
முதலீடு
தொடர்ந்து முதலீடு செய்வது நல்ல விஷயம். அதே நேரம் முதலீடு செய்யும் ஃபண்டுகளின் செயல்பாட்டைக் கண்காணித்து வரவேண்டும்!
என் வயது 32. நான் தலா ரூ.2,000 வீதம் ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் இலக்கு 55 வயதில் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும். என் முதலீடுகளில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா..?
என்னுடைய முதலீடுகள்… பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பிரைமா ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட், மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ரிலையன்ஸ் லார்ஜ்கேப் ஃபண்ட்.
– மதுமிதா, மயிலாடுதுறை
“உங்களுடைய இலக்கான ரூ.1 கோடியை அடைவதற்கு மாதம் ரூ.6,850 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், உங்களுடைய மாதச் செலவு தற்போது ரூ.20,000 எனில், நீங்கள் ஓய்வு பெறும்போது 55 வயதில் ரூ.2.93 கோடி கார்ப்பஸ் தொகை தேவைப்படும்.
நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிப்பான் லார்ஜ்கேப் ஃபண்ட் இரண்டையும் நிறுத்திவிடவும்.
அதேபோல், ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்டின் செயல்பாட்டில் தொய்வு உள்ளது. எனவே, அதையும் நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் மற்றும் எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”
நான் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் ஓரளவுக்கு நடுத்தரமான அளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய முதலீடு அடுத்த 20 ஆண்டுகள் இலக்கைக் கொண்டவை. நான் ஓய்வுக் காலத்துக்காகவும், குழந்தைகளின் எதிர் காலத்துக்காகவும் முதலீடு செய்து வருகிறேன். என் போர்ட்ஃபோலியோவில் ஏதாவது மாறுதல் தேவையா..?
என்னுடைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.1,500, எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட் ரூ.1,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட் ரூ.1,500, டாடா குவான்டம் ஃபண்ட் ரூ.500.
– டி.ராஜ்குமார், நாமக்கல்
“நீங்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய நினைப்பது மிகவும் நல்ல விஷயம். அதே நேரம் நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளின் செயல்பாட்டைக் கண்காணித்து வரவேண்டும். ஆண்டு ஒன்றுக்கு இரண்டு முறை தவறாமல் உங்களுடைய முதலீட்டைப் பார்க்கவும். இப்போதுள்ள முதலீட்டில் இரண்டு மாற்றங்களைப் பரிந்துரை செய்கிறேன். எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட் மற்றும் மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட் இரண்டையும் நிறுத்திவிடவும். அவற்றுக்குப் பதிலாக மோதிலால் ஹவுஸ் ஒன் ஃபோகஸ்டு 25 மற்றும் யூ.டி.ஐ மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”
என் வயது 31. நான் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் 2,500 ரூபாய் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டிலும், 1,000 ரூபாய் மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்டிலும், 500 ரூபாய் ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்டிலும் முதலீடு செய்து வருகிறேன். எனது ஃபோர்ட் ஃபோலியோவில் மாற்றம் செய்ய வேண்டுமா..? கூடுதலாக ரூ.2,000 முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் ஆலோசனை சொல்லுங்கள்.
– ஆறுமுகம், மெயில் மூலமாக
“இப்போது உள்ள போர்ட்ஃபோலியோவை அப்படியே தொடரவும். நீங்கள் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் பிளானை டாக்ஸ் சேவிங் செய்வதற்காக முதலீடு செய்தால் அப்படியே தொடரவும். இல்லையென்றால், மாற்றியமைக்கவும். கூடுதலாக முதலீடு செய்யும் தொகையை கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டில் ரூ.1,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.1,000 என முதலீடு செய்யவும்.”
என் வயது 37. பல ஃபண்டுகளில் நண்பர்கள் கூறினார்கள் என்று கேட்டு முதலீடு செய்துவிட்டு நஷ்டமடைந்தேன். நீண்டகால நோக்கில் சொத்து சேர்க்கவும் ஓய்வுக் காலத்துக்காகவும் ஒரு வருடமாகப் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என்னுடைய ஃபோர்டஃ்போலியோ சரியாக உள்ளதா என்று கூறவும். என் முதலீடுகள்… மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.10,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.10,000, கோட்டக் மல்ட்டிகேப் ஃபண்ட் 5,000, டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, யூ.டி.ஐ கில்ட் ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.10,000, கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கிங் ஃபண்டில் ஒருமுறை முதலீடு ரூ.1,00,000 (30% நஷ்டத்தில் உள்ளது).
– பிரசன்னா, மெயில் மூலமாக
“பேங்கிங் செக்டாரைப் பொறுத்தவரை, இந்தக் கொரோனா காலகட்டத்தில் பாதிப்பும் அதிகம். எனவே, பேங்கிங் ஃபண்ட் வீழ்ச்சி அதிகமாக உள்ளது. இன்னும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு, அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரியலாம். அதுவரை பொறுமை காத்து முதலீட்டை அப்படியே தொடரலாம். மீதமுள்ள ஃபண்டுகளில் இன்றைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் தேவையில்லை.”
என் வயது 38. கடந்த மூன்று ஆண்டுகளாக மாதம்தோறும் ரூ.10,000 மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் எதிர்கால நலனுக்காகவும், 55 வயதில் ஓய்வு பெற்ற பிறகான தேவைக்காகவும் முதலீடு செய்துவருகிறேன். நடுத்தரமான அளவுக்கு என்னால் ரிஸ்க் எடுக்க முடியும். தற்போது எஸ்.ஐ.பி-யில் ரூ.20,000 முதலீடு செய்துவரும் நிலையில், கூடுதலாக மாதம்தோறும் ரூ.10,000 முதலீட்டை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
என்னுடைய முதலீடுகள்… கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.2,000.
– கே.கார்த்திக், மெயில் மூலமாக
“ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளை நிறுத்திவிடவும். இவற்றுக்கு பதிலாக இன்வெஸ்கோ மிட்கேப் மற்றும் எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். கூடுதலாக ரூ.10,000 முதலீடு செய்ய நினைத்தால், அதை சரியாகப் பிரித்து இப்போது பரிந்துரைத்துள்ள ஃபண்டுகளிலும், ஏற்கெனவே உள்ள ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவும்.”
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?
finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 23.08.2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.