கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 22 – கடன்… கவனி… வாங்கு!

வ்வளவுதான் சம்பாதித்தா லும், நம் நிம்மதியை நிலைகுலையச் செய்துவிடு கிறது நாம் வாங்கிய கடன். வாழ்க்கையில் நாம் இன்றிருக்கும் நிலையிலிருந்து நம்மை உயர்த்த உதவும் திட்டத்துக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. ஃபிரிட்ஜ் வாங்கக் கடன், ஏ.சி வாங்கக் கடன், டூவீலர் கடன் என எடுத்ததெற்கெல்லாம்  நாம் கடன் வாங்கினால், அதிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மோசமான நிலையை எட்டிவிடும். கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங் களை நிதி ஆலோசகரும், மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி சொல்கிறார்…

1. இந்தக் கடன் தேவையா?

எந்தவொரு கடனை வாங்கும்முன், அந்தக் கடனை ஏன் வாங்க வேண்டும், அதனால் நமக்கு என்ன லாபம், இந்தக் கடன் வாங்குவதால் மாதாந்திர பட்ஜெட்டில் பாதிப்பு உருவாகுமா  என்கிற ரீதியில் யோசித்து முடிவெடுத்தால்,  தேவையில்லாத கடனைத் தவிர்க்கலாம்.

2. எதிர்கால வருமானம் நிச்சயமல்ல

சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர், அடுத்த மூன்று வருடங்களில் பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்ற கணிப்பில், தகுதிக்கு மீறி கடனை வாங்கி வீட்டைக் கட்டிவிட்டார். பிறகு எதிர்பாராத சூழலில் அவருக்கு வேலை இழப்பு ஏற்படவே, இ.எம்.ஐ செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். இவரைப்போல எதிர்கால வருமானத்தை நம்பி கடனை வாங்காதீர்கள்.

 

 

 

3 லாங்க் டேர்மா, ஷார்ட் டேர்மா?

உங்களால் குறுகிய காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே ஷார்ட் டேர்ம் லோன் வாங்குங்கள். திரும்பச் செலுத்தும் சூழல் சிக்கலாக இருக்கும்பட்சத்தில், நீண்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் வாங்குவது நல்லது.

4. முதல் செலவு, கடனை அடைப்பது

மாதாந்திரச் செலவுக்கான பட்டியலில் கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதைப் பலரும் கடைசியாக வைத் திருப்பார்கள். சில நேரங்களில் அவசரச் செலவு வந்துவிடுகிற போது கடனைச் செலுத்த முடியாமல் போகக்கூடும். தொடர்ச்சியாக இப்படி நடக்கும்போது சிபில் ஸ்கோர் குறைந்துபோய், பிறகு அவசரச் சூழ்நிலைகளில் கடன் வாங்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கடன் தொகையைச் செலுத்துவதுதான் எப்போதும் நமது முதல் செலவாக இருக்கவேண்டும் என்கிற பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

5. ஆடம்பரமா, அவசியமா?

அவசியத்துக்குக் கடன் வாங்குவது தவறில்லை. ஆடம்பரத்துக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய பேருக்கு எது அவசியம், எது ஆடம்பரம் எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாததுதான் பிரச்னையே. இதற்கு ஓர் எளிய வழி உள்ளது. நீங்கள் ஒரு பொருளைக் கடனில் வாங்க நினைக்கிறீர்கள். உடனே, கடனில் அந்தப் பொருளை  வாங்காமல், சில நாள்கள் இருந்து பாருங்கள். அப்படிச் செய்வதால், உங்களுக்குப் பெரிய மனவருத்தம் இல்லை இல்லை என்றால், அந்தப் பொருள் உங்களுக்கு அவசிய மில்லை என்று அர்த்தம். அதுவே, வீட்டில் ஃபேன் இல்லாமல், கொசுக்கடியில் தூக்கத்தை இழந்தால், அது அவசியமான செலவு. எனவே, எது அவசியம், எது அவசியமில்லை என்று பார்த்துக் கடன் வாங்குங்கள்!

6. கடன் வாங்கி முதலீடு

சமீபத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர், பர்சனல் லோன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். சந்தை இறக்கத்தில் அவருடைய முதலீடு பெரிய அளவில் நஷ்டத்தில் இருக்கவே பதறிக்கொண்டு என்னைச் சந்தித்தார். 16% வட்டிக்குக் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்தது தவறு என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.

7. வட்டிவிகிதத்தைப் பாருங்கள்!

பணத்தேவை ஏற்படுகிறபோது நிறையப் பேர் பதற்றமாகி, கடன் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்களே தவிர, வட்டி எவ்வளவு என்று பார்ப்பதில்லை.  மோகன் ராஜ் என்பவர், 22% வட்டியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிவிட்டு, இப்போது கட்ட முடியாமல் தவிக்கிறார். அவரிடம் 25 பவுன் நகை இருக்கிறது. மிகக் குறைந்த வட்டியில் நகைக் கடன் கிடைக்கிற போது, ஏன் அவர் 22% வட்டியில் கடன் வாங்க வேண்டும்? எப்போதுமே கடன் வாங்கும்போது குறைந்த வட்டியில் கடன் வாங்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன எனப் பார்க்க வேண்டியது அவசியம்.

 

8. விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

கடன் வாங்குபவர்களில் 95% பேர், கடன் தரும் நிறுவனத்தினர் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிடுகிறார் களே தவிர, விதிமுறைகளைப் படிப்ப தில்லை. கடனை முன்கூட்டியே செலுத்தும் போது அபராதம் உண்டா, ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, கடனுக்கான வட்டி விகிதத்தைக் கடன் வழங்கும் நிறுவனம் குறைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

9. நிறைய நிறுவனம்… நிறையக் கடன்

சேலம் தொழில் அதிபர் ஒருவர் வாங்கிய கடன் விவரங்களைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். 11 வங்கிகளிலும், 8 நிதி நிறுவனங் களிலும் ரூ.2 கோடி அளவுக்குக் கடனை வாங்கித் தள்ளியிருக்கிறார். எந்தக் கடனுக்கு எவ்வளவு இ.எம்.ஐ, எப்போது செலுத்த வேண்டும் என்பதில் ஏகப்பட்ட குழப்பம். கடனை நிர்வகிப்பதிலேயே கவனம் மொத்தமும் போக, பிசினஸில் கோட்டை விட்டுவிட்டார். எப்போதுமே நிறைய நிறுவனங்களில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

10. முக்கிய இலக்குகள் முதலில்

சிலர் பெரிய அளவில் சம்பளம் வாங்கு கிறோமே என நினைத்து, தகுதிக்கு மீறிக் கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிடுவார்கள். அதிக விலையில் காரை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருள்களை இ.எம்.ஐ-யில் வாங்கிக் குவித்துவிடுவார்கள். ஆனால், அவர்களின் குழந்தைகள் படிப்பு, திருமணம், தங்களின் ஓய்வுக்காலம் போன்ற முக்கிய இலக்குகளுக்கெல்லாம் முதலீட்டை ஆரம்பித்தே இருக்கமாட்டார்கள்.
முக்கிய இலக்குகளுக்கு போதுமான முதலீட்டுத் தொகையை ஒதுக்கிய பிறகுதான், மற்ற தேவைகளுக்குக் கடன் வாங்க வேண்டும்.

– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்

 

This article was posted in Nayam vikatan on -25/11/2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *