
ஃபண்ட் கிளினிக்
சிறிய முதலீட்டாளர்களும், தன்னிச்சையாக முதலீடு செய்பவர்களும் கட்டாயம் அஸெட் அலொகேஷனைப் பின்பற்ற வேண்டும்.
நான் கடந்த இரண்டு வருடங்களாக பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறேன். எனது இலக்கு ரூ.50 லட்சம். குழந்தையின் படிப்புக்காக அடுத்த ஏழு வருடங்கள் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
என் முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.13,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃபோகஸ்டு ஈக்விட்டி ரூ.4,000. நான் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?
– குமாரவேல், சென்னை
“நீங்கள் கன்சர்வேட்டிவ் முதலீட்டாளராக இருந்தால், உங்கள் போர்ட்ஃபோலியோவில் மாறுதல் ஏதும் தேவையில்லை. குழந்தையின் மேற்படிப்புக்கு இன்னும் ஏழு ஆண்டுகாலம் இருப்பதால், நீங்கள் சிறிது ரிஸ்க் எடுக்க முடியும். எனவே, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.9 ஆயிரம் மட்டும் முதலீடு செய்யவும். மீதமுள்ள 4,000 ரூபாயை கோட்டக் எமெர்ஜிங் பிசினஸஸ் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளைத் தொடரவும்.”
என்னுடைய வயது 31. நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் ரூ.20,000 முதலீடு செய்து வருகிறேன். அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு என்னுடைய முதலீட்டுத் தேர்வுகள் சரியாக இருக்கின்றனவா..?
என் முதலீடுகள்… டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.3,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் சேவர் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ரூ.1,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,500, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.1,500, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,500, எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.1,500, பிரின்சிபல் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,500, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் ரூ.1,000.
– ரவீந்திரன், கோயம்புத்தூர்
“மாதம் ரூ.20,000 முதலீடு செய்து வந்தால், அத்துடன் அது 11% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 15 ஆண்டுகளில் அது ரூ.91 லட்சமாக இருக்கும். நீங்கள் ரூ.1 கோடி இலக்கை அடைய வேண்டும் என்றால், மாதம் ரூ.22,000 முதலீடு செய்ய வேண்டும்.
பரவலாக முதலீட்டாளர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அவற்றின் அஸெட் அலொகேஷன் பார்ப்பதில்லை. ஆகையால், அது ஒரு முழுமையான போர்ட்ஃபோலியோவாக அமைவதில்லை.
உங்கள் முதலீட்டைப் பிரித்துப் பார்க்கும் போது, நீங்கள் முதலீடு செய்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் 20% மட்டுமே மிட்கேப்பில் உள்ளது. இது நீண்டகால போர்ட்ஃபோலியோவுக்கு ஏற்றதாக இல்லை.
வருங்காலத்தில் நீங்கள் முதலீட்டை அதிகரிக்கும்பட்சத்தில், அதை மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் மாறுதல் ஏதும் செய்யத் தேவையில்லை. புதிதாக நீங்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருந்தால், கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்யவும். அது உங்களிடம் இருக்கும் இரண்டு டாக்ஸ் சேவர் ஃபண்டுகளைவிடவும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது.”

என் வயது 42. தொடர்ந்து நாணயம் விகடன் படித்துவருகிறேன். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.20,000 முதலீடு செய்துவருகிறேன். என் போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்து சொல்லவும்.
ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிவிடெண்ட் யீல்டு ஃபண்ட் ரூ.1,500, எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி அஸெட் ஃபண்ட் ரூ.2,000.’’
-கண்ணன், மெயில் மூலமாக
“சிறிய முதலீட்டாளர்களும், தன்னிச்சையாக முதலீடு செய்பவர்களும் கட்டாயம் அஸெட் அலொகேஷனைப் பின்பற்ற வேண்டும்.
ஏனென்றால், மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் அவர்களுக்கு உதவி செய்ய ஆலோசகர் இல்லாதபட்சத்தில் அவர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது.உங்கள் போர்ட் ஃபோலியோவில் மல்டிகேப் உள்ளது; லார்ஜ்கேப்பும் உள்ளது. அத்துடன் வேல்யூ ஃபண்ட் உள்ளது. நீங்கள் முதலீடு செய்திருக்கும் இரண்டு ஃப்ராங்க்ளின் ஃபண்டுகளும் மல்டிகேப் அப்ரோச்சில் முதலீடு செய்யக்கூடியவை. இது டைவர்சிஃபிகேஷன் அல்ல. எனவே, இந்த ஃபண்டுகளுக்கு பதிலாக கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் போன்றவற்றில் முதலீட்டை மாற்றிக் கொள்ளவும்.”
எனக்கு 42 வயது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். நான் இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு அதிக ரிஸ்க்கையும், ஐந்து ஆண்டுகளுக்கு நடுத்தரமான ரிஸ்க்கையும் எடுக்கத் தயாராக இருக்கிறேன். எனக்குத் தகுந்த ஆலோசனை வழங்கவும்.
என் முதலீடுகள்… டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் ரூ.5,000, ஹெ.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 35 ஃபண்ட் ரூ.10,000.
கடந்த மார்ச் முதல் ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆஸிஸ் மிட்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். தகுந்த ஆலோசனை தரவும்.
– சுதாகர், பெங்களூரு
“ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் போது அதில் ரிஸ்க் அளவீடு சமமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் குழந்தையின் படிப்புக்கு மூன்றரை ஆண்டுகள் கழித்து பணம் தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதை டெப்ட் மியூச்சுவல் ஃபண்டில் டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுடைய பணம் அந்த குறிப்பிட்ட இலக்குகளுக்குச் சரியாக போய் சேரும்.
அதற்கு பதிலாக மூன்றாண்டுக் காலத்துக்கு ஒரு ரிஸ்க் புரொஃபைல், ஐந்து ஆண்டுகளுக்கு இன்னொரு ரிஸ்க் புரொஃபைல் வைத்துக்கொள்வது சரியான அணுகுமுறையல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் இரண்டையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளை அப்படியே தொடருங்கள்.’’
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 24.05.2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.