கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்!

ஓவியம்: ராஜேந்திரன்

பெரும்பாலானவர்கள் ஏதாவது அவசரம், சிக்கல் என்றால் பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக யோசிக்கத் தவறிவிடுவதால்,  சிக்கலை மேலும் அதிகப்படுத்திக்கொள்வார்கள். அதுவும் பணச் சிக்கல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை; அப்போதைய தேவைக்கு எப்படியாவது பணம் கிடைத்தால்போதும் என்று நினைத்துக் கடனை வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு அந்தக் கடனைத் திரும்பக் கட்டமுடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பை எல்லோராலும் கண்டுபிடித்துப்  பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதுமாதிரியான வாய்ப்புகளைத் தவறவிட்டு, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அவதிப்படுகிறவர்கள் நம்மில் பலர். அவர்களில் ஒருவர்தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சந்தியா.

“கடன் வாங்கும்முன் திரும்பக் கட்டும் தகுதி இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும் என நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால், அப்படியெல்லாம் யோசித்துப் பார்த்து முடிவு செய்ய எனக்கு அவகாசம் இருந்ததில்லை. கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் நான் வட்டி எவ்வளவு என்று பார்க்காமல் வாங்கினேன். அவசரம் காரணமாக அப்படிச் செய்துவிட்டேன். இப்போது அந்தக் கடனிலிருந்து மீள ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கவலையுடன் நம்மிடம் கேட்டார் சந்தியா. அவருக்கிருந்த நிர்பந்தமான சூழ்நிலை பற்றி சொன்னார்.

“எனக்கு 48 வயதாகிறது. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். 20 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. என் மாதச் சம்பளம் ரூ.25 ஆயிரம். நான் திரு மணம் செய்துகொள்ள வில்லை. என் அப்பாவுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. நான்தான் அவரைக் கவனித்துக்கொள் கிறேன்.

எனக்கு ஒரு வயதாகும்போதே என் அம்மா இறந்துவிட்டார். அப்போது கணவரை இழந்து தனியாக வாழ்ந்துவந்த என் அத்தை எங்களோடு இருந்து என்னை வளர்த்தார். நான் எம்.பி.ஏ படித்திருக்கிறேன்.

நல்லபடியாகத்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் என்னுடைய அத்தை படிக்கட்டிலிருந்து எதிர்பாராமல் தவறி விழுந்தபோது எலும்புமுறிவு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு ஆபரேஷன் செலவாக ரூ.6 லட்சம் வரை ஆனது. ஆபரே ஷனுக்குப்பிறகு ஓர் ஆண்டு வரை அவர் நலமாக  இருந்தார். கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார்.

என் அத்தையின் மருத்துவச் செலவுகளுக்காகத் தனியார் வங்கி யொன்றில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.17,000 செலுத்தி வருகிறேன். இன்னும் ரூ.4.5 லட்சம் செலுத்த வேண்டும்.

இதுபோக, தெரிந்தவர் ஒருவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி என் அத்தையின் தொடர்ச்சியான மருத்துவச் செலவுகளைச் செய்தேன். கடன் கொடுத்தவர் நெருக்கடி தரவே, இன்னொரு தனியார் வங்கியில் ரூ.1.5 லட்சம் பர்சனல் லோன் வாங்கி அந்தக் கடனை அடைத்தேன். அதற்காக இ.எம்.ஐ ரூ.6,000 செலுத்தி வருகிறேன்.

இரண்டு கடனுக்கான இ.எம்.ஐ-யும் சேர்த்து மாதமொன்றுக்கு ரூ.23 ஆயிரம் செலுத்திவருகிறேன். இன்னும் மூன்று வருடங்கள் கடனைச் செலுத்த வேண்டும்.

அப்பா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அவருக்கு பென்ஷன் எதுவும் இல்லை. வேறு எந்தச் சொத்துகளும் சேர்த்து வைக்கவில்லை. எனக்கும் பி.எஃப் எதுவும் இல்லை.

நான் வீட்டு வாடகை மட்டுமே ரூ.6,000 செலுத்தி வருகிறேன். இந்த நிலையில் வாழ்க்கையை ஓட்டுவது மிகுந்த சிரமமாக உள்ளது. கடனுக் கான இ.எம்.ஐ ரூ.15 ஆயிரமாகக் குறைந்தால், மீதி ரூ.10 ஆயிரத்தில் வாழ்க்கையை நடத்த முடியும். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன்.

நான் எம்.பி.ஏ படித்திருப்பதுடன்  சில டிப்ளமோ கோர்ஸ்களையும் படித்துள்ளதால், பல்வேறு வேலை களுக்கு முயற்சி செய்து வருகிறேன். ரூ.40 – 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை அமைந்துவிட்டால் என் பிரச்னை ஓரளவுக்குத் தீர்ந்துவிடும்.

ஆனால், அதுவரை நான் எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் தவிக்கிறேன். சரியான வழியைக் காட்டினால் எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் மிகுந்த கவலையுடன்.

இனி, இவரது பிரச்னைக்கான  தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவன ருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“வாழ்க்கையில் நாம் செய்யத் தவறும் சின்னச் சின்ன விஷயங்கள் தான் பெரிய பிரச்னைகளில் நம்மைச் சிக்க வைத்துவிடுகிறது என்பதைப் பலரும் புரிந்துகொள்வ தில்லை. பிரச்னை பூதாகரமாக எழுந்து நிற்கும்போதுதான் கலங்கித் தவிக்கிறார்கள். நீங்கள் உங்கள் அத்தைக்கு ரூ.5 லட்சம் ரூபாய்க்கு பர்சனல் ஆக்ஸி டென்ட் பாலிசி எடுத்து வைத்திருந்தால், ஆண்டு பிரீமியமே ரூ.800-தான் ஆகியிருக்கும். உங்களுக்கு பர்சனல் லோன் வாங்கிச் செலவு செய்யவேண்டிய நிலையே வந்திருக்காது.

சரி, கடன் வாங்கவேண்டிய கட்டா யம் வந்துவிட்டது என்ற நிலையில், முதலில் நாம் யோசிக்க வேண்டிய விஷயம், குறைந்த  வட்டிக்குக் எங்கே கடன் கிடைக்கும் என்று பார்ப்பதுதான். நீங்கள் அதையும் செய்யவில்லை. நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கு 30% அளவுக்கு வட்டி செலுத்திவருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலரும் எத்தனை சதவிகித வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறோம் என்று தெரியாமலே இருப்பது பரிதாபம்.

பொதுவாக, நாம் சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கியில் பர்சனல் லோன் வாங்கும்போது, 18 மாதச் சம்பளம் வரை கடன் வாங்க முடியும். இதற்கு 16-18% வரை வட்டி விதிப்பார்கள்.  உதாரணமாக, ஐந்து லட்சம் ரூபாயை ஐந்து வருட காலத்துக்குச் செலுத்தும் வகையில் 18% வட்டியில் கடன் வாங்கும் போது, ரூ.12,300 மட்டுமே இ.எம்.ஐ-ஆக செலுத்த வேண்டியிருக்கும்.

உங்களுக்குள்ள கடன் தொகை ரூ.6 லட்சத்தையும், உங்கள் சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கிக்கு மாற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள். அதுகுறித்து உங்கள் வங்கியை அணுகிப் பேசுங்கள். நீங்கள் எம்.பி.ஏ படித்துள்ளதால், அதற்கான சான்றைக் காட்டி, உங்கள் கடன் முழுவதையும் உங்கள் சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கிக்கு மாற்ற இயலும்.

அப்படி மாற்றுகிறபோது ரூ.6 லட்சம் கடனுக்கு ஐந்து ஆண்டுகளில் செலுத்தும் வகையில் 18% வட்டி என்கிறபட்சத்தில் ரூ.15,236 மட்டுமே இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் சம்பளத்தில் மீதமுள்ள ரூ.10 ஆயிரத்தைக் கொண்டு, உங்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை அமையும் வரை ஓரளவு உங்களால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும். கூடுதல் சம்பளத்தில் வேலை அமைந்தவுடன் உங்களுக்கு முதலில் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசி மற்றும் ஹெல்த் பாலிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

70 வயதைத் தாண்டிய உங்கள் தந்தையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருப்பதால், இரண்டு லட்சம் வரை அவசர கால நிதியை உருவாக்கிக்கொள்வது நல்லது. அதன்பிறகு உங்கள் ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பியுங்கள்.

பிரச்னை வருகிறபோது, பதற்றப்படாமல் செயல்பட்டால் தான் சரியான வழிமுறையைத் தேர்வுசெய்ய முடியும்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா

This article was posted in last week NANAYAM VIKATAN.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *