கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா

டன் வாங்கும்முன், அந்தக் கடனை வாங்குவதால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன, அந்தக் கடனை நம்மால் சரியாகத் திரும்பச் செலுத்த முடியுமா, அதற்கான வருமானம் நமக்குள்ளதா என்றெல்லாம் நம்மில் பலரும் யோசிப்பதில்லை. அவசரத் தேவைக்குக் கடன்  வாங்கும்போது, இதுமாதிரியெல்லாம் ஆழமாக யோசிக்க முடியாது. ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கும்போது, அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம். அப்படி யோசிக்காமல் வாங்கிய கடனால், இன்றைக்கு சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி. மிகவும் வருத்தத்துடன் நமக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

 

 

“என் வயது 51. சொந்த ஊர் பெரம்பலூருக்கு அருகே உள்ள கிராமம். பெரம்பலூரை ஒட்டி சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்குமுன் நவீன ஹோட்டல்கள் சில என் கடைக்கு அருகில் வரத் தொடங்கின. ஆனாலும், எனக்கு ஆகக்கூடிய வியாபாரம் பெரிய அளவில் குறையவில்லை. செலவுகள் போக மாதம் ரூ.40,000 வருமானமாகக் கிடைத்தது.

என் நண்பர்களில் சிலர், ‘ஹோட்டல் கொஞ்சம் பளிச்சென்று மாடர்னாக இருந்தால்தான் நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். இல்லையென்றால் புது ஹோட்டல்களுக்குப் போய்விடுவார்கள்’ என்றார்கள். அவர்கள் சொன்ன யோசனை எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது. உடனே என் வீட்டிலிருந்த நகைகளை ரூ.4 லட்சத்துக்கு அடமானம் வைத்தும், வெளியில் ரூ.8 லட்சம் வாங்கியும் என் ஹோட்டலை நவீனப்படுத்தினேன்.

ஹோட்டலை மாடர்னாக மாற்றியபின், உணவுப் பொருள்களின் விலையையும் அதிகப்படுத்தினேன். ஆனால், இரண்டு, மூன்று மாதங்களில் என் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ‘மற்ற கடைகளைவிட விலை குறைவு, சுவை பரவாயில்லை என்பதுதான் உன் தனித்துவமாக இருந்தது; இப்போது புதிதாக வந்த ஹோட்டல்களுக்கும் உன் ஹோட்டலுக்கும் எந்த வித்தி யாசமும் இல்லாமல் போய் விட்டது. இனி எப்படி மக்கள் உங்கள் ஹோட்டலைத் தேடி வருவார்கள்?’’ என்று என் நண்பர் சொன்னபோதுதான் நான் செய்த தவறு எனக்குத் தெரிந்தது.

மறுபடியும் பழைய விலைக்கே மாற்றினேன். ஆனாலும், நிறைய வாடிக்கையாளர்கள் என்னைத் தேடி வரவில்லை. நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை தடுமாற ஆரம்பித்தது. கடன் சுமை அழுத்துகிறது. மாதம் ரூ.15,000-க்கு மேல் வட்டி மட்டும் கட்டி வருகிறேன்.

என் மகனை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்தேன். இந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டான். அவனை சிங்கப்பூருக்குப் பணிக்கு அனுப்பு வதற்காக ரூ.2 லட்சம் வரை சேர்த்து வைத்திருந்தேன். நான் வெளியில் கடன் வாங்கியவர்களில் ஒருவர் அசலைக் கேட்டு நெருக்கடி தரவே, அந்த ரூ.2 லட்சத்தை எடுத்துத் தந்துவிட்டேன்.  இப்போது அவனை வெளி நாட்டுக்கு அனுப்ப இயலாத நிலையில், அவன் விரக்தியாக உள்ளான். சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் கிடைத்த பணிக்கும் போக மறுத்துவிட்டான்.

தற்போது என் மகளின் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்த தொகை ரூ.4 லட்சம் பேங்க் எஃப்.டி-யில் என் மனைவியின் பெயரில் உள்ளது. மகளுடைய திருமணத்துக்கு இன்னும் நான்கு வருடங்கள் ஆகும் என்பதால், அந்தப் பணத்தி லிருந்து மகனை வெளிநாட்டுக்கு அனுப்பும் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், அதற்கு என் மனைவி ஒப்புதல் தரமறுக்கிறார்.

தற்போது பூர்வீக வீட்டில் வசிக்கிறேன். என் உணவகத்துக்கு அருகிலேயே வீடு கட்டுவதற்காக 5 சென்ட் மனையை ஆறு ஆண்டு களுக்குமுன் ரூ.6 லட்சத்துக்கு வாங்கினேன். இதுதவிர, இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதைப் பக்கத்து நிலத்துக்காரர் ஐந்து வருடங்களுக்குமுன்பே ரூ.3 லட்சத்துக்குத் தரும்படி கேட்டார். கடைசிக்  காலத்துக்கு ஆகுமே என விற்காமல் வைத்திருக்கிறேன்.

