கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்!

சிலர் ஏன் கடன் வாங்குகிறோம், எதற்குக் கடன் வாங்குகிறோம் என்று யோசிக்காமல்,  கடனை வாங்கித் தள்ளுகிறார்கள். அப்படித்தான் நாமக்கல்லைச் சேர்ந்த சங்கரும் ஏகத்துக்குக் கடனை வாங்கிவிட்டு, இப்போது கலங்கி நிற்கிறார். மிகுந்த வருத்தத்துடன் அவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

“ஆசிரியர் பயிற்சியை 1992-ல் முடித்துவிட்டு, அப்பாவின் கோழிக்கடையை நான் நடத்தத் தொடங்கினேன். 1996–ல் எனக்கு அரசு வேலை கிடைத்தது. தற்போது எனக்கு வயது 45. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகம். குடும்பத்திற்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு சினிமாத் துறைக்குச் செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகப் பல தொழில்களில் இறங்கினேன்.

என்னுடைய சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக எதையும் சேமிக்காமல் தொழில்களில் முதலீடு செய்தேன். தொழிலில் நஷ்டம் வந்தபிறகு அதைத் தொடர முடியாத நிலை வரும்போது, வேறு தொழிலுக்கு மாறுவது என மனம்போன போக்கில் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

என் மனைவி வீட்டுப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நான் வாங்கிய கடன், 2016-ல் ரூ.55 லட்சமாக வளர்ந்து என்னை அச்சுறுத்தியது. என் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது, குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது எனப் பபல்வேறு சிந்தனைகள் தினமும் என்னை வதைக்க ஆரம்பித்தன.

இதிலிருந்து தப்பிக்க, என் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு என் வீட்டை, எனது தம்பிக்கே விற்பனை செய்தேன். அதன்மூலம் கிடைத்த ரூ.42 லட்சம் மற்றும் என்னிடம் அப்போது கையிலிருந்த ரூ.5 லட்சம் எனக் கொண்டு,    2017–ல் ரூ.47 லட்சம் கடனை அடைத்துவிட்டேன். இன்னும் ரூ.8 லட்சம் பாக்கி இருக்கிறது. இந்தக் கடனுக்கு வட்டி எதுவும் செலுத்துவதில்லை. தற்போது சொந்த ஊரை விட்டு சேலத்தில் குடியிருக்கிறேன்.

மூத்த மகன் பிளஸ் டு முடித்து விட்டு நீட் பயிற்சிக்காக பெங் களூருக்கு சென்றுள்ளான். அவனுக்கான கட்டணத்தை எனது மாமனார் செலுத்தி விட்டார். இளைய மகன் பிளஸ் ஒன் படிக்கிறான்.

இப்போதைக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருங்கால வைப்பு நிதியில் கடன் பெற்றுத்தான் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் மற்றும் எதிர்பாராத செலவுகளைச் சமாளித்து வருகிறேன். எனக்கு தற்போது சேமிப்பு எதுவுமில்லை. அடுத்த ஆண்டு மார்ச்சில் அம்மாவின் பூர்வீகச் சொத்து விற்பதன் மூலம் என் பங்காக ரூ.6 லட்சம் வரக்கூடும். ஓய்வுக் காலத்தில் பென்ஷன் ரூ.48 ஆயிரம் கிடைக்கும். அரசு வேலையைத் தவிர, வேறு வருமானத்துக்கான வழி ஏதுமில்லை. நான் இந்தக் கடன் துன்பத்திலிருந்து மீண்டுவர வழி காட்டுங்கள்’’ என்றவர் தன் வரவு செலவுப் பட்டியலை அனுப்பி வைத்தார்.

 வரவு செலவு விவரங்கள்

மாத வருமானம்: ரூ.70,200

பி.எஃப்: ரூ.10,000

பி.எஃப் கடன்: ரூ.20,000 (இன்னும் 35 தவணைகள் உள்ளன)

கூட்டுறவுக் கடன் இ.எம்.ஐ: ரூ.17,000 (இன்னும் 20 மாதங்கள்)

வீட்டு வாடகை: ரூ.6,000

குடும்பச் செலவுகள்: ரூ.11,000

இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.1,200

மொத்தம்: ரூ.65,200

இன்ஷூரன்ஸ்

ரூ.55 ஆயிரம் முதிர்வுத் தொகை இரண்டு பாலிசிகள் (2012 முதல் 18 ஆண்டுகள்)

ரூ.1 லட்சம் முதிர்வுத் தொகை கொண்ட ஒரு பாலிசி (2021-ல் முதிர்வு)

ரூ.2 லட்சம் முதிர்வுத் தொகை கொண்ட ஒரு பாலிசி (2012 முதல் 18 வருடம் )

ரூ.50 லட்சம் டேர்ம் பாலிசி

 தற்போதைய நிலையில் உள்ள கடன்

வெளியில் வாங்கியது: ரூ.8 லட்சம்

கூட்டுறவு வங்கி : ரூ.3.06 லட்சம் (இன்னும் 20 மாதங்களில் முடியும்)

நகைக் கடன்: ரூ.60 ஆயிரம்

சில்லறைக் கடன்: ரூ.1 லட்சம் (சம்பளத்தில் மீதமாகும் தொகை ரூ.5,000-யைக் கொண்டு செலுத்தப் படுகிறது)

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நம்மிடம் எவ்வளவு சொத்து இருக்கிறதோ, அதில் 60% அளவுக்கு மட்டுமே நாம் எப்போதும் ரிஸ்க் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது சிக்கல் என்றால்கூட, பெரிய அளவில் கடன் இல்லாமல் மீண்டுவர முடியும். உங்கள் சக்திக்கு மீறிக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவே 22 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. என்றாலும், நீங்கள் முயற்சி செய்தால், உங்களால் இந்தக் கடன் பிரச்னையிலிருந்து மீண்டுவர முடியும்.

உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பாசிட்டிவான விஷயம் என்றால், உங்களுக்கு பென்ஷன் தொகை யாக மாதம் ரூ.48 ஆயிரம் கிடைக்கும் என்பதுதான்.

வெளியில் 14 சதவிகிதத்துக்குக் கடன் வாங்கி விட்டு, வெறும் 5% வருமானத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்துள்ளீர்கள் என்றால், எந்த அளவுக்கு நிதி தொடர்பான விஷயங்களில்  உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 2021-ல் முதிர்வடையும் இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதன் மூலம் உங்களுக்கு ரூ.83 ஆயிரம் கிடைக்கும். கூட்டுறவுக் கடனில் ஒருபகுதியை அடைத்து விடுங்கள். அதே இ.எம்.ஐ-யைத் தொடர்ந்து செலுத்திவந்தால் 13 மாதங்களில் கூட்டுறவுக் கடன் முடிந்துவிடும்.

அம்மாவின் சொத்தினை விற்பதன் மூலம் கிடைக்கும் ரூ.6 லட்சத்தைக்கொண்டு வெளிக் கடன் ரூ.8 லட்சத்தில் ரூ.6 லட்சத்தை அடைத்து விடவும். மீதி இன்னும் ரூ.2 லட்சம் இருக்கும். கூட்டுறவுக் கடன் முடிந்ததும் அதற்குச் செலுத்தி வந்த ரூ.17 ஆயிரத்தில் மாதம் ரூ.8,300 செலுத்தி வந்தால் இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கடன் முடிந்துவிடும். மீதியுள்ள ரூ.8,700-யை முதல் மகனின் படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.

தற்போது ஒவ்வொரு மாதமும் மீதமாகும் தொகை ரூ.5,000-யைக் கொண்டு தற்போது சில்லறைக் கடனைச் செலுத்திவருகிறீர்கள். அந்தக் கடனை முழுமையாகக் கட்டி முடித்ததும், அந்தத் தொகையை இரண்டாவது மகனின் மேற்படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும். அடுத்த ஆறு வருடங்களில் இரண்டு மகன்களின் படிப்பும் முடிந்துவிடும். அப்போதைய நிலையில் கூடுதலாக சில குடும்பச் செலவுகள் இருந்தாலும், அதுபோக ரூ.15 ஆயிரம் வரை உங்களால் மிச்சப் படுத்த முடியும். அதனை ஏழு ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால், 12% வருமான அடிப்படையில் உங்கள் ஓய்வின்போது ரூ.19.6 லட்சம் கிடைக்கக்கூடும். இதனை உங்கள் ஓய்வுக்காலத்தில் நீங்கள் சுற்றுலா செல்லவும், உங்கள் செட்டில்மென்ட் தொகையை அவசர கால நிதியாகவும் வைத்துக்கொள்ளவும்.

முக்கியமான ஒரு விஷயம், செட்டில்மென்ட் தொகையில் சொந்த வீடு வாங்கலாமே என ஆசைப்பட்டு மீண்டும் சிக்கலில் சிக்கிக்கொள்ளா தீர்கள். உங்கள் மகன்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, அவர்களின் பணத்தில் வீடு வாங்க  வாய்ப்பிருந்தால் மட்டுமே வாங்குங்கள்.’’

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878 

 – கா.முத்துசூரியா

 

This  article was posted on last sunday(22/07/2018) NANAYAM VIKATAN Article.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *