
ஃபண்ட் கிளினிக்
குழந்தைகளின் கல்வித் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது பாராட்டத்தக்கது!
எனக்கு வயது 42. எனக்கு 12 வயது, 7 வயது என இரண்டு குழந்தைகள். அவர்களின் படிப்பு, திருமணம், எனது ஓய்வுக் காலத்துக்காக 2009-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். சில ஃபண்டுகளின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் அந்த ஃபண்டுகளின் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, வேறு ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடர்கிறேன். இப்படி நிறுத்திய ஃபண்டுகளில் இருக்கும் பணத்தை எப்போது எடுக்க வேண்டும்? நான் இப்போது முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?
என்னுடைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,000, எடெல்வைஸ் யூ.எஸ் டெக்னாலஜி ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ரூ.2,500, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,000. அடுத்த மாதம் முதல் மேலும் ரூ.2,000 முதலீடு செய்ய இயலும்.
– வ.சரவணகுமார், விருதுநகர்
“உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நீண்டகாலம் மற்றும் இலக்குகள் அடிப்படையில் திட்டமிடுதல் பாராட்டுக்குரியது. தற்போது நிறுத்தியுள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து முதலீடுகளை பங்குச் சந்தை ஏற்றம் உள்ள நிலையில் எடுத்து லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். பிறகு, உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப கால அவகாசம், நிதி தேவைக்கேற்ப திட்டங்களைத் தேர்வு செய்து எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்து வரலாம். தற்போது நீங்கள் செய்துவரும் முதலீட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து செய்துவரலாம். மேலும், கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள 2,000 ரூபாயில் 1,000 ரூபாயை எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் திட்டத்திலும், 1,000 ரூபாயை மிரே அஸெட் எமர்ஜென்சி புளூசிப் திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள்.”
நான் தலா ரூ.2,500 வீதம் எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகிய இரண்டு ஃபண்டுகளிலும் 2018 பிப்ரவரியிலிருந்து எஸ்.ஐ.பி முறையில் 20 ஆண்டுகள் இலக்கில் முதலீடு செய்து வருகிறேன். என்னுடைய போர்ட் ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா..? மேலும், கூடுதலாக மாதம்தோறும் ரூ.1,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கான ஃபண்டையும் பரிந்துரை செய்தால் நல்லது.
– சி.துரை, தர்மபுரி
“கடந்த 3 ஆண்டுகளாக எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அதை நிறுத்திவிட்டு எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். உங்கள் ரிஸ்க்கைக் குறைக்க வேண்டுமென்றால் இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்டில் முதலில் முதலீடு செய்யுங்கள். புதிய முதலீடு 1,000 ரூபாயை மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.”
நான் எஸ்.ஐ.பி முறையில் எஸ்.பி.ஐ கன்சம்ஷன் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,000, நிப்பான் இந்தியா மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.2,500, டாடா ரிட்டயர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட் 1,000 போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடுகளில் ஏதாவது மாற்றம் அவசியமா..?
– ஜி.கார்த்திகேயன், மெயில் மூலமாக
“உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் மற்றும் டாடா ரிட்டயர்மென்ட் திட்டங்களைத் தொடர்ந்து செய்து வரலாம். எஸ்.பி.ஐ கன்சம்ஷன் திட்டம் தீமெட்டிக் வகையைச் சேர்ந்தது. இதில் ரிஸ்க் அதிகம் உள்ளதால், இதை நிறுத்திவிட்டு லார்ஜ் மற்றும் மிட்கேப் திட்டங்களில் இப்படிச் செய்யலாம். மேலும், நிப்பான் இந்தியா மல்ட்டிகேப் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா திட்டங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், இந்தத் திட்டங்களில் முதலீடுகளை நிறுத்திவிட்டு புதிய திட்டங்களில் முதலீடுகளைத் தொடரலாம். புதிய முதலீட்டை இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.”
வீடு கட்டுவதற்காக நான் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். வயது 56. திருமண வயதில் மகள் உள்ளார். மகன் ஐ.ஏ.எஸ் கோச்சிங் படிக்கிறார். ஓய்வுக்காலத்தையும் கணக்கில் கொண்டு சில அறிவுறுத்தல்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்… ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் ரூ.4,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.4,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிவிடெண்ட் யீல்டு ஃபண்ட் ரூ.4,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.3,500. என் முதலீடுகள் பலவும் நஷ்டத்தில் இருக்கின்றன. நான் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா..?
– எஸ்.என்.வி.பாலகிருஷ்ணன், மெயில் மூலமாக
“உங்கள் இலக்குகள் அண்மையில் இருப்பதால் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மாற்றி யமைப்பது நல்லது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிவிடெண்ட் திட்டங்களில் முதலீடுகளை நிறுத்திவிட்டு, உங்கள் முதலீடுகளை மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், எடெல்வைஸ் மிட்கேப், யூ.டி.ஐ ஈக்வ்விட்டி ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.”
எனக்கு, 10 வயது மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள். குழந்தைகளின் படிப்புக்காகக் கடந்த நான்கு வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். இன்னும் கூடுதலாக ரூ.10,000 முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். செய்துவரும் முதலீடுகளை ஆய்வு செய்து தருவதுடன், புதிய முதலீட்டுக்கான பரிந்துரையையும் வழங்கினால் நன்றாக இருக்கும். என் முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.2,300, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.1,500, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.4,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,200.
– காயத்ரி, மெயில் மூலமாக
“உங்கள் மகனின் கல்வித் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருவது பாராட்டுக்குரியது. உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் கடந்த மூன்று மாதங்களாக எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்டுகளின் செயல்பாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், அதன் செயல்பாடு மூன்று ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் காணவில்லை. எனவே, அந்தத் திட்டத்தில் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மற்ற திட்டங்களில் உங்கள் முதலீட்டை தொடர்ந்து செய்து வரலாம். புதிதாக முதலீடு செய்ய உள்ள 10,000 ரூபாயை கனரா ராபிகோ புளூசிப் ரூ.4,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ரூ.3,000, எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000 என முதலீடு செய்யுங்கள்.”
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?
finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 06/09/2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.