கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா?

டன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.

 

 

கடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச் செலுத்தி முடிக்கும் தகுதியை  அலசி ஆராய்ந்து அதன்பின் அந்த முடிவினை எடுத்தால், பெரிய சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை. ஆனால், ஏறக்குறைய 90%பேர் இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமலே கடன் வாங்கி, முதலீடு செய்துவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.

சேலத்தைச் சேர்ந்த மாலதி கணேசன், எதிர்கால முதலீட்டுக்காகக் கடன் வாங்கலாமா என்று கேட்டார். அவர் ஏன் இப்படிச் செய்ய நினைக்கிறார் என்பது பற்றிப் பார்க்கும்முன், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

‘‘என் கணவர் கணேசன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்க்கிறார். அவருக்கு வயது 38. மாதச் சம்பளம் ரூ.80 ஆயிரம். நான் எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறேன். என் கணவர் வார விடுமுறையில் மட்டும் வந்து செல்கிறார்.

என்னிடம் சேமிப்பாக இருந்த ரூ.10 லட்சம் போக, ரூ.2 லட்சம் கடனாக வாங்கி, ரூ.12 லட்சம் மதிப்பில் இரண்டு வீட்டுமனைகளை வாங்கியுள்ளோம். உறவினர் ஒருவரிடம் வாங்கிய இந்தக் கடனை மாதம் ரூ.20 ஆயிரமாகத் திரும்பச் செலுத்திவருகிறோம். இன்னும் ஆறு மாதங்களில் இந்தக் கடன் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு ஆறு  வயது. முதல் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. என் மூத்த மகளின் எதிர்காலத்துக்காக அடுத்த 11 ஆண்டுகளில் மேற்படிப்புக்கு ரூ.15 லட்சமும், அடுத்த 18 ஆண்டுகளில் திருமணத்துக்காக ரூ.15 லட்சமும் சேர்க்க வேண்டும். இரண்டாவது மகளின் மேற்படிப்புக்கு அடுத்த 18 வருடங்களில் ரூ.25 லட்சமும், திருமணத்துக்கு 22 வருடங்களில் ரூ.25 லட்சமும் தேவை. மூத்த பெண்ணுக்குக்கு குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். இரண்டாவது குழந்தைக்கும் இதேபோன்ற பாலிசியை எடுக்கலாமா என யோசித்து வருகிறேன்.

என் கணவர் 50 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். அதற்கு இன்னும் 12 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. ஓய்வுக்காலத்தில் எங்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் தேவையாக இருக்கும். அதற்காக இரண்டு, மூன்று இடங்களில் கடைகளை வாங்கிப் போட்டால், ஓய்வுக்காலத்தில் வாடகையாக ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என நினைக்கிறேன். 12 வருடத்துக்குள் இ.எம்.ஐ செலுத்திக் கடனை அடைக்கும் வகையில் கடைகளை வாங்கலாம் என நினைக்கிறேன். எங்களது இந்த யோசனை சரிப்பட்டு வருமா என என் கணவர் சந்தேகத்தை எழுப்புகிறார்.

மாதச் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் எங்களுக்குக் குடும்பச் செலவுகள் எல்லாம் சேர்த்து ரூ.30 ஆயிரம் ஆகிறது. எஸ்.ஐ.பி-யில் ரூ.10 ஆயிரம் செலுத்தி வருகிறேன். உறவினரிடம் வாங்கிய கடன் ரூ.20 ஆயிரம் செலுத்தியதுபோக மீதம் ரூ.20 ஆயிரம் வங்கிக் கணக்கி லேயேதான் வைத்திருக்கிறேன். அதில் உபரிச் செலவுகளாக மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஆகிவிடும். இந்த நிலையில், என் இலக்குகளுக் கும் முதலீடு செய்துவிட்டு, கடனில் கடைகளையும் வாங்குவதால் சிக்கல் ஏதும் வருமா” என்று கேட்டார்.

இனி, இவரது பிரச்னைக்கான  தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவன ருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பத்துக்குப் பதில் சொல்லும் முன்பு, ஓர் உதாரணத்தைச் சொல்ல விரும்பு கிறேன். சமீபத்தில் என்னிடம் பேசிய ஒருவர், பர்சனல் லோனாக ரூ.5 லட்சம் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்ப தாகப் பெருமையாகச் சொன்னார். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசையில் அவர் அப்படிச் செய்துள்ளார். பர்சனல் லோன் வாங்கும் நிலையில் இருக்கும் அவர், போதிய வருமானம் இல்லாதபோது,  அதிக ரிஸ்க் எடுப்பது ஆபத்தானதாகவே அமைந்துவிடக்கூடும். சந்தை தொடர் வீழ்ச்சியில் இருக்கும்போது அவருடைய முதலீடு என்னவாகும் என்பதை நான் உங்களுக்கு  சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.

ஏறக்குறைய இவர் மாதிரியே நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் கணவர் 50 வயதில் ஓய்வுபெறும் போது ரூ.50 ஆயிரம் மாத வருமானம் வரும் வகையில், முதலீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப் பதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் கணவரின் வருமானத்தைக் கொண்டு பார்க்கும்போது, நீங்கள் தாராளமாகக் கடன் வாங்கி, மனைகளை வாங்கலாம்.

ஆனால், உங்களுக்கு இப்போதிருக்கும் வருமானத்தை வைத்து மட்டுமே நீங்கள் அந்த முடிவினை எடுத்துவிடக் கூடாது. மேலும்,  நீங்கள் கடைகளை வாங்கும் இடம் போக்குவரத்து அதிகம் இல்லாத இடமாக அமைந்துவிட்டால் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக் காமல் போகக்கூடும். அதன் காரணமாக வாடகைதாரர் நிலையாக அமையாவிட்டால், கடனைக் கட்டுவதில் சிக்கல் வரக்கூடும். உங்கள் சம்பளத்தைக் கொண்டு சிரமப்பட்டு இ.எம்.ஐ செலுத்தினாலும்கூட ஓய்வுக் காலத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகலாம். எனவே, எதிர்கால வளர்ச்சிக்குத் தகுந்த இடமாகப் பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியமே.

ஓய்வுக்கால வருமானத்துக்கு ரியல் எஸ்டேட் முதலீடு மட்டுமே எல்லா நேரங்களிலும் போதுமானதாக இருந்துவிடாது. அதேபோல், கடன் வாங்கி எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும், எல்லா நேரத்திலும் பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அது சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடியதாக இருக்கும்.

சேலத்தில் ஓரளவு மெயினான இடத்தில் 500 சதுர அடி வாங்கினால்கூட சுமார் ரூ.25 லட்சம் ஆகக்கூடும். கமர்ஷியல் சொத்து என்னும்போது 10-10.5% வட்டி விகிதம் இருக்கக்கூடும். ஆரம்பக் கட்டத் தொகைக்கு இரண்டு மனையில் ஒன்றினை விற்றுக்கொள்ளுங்கள். ரூ.20 லட்சம் கடன் வாங்கினால் 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கும் பட்சத்தில் ரூ.24,500 இ.எம்.ஐ செலுத்த வேண்டி யிருக்கும். வாங்கப்படும் கடைகளுக்கான வாடகை இன்றைக்கு மாதம் ரூ.20,000 என்றாலும், ஆண்டுக்கு 8% அதிகரித்தாலும் 12 ஆண்டுகள் கழித்து ரூ.45 ஆயிரம் கிடைக்கக்கூடும். உறவினரிடம் வாங்கிய கடன் முடிந்ததும் அந்தத் தொகை ரூ.20 ஆயிரம், தற்போது உபரியாக இருக்கும் ரூ.10 ஆயிரம், இப்போது முதலீடு செய்துவரும் தொகை ரூ.10 ஆயிரம், வாடகை வருமானம்மூலம் கிடைக்கும் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் இருக்கும். இதில் ரூ.24,500 கடைக்கான இ.எம்.ஐ செலுத்திவிட்டாலும்கூட, மீதியுள்ள ரூ.35,500-ல் எதிர்கால இலக்குகளுக்கு நீங்கள் தாராளமாக முதலீடு செய்யமுடியும். உங்கள் கணவரின் வருமானம் சற்று அதிகமாகவும், உங்கள் செலவுகள் குறைவாகவும் இருப்பதால், நீங்கள் நினைத்தபடி கடைகளை வாங்கியபிறகும், எதிர்கால இலக்கு களுக்குச் சிக்கல் இல்லை.

உங்களுக்கான இலக்குகளில் திருமணத்துக்கான தொகைகள் மட்டும் குறைவாக இருப்பதால், பணவீக்கத்தைச் சேர்த்துக் கணக்கிடப்பட்டுள்ளன. 50 வயதில் ஓய்வுபெற உள்ளதால், 12 ஆண்டு களுக்குள் முதலீடுகளை முடிக்க வேண்டும்.

உங்கள் முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு 11  ஆண்டுகளில் ரூ.15 லட்சம் சேர்க்க மாதம் ரூ.5,500 முதலீடு செய்ய வேண்டும். திருமணத்துக்கு ரூ.35 லட்சம் சேர்க்க வேண்டும். மாதம் ரூ.4,900 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.15.83 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மறுமுதலீடு செய்தால், ரூ.35 லட்சம் கிடைக்கும்.  இரண்டாவது குழந்தையின் படிப்புக்கு மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.12.66 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த ஆறு ஆண்டு களுக்கு மறு முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும். திருமணத்துக்கு ரூ.43 லட்சம் சேர்க்க வேண்டும். மாதம் ரூ.4,300 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.13.85 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த 10 வருடங்களுக்கு மறுமுதலீடு செய்தால் ரூ.43 லட்சம் கிடைக்கும். இரண்டாவது குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பதில் உங்கள் கணவர் ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது முக்கியம்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது. 12% வருமானம் தரத்தக்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *