
ராஜன், சென்னை.
என் வயது 30. ஐ.டி துறையில் வேலை பார்க்கிறேன். நான் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளம் மாதம் ரூ.1 லட்சம். என் 45 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன். என் ஓய்வுக் காலத்தில் பென்ஷன்போல் நிலையான தொகை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“மருத்துவத் துறையின் முன்னேற்றத்தால் மக்கள் ஆயுள் காலம் நீண்டு வருகிறது. சராசரியாக 85 வயது வரை வாழக்கூடும். அடுத்த 15 ஆண்டுகளில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு 40 ஆண்டுகள் வாழ வேண்டும்.இது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால், சராசரியாக இப்போது கணவன் – மனைவி இருவருக்கும் சேர்ந்து ரூ.40,000 மாதம் செலவாகும் எனில், அது 15 ஆண்டுகள் கழித்து 88,300 ரூபாயாக இருக்கும் (தோராயமாகப் பணவீக்கம் 7% எனக் கணக்கிட்டால்).
இந்தத் தொகை மாதம்தோறும் நமக்கு கிடைக்க வேண்டுமெனில், 45 வயதில் ஓய்வு பெறும்போது உங்களிடம் இருக்க வேண்டிய தொகை ரூ.4.34 கோடி. அதை அடுத்த 15 ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் எனில், மாதம் ஒன்றுக்கு நீங்கள் ரூ.87,000 சேர்த்து வர வேண்டும். அப்படிச் சேரும் தொகைக்கு 12% வருமானம் கிடைத்தால், உங்களது இந்த ஓய்வுக்கால இலக்கை அடைய முடியும்.
உங்களுக்கு இப்போதைக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தத் தொகையைச் சேர்ப்பது கடினம். நீங்கள் 50 வயதில் ஓய்வு பெற நினைத்தால், உங்களிடம் ஓய்வுக்கான தொகை ரூ.5.46 கோடி இருக்க வேண்டும். அதை அடைவதற்கு மாதம்தோறும் நீங்கள் ரூ.55,200 முதலீடு செய்ய வேண்டும். அல்லது தற்போது மாதம்தோறும் ரூ.30,000 செய்யத் தொடங்கி, அதை ஆண்டுக்கு 10% அதிகரித்து, அதற்கு ஆண்டுதோறும் 12% வருமானம் கிடைத்தால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான தொகுப்பு நிதி கிடைக்கும். அப்போது நீங்கள் 50 வயதில் ஓய்வு பெறலாம்.”
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 02.04.2022 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.