நிம்மதி தரும் நிதித் திட்டம் – 33 – எந்த இலக்கு முதலில்..?

ந்தக் காலத்து இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே எதிர்கால இலக்குகளுக்குத் திட்டமிடத் தொடங்கிவிடுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், எந்த இலக்கு முதலில், எந்த இலக்கு இரண்டாவது என்று சரியாக வரிசைப்படுத்துவதில் கொஞ்சம் யோசிக்கத் தவறிவிடு கிறார்கள். துபாயில் பணியாற்றிவரும் சுதாகர், சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதுடன், தனக்கான நிதித் திட்டமிடல் கேட்டு நம்மை அணுகியிருக்கிறார். சுதாகர் நம்மிடம் பேசும்போது…

“நான் விகடன் இதழ்களை பல ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்துவருகிறேன். நிதிச் சார்ந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திவரும் நாணயம் விகடன், என் சம்பாத்தியம், செலவு, எதிர்கால முதலீடு குறித்து ஆழமாக என்னை யோசிக்க வைத்தது.

என் சொந்த ஊர் காரைக்குடி; விவசாயக் குடும்பம். ஊரில் இரண்டு ஏக்கர் அளவில் விவசாய நிலம் உள்ளது. என் வயது 28. என் அப்பா, அம்மா, நான் மற்றும் இரண்டு தங்கைகள்… இதுதான் என் குடும்பம். ஒரு தங்கைக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டாவது தங்கைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். என்  திருமணம் அடுத்த ஆண்டின் மத்தியில் இருக்கக்கூடும்.

நான் மாதம் ரூ.80,000 சம்பளம் வாங்குகிறேன். நான் வீட்டுக் கடன் வாங்கிச் சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளேன். என் தங்கையின் திருமணத்துக்கு இந்த ஆண்டின் இறுதியில் ரூ.3 லட்சமும், என்னுடைய திருமணத்துக்கு அடுத்த ஆண்டின் மத்தியில் ரூ.5 லட்சமும் வேண்டும்.

அடுத்த ஆண்டில் கார் வாங்க ரூ.3 லட்சம் சேர்க்க வேண்டும். 48 வயதில் நான் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளேன். எனவே, அடுத்த 20 வருடங்கள் கழித்து என்னுடைய ஓய்வுக்காலத் தேவைக்கு நான் எவ்வளவு சேர்க்க வேண்டும்..?

ஓய்வுபெற்றதும் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று என் விருப்பம். இதற்கு அன்றைய நிலையில் ரூ.20 லட்சம் தேவையாக இருக்கும். மெடிக்ளெய்ம், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆலோசனைகள் வேண்டும். சரியான நிதித் திட்டமிடல் இருப்பின் நான் முன்கூட்டியே முதலீடுகளைச் செய்ய ஏதுவாக இருக்கும்” என்றவர், தன் வரவு-செலவு தொடர்பான விவரங்களை இ-மெயிலில் நமக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கடன் இ.எம்.ஐ – ரூ.25,000, ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ – ரூ.22,000 (இது இன்னும் ஐந்து மாதங்களில் முடிந்துவிடும்), எஸ்.ஐ.பி முதலீடு -ரூ.2,000, வீட்டுச் செலவுகள் ரூ.15,000, இதரச் செலவுகள் ரூ.1,000. ஆக மொத்தம் ரூ.65,000 போக மீதம் ரூ.15,000.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் இலக்குகளை வரிசைப் படுத்திக்கொண்டால், சிக்கல் இல்லாமல் வாழலாம். தங்கையின் திருமணம், உங்களுடைய திருமணம் என மிகக் குறுகிய காலத்தில் முக்கியமான இலக்குகளை வைத்துக்கொண்டு வீடு வாங்கியிருக்கக் கூடாது. அதுவும் வீட்டுக் கடனை விரைவில் அடைத்துவிட வேண்டும் என்ற நோக்கில், மிகக் குறுகிய கால நோக்கில் வீட்டுக் கடன் வாங்கி யிருக்கிறீர்கள். முதலில், உங்கள் வீட்டுக் கடனை 10 வருடங்கள் செலுத்தும் வகையில் மாற்றிக்கொள்ளுங்கள். இ.எம்.ஐ தொகையை மறுகட்டமைப்புச் செய்யவும். அதன்மூலம் உங்களுக்கு ரூ.8,300 மிச்சமாகும். ஏற்கெனவே மீதமாகும் தொகை ரூ15,000 மற்றும் ரூ.8,300 என ரூ.23,300 உங்களிடம்  இருக்கும்.

உங்கள் தங்கை திருமணம், உங்கள் திருமணம் மிகக் குறுகிய காலத்தில் இருப்பதால், கார் வாங்கும் இலக்கை 2022-க்குப்பிறகு வைத்துக் கொள்ளலாம். உங்கள் வருமானத்துக்குத் துபாயில் 6 சதவிகித வட்டியில் சுலபமாகக் கடன் வாங்க முடியும். எனவே, உங்கள் தங்கையின் திருமணத்துக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்குங்கள்.  அந்தக் கடனை 36 மாதங்களில் திரும்பச்  செலுத்துகிற மாதிரி மாதம் ரூ.9,100 செலுத்த வேண்டும். உங்கள் திருமணத்துக்கு அடுத்த ஆண்டு மத்தியில் ரூ.4.5 லட்சம் கடன் வாங்கிக்கொள்ளவும். இதற்கு மாதம் ரூ.13,700 செலுத்த வேண்டும். உங்களுடைய கடன் இன்னும் ஐந்து மாதங்களில் முடிவடைவதால், அதற்குச் செலுத்திவரும் இ.எம்.ஐ ரூ.22,000-ஐ இந்த இலக்குகளுக்கு ஈடு செய்துகொள்ளலாம்.

உங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். 6 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டியில் கடன் கிடைக்கிற மாதிரி விவசாயக் கடனை வாங்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் தங்கையின் திருமணத்துக்கான கடன் இ.எம்.ஐ செலுத்தியதுபோக, உங்கள் திருமணத்துக் கான கடனை வாங்கும் வரையில் மாதமொன்றுக்கு  ரூ.13,000 வரை சேர்த்து வருவதன் மூலம் உங்கள் திருமணத்துக்கான பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

நீங்கள் ஓய்வுபெறும் காலத்தில் பிசினஸ் செய்ய ரூ.20 லட்சம் வேண்டுமெனில், அதற்கு மாதம் ரூ.2,000 முதலீடு செய்ய வேண்டும். தற்போது எஸ்.ஐ.பி முதலீட்டில் செய்துவரும் ரூ.2,000 ரூபாயை, இந்த இலக்குக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது குடும்பச் செலவுகளுக்கு மாதம் ரூ.15,000 ஆகும்பட்சத்தில், உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.58,000 தேவை. 85 வயது வரை வாழ்நாள் என்ற அடிப்படையில், 7% பணவீக்கம் எனக் கணக்கிட்டால் ரூ2.14 கோடி கார்ப்பஸ் தொகை சேர்க்க வேண்டும். அதற்கு மாதம் ரூ.21,700 முதலீடு செய்யவேண்டும். மற்ற தேவைகளுக்குப் போக உங்களிடம் மீதமிருக்கும் உபரித் தொகை சற்றுக் குறைவாக இருப்பதால், மாதம் ரூ.15,600 முதலீட்டில் ஆரம்பித்து, ஆண்டுக்கு 5% படிப்படியாக அதிகரித்துக்கொள்ளவும்.

அனைத்து இலக்குகளுக்கும் போக உங்களிடம் மாதம் ரூ.7,000 வரை உபரித் தொகை இருக்கக் கூடும். இந்தத் தொகையைக் கொண்டு, உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை எடுத்துக்கொள்ளவும். உங்கள் பெற்றோர்களுக்கு ரூ.3 – 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டு  பாலிசி வாங்கிக்கொள்ளவும்.சிறுசிறு பற்றாக்குறைகளையும், கூடுதல் செலவு களையும் அடுத்தடுத்த வருடங்களில் உங்கள் சம்பள உயர்வைக்கொண்டு சமாளிக்கலாம்.

பரிந்துரை: ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட் ரூ.3,100, மோதிலால் ஆஸ்வால்  மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.2,100, ஆக்ஸிஸ் 25 ஃபண்ட் ரூ.2,100, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஃபண்ட் ரூ.2,100, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.2,100, யூ.டி.ஐ டைனமிக் பாண்ட் ரூ.2,100, ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டியூரஷன் ஃபண்ட் ரூ.2,000.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *