«

»

Mar 19

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 31 – இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமா?

ஓவியம்: பாரதிராஜா

சிலர் கொஞ்சமாக சம்பாதித்தாலும், அதில் ஒரு பகுதியை நிச்சயம் முதலீடு செய்வார்கள். அந்தச் சிலரில் தருமபுரியைச் சேர்ந்த அண்ணாமலையும் ஒருவர். தனக்குத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் முதலீட்டு முயற்சிகளை எடுத்துவந்த அவர்,  தன்னைப் பற்றி நம்மிடம் சொன்னதாவது…

“எனக்கு வயது 32. என் சொந்த ஊர் தருமபுரி அருகேயுள்ள கிராமம். என் மனைவிக்கு வயது 25. தற்போது வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். நான் 2012 முதல் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். நாணயம் விகடன் படித்துத்தான் முதலீட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன்” என்றவரிடம், ‘‘உங்கள் வரவுசெலவு முதலீட்டு விவரங்கள், சிக்கல்களைச் சொல்லுங்கள்’’ என்றோம்.

“எனக்குச் சின்னச் சின்னதாக ரூ.5 லட்சம் வரை கடன் இருந்தது. எனவே, ஐந்து மாதங்களுக்குமுன் கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று, அந்தக் கடன்களை அடைத்தேன். அதற்கான தவணைத் தொகையாக மாதம் ரூ.10,755 செலுத்திவருகிறேன். மேலும், என் இரண்டு சீட்டையும் ஜூலை 2019-ல் எடுத்துக் கூட்டுறவுக் கடனை அடைத்துவிட்டு, அதற்கான தொகையையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் மூலம் தொடங்கப்பட்ட இரண்டு பாலிசிகள் உள்ளன. ஒன்று, மாதம் ரூ.2,750 பிரீமியம் வீதம் 28 வருடங்களுக்கானது. இதன் முதிர்வுத்தொகையாக ரூ.10 லட்சம் கிடைக்கும். மற்றொன்று, மாதம் ரூ.3,350 பிரீமியம் வீதம் 15 வருடங்களுக்கானது. இதன் முதிர்வுத்தொகை ரூ.5 லட்சம். இது மணிபேக் பாலிசி. இரண்டையுமே 2015-ல் தொடங்கினேன். தற்போது இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலம் முதலீடு செய்யத் தொடங்கலாமா என்று யோசித்துவருகிறேன். ஆனால், சரண்டர் தொகை மிகக் குறைவாகக் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?

எங்களுக்கு, வரும் செப்டம்பரில் குழந்தை பிறக்கப்போகிறது. பிறக்கும் குழந்தைக்கு 18 வருடங்களில் மேற்படிப்புக்கு ரூ.8 லட்சமும், அடுத்த 22 வருடங்களில் திருமணத்துக்கு ரூ.10 லட்சமும் (இன்றைய மதிப்பில்) சேர்க்க இப்போதிருந்தே முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்.

நான் தற்போது எங்கள் கிராமத்திலேயே சொந்த வீட்டில் வசிக்கிறேன். என் மனைவி அடுத்த மூன்று வருடங்களில் வீட்டுக் கடன் மூலம் புது வீடு வாங்க விரும்புகிறாள். ஆனால், இன்னும் 10 வருடங்கள் கழித்தோ அல்லது என் மனைவி வேலைக்குச் சென்ற பிறகோ நல்ல இடமாக வாங்கி, வீடு கட்டிக்கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். எப்படிச் செய்தால் நல்லது? ஏனெனில், என் மனைவியும் முதுகலைப் படிப்பு முடித்து ஆசிரியர் வேலைக்குப் படித்துவருகிறார். அடுத்த மூன்று வருடங்களில் வேலைக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. தனியார் பள்ளியில் வேலைக்குச் சென்றாலும்கூட ரூ.15 ஆயிரம் சம்பளம் கிடைக்கலாம்.

என்னுடன் என் அப்பாவும் (வயது 62), அம்மாவும் (வயது 51) உள்ளனர். அவர்களுக்கு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். எனக்கும், என் மனைவிக்கும் டேர்ம் பாலிசி மற்றும் ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டும்.

எனக்குக் கிடைக்கும் மொத்தச் சம்பளம் ரூ.50,240. சி.பி.எஸ் ரூ.4,704 பிடிக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் பிரீமியம் ரூ.6,134, கூட்டுறவு வங்கிக் கடன் இ.எம்.ஐ ரூ.10,755, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.4,000, இரண்டு லட்ச ரூபாய் சீட்டுக்கு (இரண்டு சீட்டு) ரூ.13,400, வீட்டுச் செலவு ரூ.10,000, இதர செலவுகள் ரூ.1,000 என மொத்தம் ரூ.49,995 வரை ஆகிறது. எனக்கான ஆலோசனைகளைச் சொன்னால் மகிழ்ச்சியாக முதலீடுகளைத் தொடங்குவேன்” என்றார் அண்ணாமலை.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“பொதுவாகவே எல்லோருக்குமே ஆசைகள் மிக முக்கியம். ஆசை இருந்தால்தான் இலக்கு இருக்கும். இலக்கு இருந்தால்தான் முயற்சி மற்றும் செயல் இருக்கும். இலக்கை நிர்ணயம் செய்து நிதித் திட்டமிடல் செய்பவர்களில் 80% பேர் எல்லா இலக்குகளையும் அடைந்து மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

உங்கள் மனைவி வேலைக்குப் போகும்பட்சத்தில், உங்கள் குழந்தையின் மேற்படிப்பு, திரு மணம், வீடு, ஓய்வுக்காலம் போன்ற அனைத்து இலக்குகளையுமே எளிதாக அடைந்துவிடலாம்.

சீட்டுப் பணத்தை எடுத்து கூட்டுறவு வங்கிக் கடனை அடைத்தபிறகு முதலீட்டுக்கான வாய்ப்பாக ரூ.24,155 இருக்கும். உங்கள் குழந்தையின் மேற் படிப்புக்கு அடுத்த 18 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் தேவையாக இருக்கும். 2020 முதல் 16 வருடங்களுக்கு மாதம் ரூ.4,700 முதலீடு செய்தால், இந்த இலக்கை எட்டலாம்.

அடுத்ததாக வீடு. உங்கள் மனைவி வேலைக்குப் போகும் பட்சத்தில் ரூ.20 லட்சத்துக்குக்கூட வீடு வாங்கலாம். அதற்குமுன்னதாக வீடு குறித்துத் திட்டமிடும்பட்சத்தில் 2020-ல் ரூ.13 லட்சத்துக்கு வீடு கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் ஊரில் ரூ.13 லட்சத்துக்கு, தேவைக் கேற்ப கட்டிக்கொள்ள முடியும். ரூ.13 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், அதற்கான இ.எம்.ஐ ரூ.11,500 செலுத்த வேண்டும் (20 ஆண்டுகள் 8.7% வட்டி விகிதம்).

அடுத்ததாக, ஓய்வுக்காலம். தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் வீட்டுச் செலவு ஆகிறது எனில், உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.58 ஆயிரம் ஆகக்கூடும். அப்படி யானால் கார்ப்பஸ் தொகையாக ரூ.1.6 கோடி தேவை.

உங்களுக்கு சி.பி.எஸ் ஆண்டுக்கு 4% அதிகரிக்கலாம் என்கிற பட்சத்தில், 8.5% வட்டி கிடைக்கும்  நிலையில், ரூ.70 லட்சம் கிடைக்கலாம். மீதம் ரூ.95 லட்சம் சேர்க்க மாதம் ரூ.5,750 முதலீடு செய்ய வேண்டும்.

இந்த மூன்று இலக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.22 ஆகும். மீதமுள்ள ரூ.2,000-த்தை உங்கள் பெற்றோர்களுக்கு ஹெல்த் பாலிசி எடுக்கப் பயன்படுத்திக் கொள்ளவும். அவர்களுக்கு ரூ. 3-4 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் தொகையை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளவும். உங்கள் மனைவி வேலைக்குச் சென்றதும் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் தலா ரூ.40 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளவும்.

நீங்கள் வைத்துள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்ய வேண்டாம். அந்தப் பாலிசிகளின் முதிர்வுத் தொகையை உங்கள் ஓய்வுக் காலத்தில் சுற்றுலா செல்லப் பயன்படுத்திக்கொள்ளவும்.

உங்கள் மனைவி வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்கள் குழந்தையின் திருமணத்துக்கு முதலீட்டைத் தொடங்கிக்கொள்ளலாம். இந்த முதலீட்டை எந்தெந்த ஃபண்டு களில் செய்யலாம் என்பதை அப்போது தெரிந்து கொள்ளுங்கள்.’’

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassets consolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>