
ஃபண்ட் பரிந்துரை
சரியான ஆலோசனை
நான் என் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக தலா ரூ.2,000 வீதம் 2015-ம் ஆண்டு முதல் எஸ்.ஐ.பி முறையில் கீழ்க்காணும் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடுகள் சரியானவையா..? என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி டைனமிக் பாண்ட் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி டைனமிக் ஈக்விட்டி வேல்யூ ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி நிஃப்டி ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், மிரெ அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், நிப்பான் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட். மேலும் என் கணவர் வருமான வரி விலக்குக்காக டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட், மிரெ அஸெட் டாக்ஸ் சேவர் பண்ட், நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார். இந்த முதலீடுகள் சரியானவையா?
– ஆனந்தி, மதுரை-2
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் டைவர்சிஃபிகேஷன் மிகவும் முக்கியமானது. அவ்வாறு செய்யும்போது, மார்க்கெட்டில் ஏற்ற இறக்கம் இருக்கும்போது உங்களுக்கு பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும். அதற்காக 19 ஃபண்டுகளில் முதலீட்டை வைத்திருப்பது டைவர்சிஃபிகேஷன் கிடையாது. அத்துடன் உங்களிடமிருக்கும் ஃபண்டுகளைக் கண்காணிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இரண்டு லார்ஜ்கேப், இரண்டு மல்டிகேப், இரண்டு மிட்கேப் மற்றும் இரண்டு ஸ்மால்கேப் என்ற அடிப்படையில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும். இது வரிச் சேமிப்பு முதலீட்டுக்கும் பொருந்தும்.
ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் புதிதாக முதலீட்டைத் தொடங்கவும். மேலும், உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொண்டு, மற்ற ஃபண்டுகளை விற்றுவிடவும். மார்க்கெட் இறக்கத்திலிருப்பதால் நிறைய பங்குகள் மிகவும் அட்ராக்டிவாக உள்ளன. இந்த வேளையில் வேல்யூ ஃபண்டைவிட குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உங்கள் கணவர் செய்துவரும் ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”
அதிக அளவிலான ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை வைத்திருப்பது டைவர்சிஃபிகேஷன் கிடையாது.
என் வயது 35. என் நான்கு வயது மகனுடைய எதிர்காலத் தேவைக்காக ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.500, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.2,000, பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.1,000 ஆகியவற்றில் 2019-ம் ஆண்டிலிருந்து நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துவருகிறேன்.
என் முதலீடுகள் குறித்து தகுந்த ஆலோசனைகள் கூறவும்.
– குணசேகர், திருப்பூர்.
“உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு சரியாக இல்லை. அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மிரே ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டில் முதலீட்டைத் தொடங்கவும். மற்ற ஃபண்டுகளின் முதலீட்டை அப்படியே தொடரவும்.”
நான் 2016-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் என் மகனின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்து வருகிறேன். மாதந்தோறும் 10,000 ரூபாயை 10 ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்கிறேன். என் இலக்கு 15 ஆண்டுகள். ஆறு ஃபண்டுகள் சரியான வருமானம் தரவில்லை. என்ன செய்யலாம்?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ், டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர் ஃபண்ட், எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட், யூ.டி.ஐ எம்.என்.சி ஃபண்ட்.
– பாஸ்கரன், நாமக்கல்
“உங்கள் போர்ட்ஃபோலியோ நல்லதொரு கட்டமைப்பில் இல்லை. சில ஆண்டுகள் லார்ஜ்கேப் குறைவாக வருமானம் கொடுக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டோ அல்லது நீண்டகால இலக்குகள் என்று நினைத்துக்கொண்டோ லார்ஜ்கேப் ஃபண்டுகளைத் தவிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் ஃபண்டின் செயல்பாடு நன்றாக இல்லை. அதை நிறுத்திவிடவும். அதேபோல் ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகளையும் நிறுத்திவிடவும். அவற்றுக்கு பதிலாக ஐ.டி.எஃப்.சி எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

நான் வெளிநாட்டில் பணியாற்றிவருகிறேன். அக்டோபர் 2019 முதல் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் சில முதலீடுகளைச் செய்து வருகிறேன். என் வயது 34. நான் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் சேர்க்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் இந்த முதலீடுகளைச் செய்துவருகிறேன். இலக்கை அடைய என் முதலீடுகள் சரியானவைதானா?
என் முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,500, நிப்பான் இந்தியா லிக்விட் ஃபண்ட் ரூ.2,000. தவிர கூடுதலாக ரூ.6,500 முதலீடு செய்ய முடியும். என் முதலீட்டு போர்ட்ஃபோலியோ சரியா?
– வி.ராஜேஷ், மெயில் மூலமாக
“பலரும் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைத்து, அதற்கான திறனை வளர்த்துக்கொள்ளாமல் முதலீடுகளைச் செய்கிறார்கள். இது நீண்டகால சேமிப்புக்கு உகந்தது அல்ல. உதாரணமாக, உங்கள் போர்ட்ஃபோலியோவில் மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப், கனரா ராபிக்கோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஆகிய மூன்றும் மல்டிகேப் அடிப்படையில் முதலீடு செய்கின்றன. உங்களுக்கு மிட்கேப்பில் முதலீடு இல்லை. அதேபோல் லார்ஜ்கேப்பிலும் முதலீடு இல்லை. நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்யும்பட்சத்தில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்வது என்பது உங்கள் இலக்குகளை அடைய உறுதுணையாக இருக்காது. நீங்கள் 50 லட்சம் ரூபாயை இன்னும் 10 ஆண்டுகளில் அடைய வேண்டுமென்றால், மாதந்தோறும் ரூ.21,700 முதலீடு செய்ய வேண்டும். அதற்கு உங்கள் முதலீடுகள் 12% வருமானம் கொடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் உங்கள் முதலீட்டுத் தொகைக்கேற்ப உங்கள் போர்ட் ஃபோலியோவை அட்டவணையில் பரிந்துரைத்தபடி மாற்றிக்கொள்ளவும். நீண்டகால முதலீடு என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை கண்காணிக்கப்பட வேண்டும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியாThis article was published in Nanayam Vikatan on 22/03/2020 written by Mr. Suresh Parthasarathy.