நிம்மதி தரும் நிதித் திட்டம் – 35 – 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா?

‘‘நான் பிசினஸ் தொடங்கப் போகிறேன். இதற்கான முதலீட்டைச் சேர்க்க என்ன வழி..?” எனக் கேட்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தன் குழந்தைகள் பிசினஸ் ஆரம்பிக்கத் தேவையான பணத்தைச் சேர்க்க என்ன வழி என்று கேட்டு, நாணயம் விகடனுக்கு மெயில் அனுப்பியிருந்தார் தங்கராஜ். வித்தியாசமான அவரின் கேள்வியைப் படித்து அவருடன் தொடர்புகொண்டோம்.

“என் வயது 36. கும்பகோணத்தைச் சார்ந்தவன். எனக்குத் திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 5-ம் வகுப்பு படிக்கிறான். இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது.

நான் பன்னாட்டு நிறுவனமொன்றில் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன். என் சம்பளம், மாதம் ரூ.3 லட்சம். செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு மாதம் ரூ.75,000 வரை ஆகும். என் மனைவி குழந்தையுடன் இந்தியாவில் இருக்கிறார்.

இரண்டு குழந்தைகளையும் வளர்க்க என் மனைவியால் மட்டுமே முடியாது என்பதால், நான் 2020 ஜனவரியில் இந்தியாவுக்கு வந்து செட்டிலாக விரும்புகிறேன். நான் இந்தியாவில் வசிக்க மாதம் ரூ.50,000 தேவைப்படும். எனக்கு விவசாயம் செய்யவும், தொடர்ந்து படிக்கவுமே விருப்பம். வேலைக்குச் செல்லும் எண்ணமில்லை. சொந்த வீட்டைக் கடனில்லாமல் கட்டிமுடித்து விட்டேன். எனக்கு நிறுவனமே காப்பீடு வழங்கி உள்ளதால், தனியாகக் காப்பீடு எடுக்கவில்லை. இந்தியா வந்தபிறகு எடுக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்றவர், தன் சொத்துவிவரங்கள், முதலீடுகள், இலக்குகளை மெயில் அனுப்பிவைத்தார்.

 

முதலீடு மற்றும் சொத்து விவரங்கள்

* நிரந்தர வைப்புநிதி: ரூ.95 லட்சம்

* பங்குச் சந்தை முதலீடு: ரூ.5 லட்சம்

* எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.12,000 (கடந்த ஒரு வருடமாக…)

* தஞ்சாவூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் வீட்டு மனை, நாகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் வீட்டுமனை

* ரூ.4 லட்சத்தில் மணிபேக் பாலிசி    இலக்குகள்

* அடுத்த 8 வருடங்களில் மகனின் மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம்

* அடுத்த 18 வருடங்களில் மகனின் திருமணத்திற்கு ரூ.10 லட்சம்

* அடுத்த 18 வருடங்களில் மகனின் அல்லது மகளின் மேற்படிப்புக்கு ரூ.15 லட்சம்

* அடுத்த 24 வருடங்களில் மகனின் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.20 லட்சம்

* அடுத்த 5 வருடங்களில் தஞ்சை மனையில் ரூ.25 லட்சத்தில் ஒரு வீடு

* 2020 ஜனவரியிலிருந்து மாதம் செலவுக்கு 50,000 ரூபாய்.

* 2020 ஜனவரியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கார்

* குழந்தைகள் இருவருக்கும் 30-35 வயதில் தொழில் ஆரம்பிக்க மற்றும் வீடு கட்ட தலா ரூ.1 கோடி

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“ஒரே நேரத்தில் பல எலிகளைத் துரத்தினால், உங்களால் ஓர் எலியைக்கூடப் பிடிக்க முடியாது என்பது ஆங்கிலப் பழமொழி. நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களுக்கு  ஆசைப்படுகிறீர்கள். 40 வயதுக்குள் ஓய்வு, குழந்தைகளுக்குத் தொழில் தொடங்க முதலீடு எனப் பல இலக்குகளை  வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பும் காலகட்டத்தை 2020-க்குப் பதிலாக 2022 என மாற்றிக்கொண்டால் உங்கள் இலக்குகளை ஓரளவு அடையலாம்.

இரண்டு குழந்தைகளின் மேற் படிப்பு மற்றும் குழந்தைகளின் திருமணம், கார் வாங்குதல் போன்ற ஐந்து இலக்குகளுக்காக, நீங்கள் எஃப்.டி-யில் வைத்துள்ள ரூ.95 லட்சத்தில் ரூ.60 லட்சத்தை ஒதுக்கி, அதற்கென முதலீடு செய்து கொள்ளலாம்.

அடுத்து, உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் தேவை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். சொந்த வீடு இருக்கும்பட்சத்தில் உங்கள் ஊரில் வசிக்க மாதம் ரூ.40 ஆயிரமே தாராளமாகப் போதும்.  மாதம் ரூ.40 ஆயிரம் என்ற அடிப் படையில், 85 வயது வாழ்நாள் எனக் கணக்கிட்டால் 2023-ல் உங்களுக்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.1.73 கோடி தேவை.

உங்களிடம் எஃப்.டி-யில் மீதமுள்ள ரூ.35 லட்சத்தை 12% வரு மானம் வரும் வகையில் முதலீடு செய்தால், நான்கு ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கிடைக்கும். இன்னும் ரூ.1.18 கோடி சேர்க்க வேண்டும். தற்போது உங்கள் சம்பளத்தில் ரூ.2.25 லட்சம் மீதமாவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் ரூ.1.93 லட்சத்தை முதலீடு செய்துவந்தால், நான்கு ஆண்டுகளில் ரூ.1.18 கோடி கிடைக்கும்.

மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தை அப்படியே சேர்த்துவரவும். 2023-ல் ரூ.18.3 லட்சம் கிடைக்கும். இதனை அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும்.

தற்போது செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீடுகளைத் தொடர்ந்து செய்துவந்தால் நான்கு ஆண்டுகளில் ரூ.9.7 லட்சம் கிடைக்கும். இதனை நீங்கள் உங்களின் படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும். மற்ற இலக்குகளுக்குப் பற்றாக்குறை ஏதும் வந்தால் இந்தத் தொகை யிலிருந்து பயன்படுத்திக் கொள்ளவும்.

விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தை அப்படியே சேர்த்து வரவும். இதனுடன் பங்குச் சந்தை, இன்ஷூரன்ஸில் உள்ள தொகை களையும் சேர்த்து இன்னொரு வீடு கட்ட அவசியம் என்றால் கட்டிக்கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் ஆண்டுதோறும் சுற்றுலா செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டதுபோக, உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணத்துக்குக் கூடுதலாகப் பணம் தேவைப்பட்டால் பயன் படுத்திக்கொள்ளவும். இந்தியாவுக்கு வந்தபிறகு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.5 – 7 லட்சத்துக்கு எடுத்துக்கொள்ளவும்.

உங்கள் குழந்தைகளின் இலக்கு தெளிவாகத் தெரியவரும்போது,  அவர்களின் பிசினஸுக்கு  முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அன்றைய நிலையில் உங்கள் வாழ்க்கை நிலையும் இன்னும் மேம்பட்டிருக்கும் என்பதால், அப்போதைக்குப் பார்த்துக் கொள்ளலாம்.

 பரிந்துரை: 

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ரூ.5,70,000, எஸ்.பி.ஐ புளூசிப் ரூ.5,70,000, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் ஃபண்ட் ரூ.11,40,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.11,40,000, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஃபண்ட் ரூ.11,40,000, எடெல்வைஸ் மிட்கேப் ரூ.11,40,000, செல்வமகள் திட்டம் ரூ.1,50,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூல் ரூ.13,00,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.7,75,000, ஆதித்ய பிர்லா கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் ரூ.12,90,000, கோட்டக் கோல்டு ஃபண்ட் 2,85,000.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy
 (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *