ஓவியம்: ராஜேந்திரன்
‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும் நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது.
‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல் அதிக வட்டிக்குக் கடனை வாங்குவார்கள். நிறைய கடனை வைத்துக்கொண்டு பெரிய கனவுகளைக் காண்பார்கள். அந்த வரிசையில் ரவியும் ஒருவர் என்பதை அவர் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளலாம். ரவி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.
“நான் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினீயராக இருக்கிறேன். என்னுடைய மாதச் சம்பளம் ரூ.42,500.
என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். எங்களுடன் என் அம்மா இருக்கிறார். அவருக்கு பென்ஷன் தொகை ரூ.2,000 வருகிறது.
பெரிய பிசினஸ் செய்ய வேண்டும் எனக்கு ஆசை. எனக்குச் சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பில் வீடு உள்ளது. அதன்மூலம் வாடகை வருமானமாக ரூ.6,000 வருகிறது.
பர்சனல் லோன் ரூ.1.7 லட்சம் அம்மாவின் மருத்துவச் செலவுகளுக்காக 2016-ல் வாங்கினேன். மாதம் ரூ.3,855 இ.எம்.ஐ செலுத்திவருகிறேன். இந்தக் கடன் ஜூன் 2022-ல் முடிவடையும்.
கடந்த ஆண்டு என்னுடைய திருமணச் செலவுகளுக்காக வீட்டு அடமானக் கடனாக 10.14% வட்டியில் ரூ.5 லட்சம் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.5,642 செலுத்தி வருகிறேன்.

இரண்டு மாதங்களுக்குமுன் ரூ.2 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்க 18% வட்டியில் கடன் வாங்கினேன். இதற்கான இ.எம்.ஐ ரூ.7,250. இந்தக் கடன் 2021-ல் முடிவடையும்.
சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, நான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அருகில் வாடகைக்குக் குடியிருக்கிறேன். வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், கடன் இ.எம்.ஐ என ரூ.34 ஆயிரம் வரை மாதம் செலவாகிறது.
தற்போது 11.69% வட்டியில் பர்சனல் லோன் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஐந்து ஆண்டுகளில் செலுத்தும் வகையில் ரூ.3 லட்சம் வாங்கி, ஏற்கெனவே உள்ள பர்சனல் லோனையும், கார் லோனையும் அடைத்துவிடலாம் என நினைக்கிறேன். இது சரியா..?
அடுத்து, என் சம்பளம் ஆண்டு தோறும் சுமார் 20% வரை உயர வாய்ப்புள்ளது. அடுத்த மூன்றாண்டு களில் கடன் அனைத்தையும் செலுத்தி முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கும்.
அடுத்த மூன்றாண்டுகளில் ரூ.80 லட்சம் மதிப்பில் மூன்று படுக்கையறை கொண்ட வீடு வாங்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு ரூ.10-12 லட்சம் தேவை. எனக்கு நீங்கள் சரியான ஆலோசனை சொன்னால் மிகுந்த உதவியாக இருக்கும்” என்றார் ரவி.
இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“கடன் வாங்கும் அவசியம் ஏற்படும்போது, நம்மிடம் உள்ள சொத்துகளைப் பயன்படுத்தி எவ்வளவு குறைவான வட்டியில் கடன் வாங்க முடியுமோ, அந்தளவுக்குக் குறைவான வட்டியில் கடன் வாங்க வேண்டும். இதை நாம் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வந்தாலும், பலரும் அத்தகைய வாய்ப்புகளைக் குறித்து யோசிப்பதே இல்லை.
உங்களிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீடு இருக்கும் நிலையில், அடமானக் கடனாக ரூ.15 லட்சம் வரை வாங்க முடியும். 10.14% வட்டியில் கடன் வாங்கும் வாய்ப்பு கைமேல் இருந்தும்கூட, 18% வட்டியில் கார் லோன் வாங்கியுள்ளீர்கள். அதிக வட்டியில் பர்சனல் லோன் வாங்கியுள்ளீர்கள்.
பர்சனல் லோன், கார் லோன் என இரண்டும் சேர்த்து ரூ.3.70 லட்சம் ஆகிறது. இதனை முன்கூட்டியே முடித்தால் (Preclose) செய்தால், 5% அபராதம் என்கிற கணக்கில் ரூ.18,500 கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். புதிதாகக் கடன் வாங்கினால் 1% பிராசஸிங் கட்டணம் ரூ.4,000 ஆகும். கொஞ்சம் யோசித்துச் செய்தால் இது போன்ற நஷ்டங்களை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாமே!
நீங்கள் பர்சனல் லோனை ப்ரீ குளோஸ் செய்ய வேண்டாம். கார் லோனை மட்டும் ப்ரீ குளோஸ் செய்யுங்கள். அதற்கு வீட்டு அடமானக் கடன் கூடுதலாக ரூ.2 லட்சம் வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்தக் கடன்களையெல்லாம் வைத்துக்கொண்டு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும்; புதிய வீடு வாங்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாகக் கனவு காண்கிறீர்கள். இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும். முதலில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய வீடு வாங்க வேண்டும் என்ற கனவைத் தற்போதைய சூழலில் தள்ளிப்போடுங்கள்.
ரூ.80 லட்சத்தில் வீடு வாங்க வேண்டும் என்றால், உங்களிடம் 30-40% முன்பணம் இருக்க வேண்டும். ஆனால், உங்களிடம் தற்போது செலவுகள் போக மீதமுள்ள ரூ.16 ஆயிரத்தை மூன்றாண்டு களுக்கு முதலீடு செய்தால், 12% வருமான அடிப்படையில் ரூ.6.9 லட்சம்தான் சேர்க்க முடியும்.
ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் 15 ஆண்டுகள் செலுத்தும் வகையில் வாங்கினால் இ.எம்.ஐ மட்டும் ரூ.51 ஆயிரம் செலுத்த வேண்டும்.
உங்கள் மொத்த வருமானமே 50 ஆயிரம் ரூபாய்க்குள் என்கிறபோது புதிய வீடு எப்படி சாத்தியம் என கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள். எனவே, ஏற்கெனவே சொந்த வீடு இருக்கும் நிலையில், வீட்டுக் கடன் மூலம் புதிய வீடு வாங்குவதன் மூலம் பெரிய அளவில் கடனில் சிக்குவதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
வருமானத்துக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தகுதிக்கு மீறித் தேவையில்லாமல் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சொந்த வீடு இல்லாமல்கூட நிம்மதியாக வாழலாம். தகுதிக்கு மீறினால் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் போய்விடும்.
மீதமுள்ள ரூ.16 ஆயிரத்தை ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்தால் சராசரியாக 12% வருமான அடிப்படையில் ரூ.13 லட்சம் கிடைக்கக்கூடும். மூன்றாண்டுகளில் ஓரளவு கடன் முடிவடைந்ததும், அன்றைய நிலையில் குடும்பச் செலவுகள் போக மீதமிருந்தால், அந்தத் தொகையும் கூடுதலாக முதலீடு செய்துவரவும். இந்தத் தொகையை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பிசினஸ் தொடங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது முதலீடு செய்யவுள்ள ரூ.16 ஆயிரத்தை 50% ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த முதலீடுகளிலும், 50% டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவும்.
நீங்கள் ஆரம்பிக்கும் பிசினஸ் ஓரளவு வளர்ச்சி காணும் போது, 10 ஆண்டுகளுக்குப்பிறகு அன்றைய சூழலைப் பொறுத்துப் புதிய வீடு வாங்குவது குறித்து யோசிக்கலாம்.
குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com)
is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878
– கா.முத்துசூரியா
This article was posted in Nanayam Vikatan on 12/08/2018.