையை விட்டு வரும் நிலையில், ரூ.6 லட்சம் பி.எஃப் தொகையை எடுத்துக் கொள்ளவும். பி.எஃப். கணக்கினைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அதற்கு வரி எதையும் செலுத்த வேண்டியதில்லை. அந்தத் தொகையில் ரூ.25,000 மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு, ரூ.5.75 லட்சத்தை AAA ரேட்டட் பாண்டில் முதலீடு செய்தால் 9.6% வரை வட்டி கிடைக்கக்கூடும். வரி போக ரூ.50,000 வட்டி உங்களுக்குக் கிடைக்கும். முதல் வருடத்தில் நீங்கள் எடுத்துவைத்துள்ள 25,000 ரூபாயைக் கொண்டு சமாளிக்கவும். அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி வருமானம் 50,000 ரூபாயைக் கொண்டு பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வேலைக்குச் சென்று ரூ.30,000 சம்பளம் வாங்கும் நிலையில், வட்டி வருமானம் 50,000 ரூபாயை அப்படியே உங்கள் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்துவரவும். இதன்மூலம் அடுத்த 25 ஆண்டுகளில் 12% அடிப்படையில் ரூ.67 லட்சம் கிடைக்கக்கூடும். இதுபோக மாதம் ரூ.8,000 முதலீடு செய்துவந்தால், 25 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி கிடைக்க வாய்ப்புண்டு. மொத்தம் ரூ.2.17 கோடி கிடைக்கும்பட்சத்தில், ஓய்வுக்காலத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. குழந்தையின் எதிர்காலத்துக்காக மாதம் ரூ.5,000 முதலீடு செய்துவந்தால், 15 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கிடைக்கக்கூடும். சொந்த ஊருக்கு வந்த ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளவும்.

சம்பளம் குறைந்தவுடன் கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டியிருக்கும் என்ற மேலோட்டமான சிந்தனைதான் உங்கள் பயத்துக்குக் காரணம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அகலக்கால் வைக்காதீர்கள். அப்படி வைத்தால், கடனில் சிக்கவேண்டியதிருக்கும். ஜாக்கிரதை.’’

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

ஓவியம்: ராஜேந்திரன்

this article was posted in Nanayam vikatan on 18/11/2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *