கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்!

நிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். சென்னையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தன் பிரச்னையைச் சொல்கிறார்….

‘‘என் பெயர் தர்மராஜ். வயது 27. எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக உள்ளேன். மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம்.

என் அப்பா பிழைப்புத் தேடி மதுரைக்கு வந்து வியாபாரம் செய்யவந்த வகையில் 20 வருடங்களுக்குமுன்பே நாங்கள் மதுரையில் குடியேறினோம். அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நான் என மொத்தம் நாங்கள் ஐந்து பேர். அக்காவிற்கு 2015-ல் திருமணம் ஆனது. அப்பா சைக்கிள் மூலம் அலுமினியப் பாத்திரங்கள் விற்று எல்லோரையும் படிக்க வைத்தார். அம்மா இல்லத்தரசி. அவ்வப்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்.

தூத்துக்குடியில் உள்ள சொந்தக் கிராமத்தில் ஏழு ஏக்கர் நிலம் இருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படி வருமானம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து விவசாயம் செய்கிறோம். நான் முதல் தலைமுறைப் பட்டதாரி. 2012-ல் பி.இ முடித்தேன், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் முன்னணி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

என் அண்ணன் எம்.இ முடித்துள்ளார். ஆனாலும், நிலையான பணியில் இல்லை. தம்பி ஜூனியர் வழக்கறிஞராகப் பயிற்சி எடுத்து வருகிறார். தங்கை பி.இ முடித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். குடும்பச் செலவு களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடமே இருக்கிறது. மிகத் தெளிவான திட்டமிடலுடன் எதையும் அணுகும் எனக்குச் சமீப காலமாக நிகழ்ந்த நெருக்கடி களினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

அக்காவின் திருமணம், என்னுடைய கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த என 2015-ல் பர்சனல் லோன் வாங்க நேரிட் டது. நெருங்கிய நண்பர் சிக்கலில் இருந்ததினால், என்னி டம் பணம் இல்லாதபோதும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,70,000 கொடுத்து உதவினேன். ரூ.1 லட்சம் வரை திரும்பச் செலுத்திய அந்த நண்பர், கடந்த மாதம் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்குக் கடன் கொடுத்த விஷயம் அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாது என்பதால், மிச்சம் இருக்கிற ரூ.70 ஆயிரத்துக்கு நானே பொறுப் பேற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். இதுவே என் மன உளைச்சலுக்கு வழி வகுத்துவிட்டது.

மிகக் குறுகிய காலத்துக்குள் நான் மதுரையில் உள்ள வீட்டைச் சீரமைக்க ரூ.50 ஆயிரம், விவசாயச் செலவுகளுக் காக ரூ.30 ஆயிரம் தேவை. அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்கையின் திருமணத்துக்கு ரூ.10 லட்சமும், என் அண்ணன் திருமணம் மற்றும் என்னுடைய திருமணத்துக்கு ரூ.8 லட்சமும் சேர்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த ஊரில் வீடு கட்ட ரூ.25 லட்சமும், 10 ஏக்கர் நிலம் வாங்க ரூ.10 லட்சமும் தேவை.

தற்போது அப்பாவின் வியா பாரத்தை விரிவாக்கத் திட்டமிட் டுள்ளேன். அதற்காக ரூ.6 லட்சத்துக்கு மினி ட்ரக் வாங்க வேண்டும்’’ என்றவர், தன் கடன் மற்றும் முதலீட்டு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

பர்சனல் லோன்

செப்டம்பர் 2015-ல் ரூ.4 லட்சம் – இ.எம்.ஐ ரூ.10,731 (ஆகஸ்ட் 2019-ல் முடியும்), நவம்பர் 2015-ல் ரூ.4 லட்சம் – இ.எம்.ஐ ரூ.9 ஆயிரம் (நவம்பர் 2020-ல் முடியும்), நவம்பர் 2015-ல் ரூ.5,60,000 – இ.எம்.ஐ ரூ.15 ஆயிரம் (செப்டம்பர் 2019-ல் முடியும்).

வாகனக் கடன்

நவம்பர் 2017-ல் ரூ.52 ஆயிரம்- இ.எம்.ஐ ரூ.5,000 (செப்டம்பர் 2018-ல் முடியும்)

கிரெடிட் கார்டு கடன்

ஆக்ஸிஸ் பேங்க் கார்டு: ரூ.60,000, சிட்டி பேங்க் கார்டு: ரூ.80,000

முதலீடுகள்

மணிபேக் பாலிசி (20 ஆண்டுகள்): காலாண்டு பிரீமியம் ரூ.5,000 (முதல் 5 ஆண்டுக்கான பெனிஃபிட் தொகை ரூ.50 ஆயிரம் செப்டம்பரில் கிடைக் கும்), மணிபேக் பாலிசி (20 ஆண்டுகள்) : மாத பிரீமியம் ரூ.8,200, (முதல் 5 ஆண்டுக்கான பெனிஃபிட் தொகை ரூ.1 லட்சம் 2021-ல் கிடைக்கும்)

மாதாந்திரச் செலவுகள்

பர்சனல் லோன்: ரூ.35,000, பைக் கடன்: ரூ.5,000, வீட்டு வாடகை: ரூ.10,000, குடும்பச் செலவுகள்: ரூ.5,000, இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.10,000, கிரெடிட் கார்டு கட்டணம்: ரூ.10,000.

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செய்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டி ருக்கிறீர்கள். ஆனால், 16-18 சதவிகிதத் துக்கு பர்சனல் லோன் வாங்கிவிட்டு, வெறும் 5 – 6 சதவிகித வருமானத்துக்கு மணிபேக் பாலிசிகளில் முதலீடு செய்திருக்கிறீர்கள். இது சரியான முடிவல்ல.

அவசரச் செலவுகளுக்குக் கடன் வாங்கியது தவறில்லை. ஆனால், கொஞ்சம் யோசித்திருந்தால் இன்று ரூ.40 ஆயிரம் வரைக்கும் இ.எம்.ஐ செலுத்தவேண்டிய அவசியம் வந்திருக்காது.

இவ்வளவு  கடனை வைத்துக்கொண்டு, எதிர்காலத்துக்கான திட்டமிடலை இப்போது யோசித்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். குறுகிய காலத்தில் செய்து முடிக்கவேண்டிய முக்கியமான இலக்குகளை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கடனைக் கட்டி முடிக்கும்முன் பிசினஸில் அகலக்கால் வைக்கும் ரிஸ்க்கை எடுக்க வேண்டாம். ஏதாவது சிக்கல் என்றால் கடன் சுமை மேலும் அழுத்த ஆரம்பிக்கும். மினி ட்ரக் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிவைப்பது நல்லது. அதற்குப் பதில் முதலில் வாடகைக்கு எடுத்து முதல் ஆறு மாத காலத்துக்கு பிசினஸ் எப்படி லாபம் தருகிறது என்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம். தற்போதிருக்கும் கடனைக் கட்டிமுடித்தபிறகு பிசினஸ் விரிவாக்கம் குறித்து யோசியுங்கள். புதிய வீடு, நிலம் குறித்தெல்லாம் குறுகிய கால இலக்குகள் முடிந்தபிறகு திட்டமிடலாம்.

அண்ணன் திருமணம், தங்கை திருமணம், உங்கள் திருமணம், வீட்டைச் சீரமைப்பது என இவைதான் இப்போதைக்கு அவசரமான இலக்குகள்.

இரண்டு பர்சனல் லோன் முடிந்ததும் மாதம் ரூ.24 ஆயிரம் 36 மாதங்களுக்கு முதலீடு செய்தால் 10% வருமானம் என்றாலும், ரூ.10 லட்சம் தங்கையின் திருமணத்துக்குச் சேர்த்துவிட முடியும். டூவீலர் லோன் முடிந்ததும் ரூ.5,000 வீதம் 10 மாதங்கள் சேர்த்து வீட்டைச் சீரமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு அந்த 5,000 ரூபாயைத் தொடர்ந்து முதலீடு செய்துவரவும். இத்துடன் 2020-ல் இன்னொரு பர்சனல் லோன் முடிந்ததும், அந்த 9,000 ரூபாயையும் தொடர்ந்து முதலீடு செய்துவரவும். உங்கள் திருமணத்துக்கும், உங்கள் அண்ணன் திருமணத்துக்கும் இந்த முதலீட்டைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

செப்டம்பரில் மணிபேக் பாலிசி மூலம் கிடைக்கும் ரூ.50 ஆயிரத்தைக் கொண்டு ஆக்ஸில் வங்கி கிரெடிட் கார்டு கடனைச் செலுத்தவும். இந்த பாலிசியை குளோஸ் செய்துவிடவும். அதற்குச் செலுத்தும் பிரீமியத்தைச் சேர்த்து வைத்து சிட்டி பேங்க் கார்டு கடனை அடைத்து விடவும். அதற்குப்பிறகு கிரெடிட் கார்டுக்காகச் செலுத்தி வரும் ரூ.10 ஆயிரத்தையும் உங்கள் திருமணத்துக்காக முதலீடு செய்துவரவும். உங்கள் குறுகிய கால இலக்குகளை மூன்றாண்டு என்பதற்குப் பதில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் என நிர்ணயித்துக்கொள்ளவும்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878 

 – கா.முத்துசூரியா

Note: This Article was posted in last sunday (05/08/2018) Nanayam Vikatan.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *