
ராம், இ-மெயில் மூலம்.
என் வயது 47. ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறேன். நான் பின்வரும் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அந்தத் திட்டங்கள் இதோ… ஆதித்யா பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் (ரூ.2,500), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் (ரூ.5,000), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மல்ட்டிகேப் ஃபண்ட் (ரூ.2,500), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நாஸ்டாக் 100 இண்டெக்ஸ் ஃபண்ட் (ரூ.2,500), கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட் (ரூ.2,500), மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் (ரூ.5,000), மிரே அஸெட் மிட்கேப் ஃபண்ட் (ரூ.5,000) ஆகியவற்றில் மாதம்தோறும் மொத்தம் ரூ.25,000 முதலீடு செய்கிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது நான் ஃபண்டு களை மறுசீரமைக்க வேண்டுமா..?
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“ஆதித்ய பிர்லா டாக்ஸ் ரிலீஃப் ஃபண்டின் செயல்பாடு சில வருடங்களாகவே திருப்திகரமாக இல்லை. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் முதலீடு 48% உள்ளது. இருப்பினும் ரிஸ்க்- ரிட்டர்ன் திருப்திகரமாக இல்லை. ஆகையால், இதை விற்றுவிடவும்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மல்ட்டிகேப் ஃபண்ட் ஃபண்டின் செயல்பாடு உற்சாகமாக இல்லை. 58% மிட், ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள், இருப்பினும் இந்த ஃபண்ட் எடுக்கும் ரிஸ்க்குக்கு அதன் வருமானம் ஈடு கொடுக்கவில்லை. ஆகையால், இந்த ஃபண்டையும் விற்றுவிடவும்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நாஸ்டாக் 100 இண்டெக்ஸ் ஃபண்ட் பல வருடங்களாக நல்ல ஒரு வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. கடந்த 6 – 9 மாதங்களாக இதன் செயல் பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அது முதலீடு செய்யும் பங்குகள் நன்றாக இருப்பதால், நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும்பட்சத்தில் இதைத் தொடரவும்.
கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட் நன்றாக வருமானம் ஈட்ட செய்கிறது. அதில், தொடர்ந்து முதலீடு செய்து வரவும். மிரே லார்ஜ்கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டாக சரியாகச் செயல்படவில்லை. இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் அதன் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால், தொடர்ந்து முதலீடு செய்து வரவும்.
மிரே மிட்கேப் இன்னும் மூன்று ஆண்டுகள் பூர்த்தி செய்யவில்லை. இன்னும் ஓராண்டுக் காலம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் அதன் செயல்பாடு திருப்தி இல்லை, என்றால் வெளியேறிவிடலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புளூசிப் தொய்வான செயல்பாட்டில் இருந்தது; அந்தக் குறையை நிவர்த்தி செய்தவடன் கடந்த ஓராண்டில் அதன் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆகையால், இப்போது தொடர்ந்து முதலீடு செய்து வரவும் அதன் வருமானம் லார்ஜ்கேப் இண்டெக்ஸை விட 2% குறைவாக இருந்தால் இண்டெக்ஸ் ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிவிடவும்.”
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 21.05.2022 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.