
ஃபண்ட் கிளினிக்
சிறிய அளவில் முதலீடு செய்யும்போது செக்டார் அல்லது தீம் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது!
எனக்கு வயது 39. நான் கடந்த ஆறு மாதங்களாகப் பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ரூ.2,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் மகளின் எதிர்காலத்துக்காகவும், என் ஓய்வுக்காலத்துக்காகவும் இந்த முதலீடுகளைச் செய்துவருகிறேன். என் முதலீட்டில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்… ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பேங்க்கிங் அண்ட் பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட், எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட், டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட்.
– ராஜ்மோகன், சென்னை.
“உங்களுடைய இலக்குகளெல்லாம் நீண்டகாலத்துக்கானவை. ஆனால், உங்கள் முதலீட்டில் இரண்டு லார்ஜ்கேப் ஃபண்டுகளும், இரண்டு டாக்ஸ் சேவிங் ஃபண்டுகளும் உள்ளன. இவை லார்ஜ்கேப்பில் அதிக அளவில் முதலீடு செய்வதாக உள்ளன. மீதமுள்ள மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் ஃபண்டும் லார்ஜ்கேப் வகைதான். எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் எல்லாமே லார்ஜ்கேப்பாக இருப்பதால், வருமானம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆண்டு வரி சேமிப்புக்காக முதலீடு செய்யும்போது மிட் அண்ட் ஸ்மால்கேப்பில் முதலீடு செய்யும் ஃபண்டைத் தேர்வு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளைத் தொடரவும்.”
நான் நீண்டகால முதலீட்டாளர். நான் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். இந்த ஃபண்டுகள் என் இலக்குகளை நிறைவேற்றத் தகுந்தவையா?
என்னுடைய முதலீடுகள்… எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000.
– செல்வகுமார் ஜாக்ஸன், மெயில் மூலமாக
“நீங்கள் இப்போது முதலீடு செய்துவரும் எஸ்.பி.ஐ மிட்கேப் ஃபண்ட் மற்றும் ஆதித்ய பிர்லா ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய இரண்டையும் நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் மற்றும் கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். மற்றபடி இப்போது முதலீடு செய்துவரும் மற்ற ஃபண்டுகளை அப்படியே தொடரலாம். எஸ்.பி.ஐ மிட்கேப் மற்றும் ஆதித்ய பிர்லா ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டுகளை மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது விற்றுவிட்டு, அவற்றின் மூலம் வரும் தொகையை இனி நீங்கள் தொடங்கவிருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”

15 ஆண்டுகள் முதலீட்டு இலக்கில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள் சரியானவையா?
என்னுடைய முதலீடுகள்… மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.2,500, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.500, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் பார்மா ஃபண்ட் ரூ.1,000, மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 ஃபண்ட் ரூ.500, சுந்தரம் ஸ்மார்ட் நிஃப்டி 100 ஃபண்ட் ரூ.500.
– ஆர்.மணாளன், மெயில் மூலமாக
“பொதுவாக, சிறு முதலீட்டாளர்கள் செக்டார் அல்லது தீம் ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், குறிப்பிட்ட சில ஆண்டுக்காலம் அவற்றின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கக்கூடும். அப்போது அந்த ஃபண்டுகளை விட்டு வெளியேறும் போது இழப்பு ஏற்படும். அதேவேளையில், நீங்கள் முதலீடு செய்து வரும் மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் நல்ல வருமானம் தந்துள்ளது. காரணம், அமெரிக்கப் பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்த ஒரு காலகட்டம் அது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நீங்கள் முதலீடு செய்துவரும் பார்மா ஃபண்ட் பெரிய அளவில் வருமானம் தரவில்லை. ஆனால், இனி அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இது நல்ல முதலீடாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் முதலீட்டை அப்படியே தொடரலாம். உங்களால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியுமென்றால், சுந்தரம் நிஃப்டி 100 ஃபண்டை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் சொத்து உருவாக்கத்துக்காகப் பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் தலா ரூ.2,000 முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்… ஐ.சி.ஐ.சி.ஐ ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட், கோட்டக் கோல்டு ஃபண்ட். என் போர்ட்ஃபோலியோவில் மாற்றம் செய்ய வேண்டுமா..?
– எஸ்.பி.பாலஸ்வாமிநாத், மெயில் மூலமாக
“உங்கள் போர்ட் ஃபோலியோவில் இரண்டு மாற்றங்கள் வேண்டும். வேல்யூ ஃபண்டுகள் நீண்டகால முதலீட்டுக்கானவை. பங்குச் சந்தை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து காளையின் பிடியில் இருந்தாலும்கூட, வேல்யூ ஃபண்டுகள் நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தைத் தராது. அந்தச் சூழ்நிலையில் நீங்கள் அவற்றை விற்று வெளியேற வாய்ப்புள்ளது. எனவே, ஐ.சி.ஐ.சி.ஐ டிஸ்கவரி ஃபண்டுக்கு பதிலாக கனரா ராபிகோ எனர்ஜி ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
என வயது 44. `அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.3 கோடி சேர்க்க வேண்டும்’ என்பது என் இலக்கு. இதற்காக 2018, ஜனவரி முதல் எஸ்.ஐ.பி முறையில் நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவைதானா?
என் முதலீடுகள்… ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.3,500, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.1,500, இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட் ரூ.10,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000.
– சதீஷ் பெருமாள், சென்னை
“உங்கள் இலக்கான 3 கோடி ரூபாயை அடைய வேண்டுமென்றால், நீங்கள் மாதம் ரூ.1.3 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீட்டுக்கு ஓராண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்க வேண்டும். ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டுகள் மிகவும் சுமாரான செயல்பாட்டில் உள்ளன. ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, இவை இரண்டையும் நிறுத்திவிடவும். அவற்றுக்கு பதிலாக, ஆக்ஸில் புளூசிப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட், இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடங்கவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 14.6.2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.