‘கடன் வாங்கி என்னை சிங்கப்பூருக்கு அனுப்புங்கள். எனக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும். மொத்தக் கடனையும் நான் அடைத்துவிடுகிறேன்’ என்று சொல்கிறான் என் மகன். மேற் கொண்டு கடனை வாங்கி அனுப்ப வும் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும், கடன் வலையிலிருந்து நான் மீண்டுவர என்ன வழி..?” என்று கவலையுடன் கேட்டிருந்தார் கணேச மூர்த்தி.

இனி, இவருக்கான கடன் சிக்கலுக்குத் தீர்வுகளைச் சொல் கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“எந்த பிசினஸாக இருந்தாலும் மாற்றங்களைச் செய்வதிலும், புதுப்பிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. மாற்றம் செய்தபிறகு வியாபார அளவு எந்த அளவுக்கு இருக்கும் என முன்கூட்டியே கொஞ்சம் யோசிப்பது முக்கியம். அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து எத்தனை நாள்களில் கடனைத் திரும்பத் தரமுடியும் எனக் கணித்திருந்தால் நீங்கள் ஒரேயடியாக இவ்வளவு பணத்தைச் செலவு செய்திருக்க மாட்டீர்கள். நடுத்தரப் பொருளாதாரச் சூழலில் உள்ளவர்கள்தான் உங்களுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள். கடையின் பிரமாண்டமும், விலை அதிகரிப்பும் அவர்களை விலை குறைவான வேறு கடைகளை நோக்கித் திருப்பிவிட்டிருக் கிறது.

மொத்தக் கடனுக்கான நாள் வட்டியைக் கணக்கிட்டு, அந்த வட்டித் தொகையை ஈடுசெய்கிற அளவுக்கு விலையேற்றம் செய்திருந்தால்கூட உங்களுக்குப் பெரிய பாதிப்பு வந்திருக் காது. உதாரணமாக, ரூ.12 லட்சம் கடனுக்கு 12% வட்டி என்றால், ஒரு நாளுக்கான வட்டியாக ரூ.400 வரக்கூடும். ஒருநாளின் மொத்த வாடிக்கையாளர் களைத் தோராயமாகக் கணக்கிட்டு குறைந்தபட்ச அளவில் விலையேற்றம் செய்திருந்தால், வாடிக்கையாளர் களுக்குச் சுமையாக இருந்திருக்காது.

புதிய ஹோட்டல்களுக்கு இணையாக நீங்கள் விலையை உயர்த்தியதுதான்  வாடிக்கையாளர்களை இழக்கக்  காரணம். இதுபோன்ற சிக்கல்கள் புதிய மாற்றங்களைச் செய்யும்போது ஏற்படும் தவறுகளால் வரத்தான் செய்யும். ஆனால், இது தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்துகொண்டு, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வியாபார உத்திகளைக் கையாளுங்கள்.

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க மற்ற உணவகங்களில் கிடைக்காத உணவு வகைகளை வழங்கலாம். உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதைத் தோராயமான ஒரு சர்வே செய்து, எந்த வயதினர் அதிகமாக வருகிறார்களோ, அவர்களுக்கேற்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாம். இதுபோன்று புதிய உத்திகளைக் கையாள்வதன்மூலம்  உங்கள் லாபத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

உங்கள் மகனுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை உறுதி என்கிற பட்சத்தில், அதை ஒன்றுக்கு இரண்டுமுறை விசாரித்துத் தெளிவுபடுத்திக்கொண்டபிறகு நீங்கள் தாராளமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தக் கடனையும் கட்ட உங்கள் மகன் தயாராக இருக்கும் நிலையில் உங்களுக்கு என்ன கவலை..?

உங்கள் மனைவியிடம் சூழலை விளக்கிச் சொல்லி   எஃப்.டி-யிலிருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி, உங்கள் மகனை சிங்கப்பூருக்கு அனுப்புங்கள். மாதம் ரூ.6,500 ஒதுக்கினால்கூட மூன்றாண்டுகளுக்குள் அந்தத் தொகையைச் சேர்த்துவிடலாம். சிங்கப்பூரில் குறைவான வட்டிக்குக் கடன் கிடைக்கக்கூடும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அங்கே கடன் பெற்று, இங்கே நீங்கள் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துவிட முடியும்.

உங்கள் மகன் சிங்கப்பூரிலிருந்து நான்கு, ஐந்து ஆண்டுகளில் திரும்ப வரும்நிலையில், அவர் புதிய தொழில் நுட்பங்களின் அனுபவத்துடன் இருப்பதால், உங்கள் ஹோட்டலை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இருக்கும் நிலம், மனை போன்றவற்றை உங்கள் ஓய்வுக்காலப் பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ளவும்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

 – கா.முத்துசூரியா

 

This article was posted in NANAYAM VIKATAN on -01-july-2018

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *