கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்!

ஓவியம்: ராஜேந்திரன்

நிறையப் பேருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான திட்டமும் இருப்பதில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவார்கள். எதிர்காலத்துக்கான மிக முக்கியமான இலக்குகளுக்குக்கூடத் திட்டமிடாமல் ஏனோதானோவென்று இருந்துவிடுவதால்தான் எதிர்பாராத நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன். அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்.

 

 

“என் வயது 50. எனக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக் கிராமம். எனக்கு மூன்று ஏக்கர் அளவில் நிலம் உள்ளது. விவசாயம் செய்து வருகிறேன். செலவுகள் போக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால், இதுவரை அந்தப் பணத்தைச் சேர்த்து வைக்கவில்லை. பல செலவுகளில் கரைந்துபோகும்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் மகனை மலேசியாவுக்குப் பணிக்காக அனுப்பினேன். அதற்காக மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். ஓராண்டு வரைக்கும் மாதம் பத்தாயிரம், எட்டாயிரம் எனப் பணம் அனுப்பி வந்தான் என் மகன். அதனைக்கொண்டு ரூ.1 லட்சம் வரை கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதற்குப்பிறகு அவனிடமிருந்து எந்தப் பணமும் எனக்கு வரவில்லை.

சில மாதங்களாக அவன் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவன் ஏதாவது ஆபத்தில் சிக்கி விட்டானோ என்று நாங்கள் பயந்துவிட்டோம்.அவனு டன் மலேசியா சென்ற அவனுடைய நண்பன் ஒருவன் திடீரென ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்தான். அவன் சொன்னதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து விட்டோம்.

அவன் மலேசியாவில் தன்னுடன் பணிபுரிந்து வந்த ராஜஸ்தான் பெண்ணைக் காதலித்திருக்கிறான். மலேசியாவிலிருந்து ஒரு வருடத்திலேயே டெல்லிக்குத் திரும்பிவந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட தாகவும், இப்போது அவன் டெல்லியில் இருப்பதாகவும் சொன்னான். நான் போனில் பேசி வீட்டுக்கு அழைத்தேன். ஆனால், சொந்தபந்தங் களுக்குப் பயந்து வர மறுத்து விட்டான்.

கடன் நெருக்கடியைச் சொல்லி அழுதபோது, மாதம் ரூ.5,000 அனுப்ப ஒப்புக்கொண்டான். ஆனால், நம்பிக்கைத் துரோ கம் செய்த அவனுடைய பணம் எதுவும் தேவை யில்லை; அவனும் இங்கே வரத் தேவையில்லை என என் மனைவி சொல்கிறார்.

எங்கள் பகுதியில் ஏக்கர் இரண்டு லட்சம் வரை விலை போகிறது. எனவே, நிலத்தை விற்றுவிடலாம் என்றால், அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் என் மகளை ஓராண்டு பாரா மெடிக்கல் கோர்ஸ் ஏதாவது ஒன்றில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டு களுக்குள் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும்.

என் மனைவி மில் ஒன்றில் வேலை பார்த்து மாதம் ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கிறார். வீட்டுச் செலவு போக மாதம்   ரூ.4 ஆயிரம் சீட்டுக் கட்டி வருகிறார். இப்படிச் செய்துதான் 10 பவுன் வரை நகை வாங்கி வைத்துள்ளோம். திருமணச் செலவுகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

இன்றைக்கு வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தாலும் எங்களின் கடைசிக் காலத்தை எப்படித்தான் கழிக்கப்போகிறோமோ என்ற பயம் ஒருபக்கம் இருக்கவே செய்கிறது. இப்போதைக்கு என் மகனுக்காக வாங்கிய கடன் இரண்டு லட்சத்தை அடைத்து முடித்துவிட்டாலே எனக்கு நிம்மதியாக இருக்கும். நல்லவழி காட்டுங்கள்” என உருக்கமாகப் பேசினார்.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சா லிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நாம் எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடுகளை நாம் எப்போது செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதற்கு நீங்கள் சரியான உதாரணம். விவசாய வருமானத்தில் சொற்பமான தொகையைச் சேர்த்து வந்திருந்தால்கூட உங்கள் மகனுக்காக நீங்கள் கடன் பட்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. பண இழப்பு என்ற நிலையில் விட்டுத் தள்ளிவிட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்.

இப்போது உங்கள் மகனும், மருமகளும் படித்தவர்கள் என்பதால், ஓரளவு நல்ல வேலையில் இருக்கக்கூடும். எனவே, உங்கள் மகனுக்காக நீங்கள் பட்ட கடனை அவரையே அடைக்கச் சொல்வதுதான் சரி. உங்கள் மகனே மாதம் ரூ.5,000 தர ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதைப் புறக்கணிக்க வேண்டியதில்லை என உங்கள் மனைவிக்குப் புரியவையுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், மாதம் ரூ.5,000 வாங்கி நீங்கள் கடனைச் செலுத்திக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மகன், மருமகள் இருவரும் சுலபமாக ரூ.2 லட்சம் பர்சனல் லோன் போட முடியும் என்பதால், பர்சனல் லோன் போட்டுக் கடனை அடைக்கச் சொல்லுங்கள். ரூ.2 லட்சத்துக்கு 14% வட்டி என்ற அடிப்படையில் 48 மாதங்கள் செலுத்தும் வகையில் கணக்கிட்டால் மாதம் ரூ.5,500 இ.எம்.ஐ செலுத்தினால் போதுமானதாக இருக்கும். எனவே, இந்தக் கடனை உங்கள் மகனிடம் உடனே ஒப்படைத்து விடுங்கள். இப்படிச் செய்தால்தான் உங்கள் மகனும் பிரச்னையின் தாக்கத்தை உணர்ந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.

உங்கள் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருப்பதால், வட்டி யில்லாமல் கல்விக் கடன் வாங்க முடியும். உங்கள் மகளின் படிப்புக்கு கல்விக் கடன் வாங்கலாம். உங்கள் மகள் வேலைக்குப் போனதற்குப்பிறகு அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தச் சொல்லுங்கள். உங்கள் மகளின் திருமணத்துக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஐந்து ஆண்டுகளில் விற்பனை செய்து கொள்ளலாம். நீங்கள் செய்யும் விவசாயத்தை இன்னும் கண்ணும் கருத்துமாகச் செய்யும்பட்சத்தில் ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்தையாவது உங்களால் ஈட்ட முடியும்.

உங்கள் மனைவி வேலைக்குப் போய் சம்பாதிக்கும் தொகையில் குடும்பச் செலவுகளைச் செய்துகொண்டு, விவசாய வருமானமாக நீங்கள் குறிப்பிடும் 50,000 ரூபாயை அப்படியே 10% அளவுக்கு வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் இப்போதிருந்தே முதலீடு செய்தால், உங்களின் 65-வது வயதில் ரூ.15.9 லட்சம் கிடைக்கக்கூடும். இதன்மூலம் 8% வட்டி என்றாலும், ஆண்டுக்கு ரூ.1.27 லட்சம் கிடைக்கும்.

65 வயதுக்குப்பிறகும் உங்களால் விவசாயம் செய்ய முடியும் எனில் செய்யுங்கள். இது முடியாதபட்சத்தில் உங்கள் நிலத்தை விற்பனை செய்து விடலாம். இன்றைக்கு ஏக்கர் ரூ.2 லட்சத்துக்குப் போகிறது எனில், 15 ஆண்டுகள் கழித்துக் குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்துக்காவது விலை போகும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் கிடைத்தால், அதற்கு 8% வட்டி என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கிடைக்கும். இப்படிக் கிடைக்கும் ரூ.1.75 லட்சம் தொகையை வைத்து உங்களின் ஓய்வுக்காலத்தைக் கழிக்கலாம்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878 

 – கா.முத்துசூரியா

 

This article was published  in last week-29/07/2018-NANAYAM VIKATAN article.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *