ஃபண்ட் கிளினிக்

ஃபண்ட் கிளினிக்
எனக்கு வயது 32. நான் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் சில ஃபண்டுகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடித் திட்டத்தில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா… நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்…
ஆதித்ய பிர்லா சன் லைஃப் பியூர் வேல்யூ ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,500, டி.எஸ்.பி நேச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் நியூ எனர்ஜி ஃபண்ட் ரூ.2,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் ஃபண்ட் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,500, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் ரூ.2,500, மோதிலால் ஆஸ்வால் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,500, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, யூ.டி.ஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட் ரூ.2,000.
– கே.அங்கயற்கண்ணி, சிதம்பரம்
“செக்டார் ஃபண்டுகள் மற்றும் தீம் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமலேயே சராசரி முதலீட்டாளர் அவருடைய இலக்குகளை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிக அளவில் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் செக்டார் அண்ட் தீம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆனால், மார்க்கெட் சூழ்நிலை மாறும்போது பிராஃபிட் புக் செய்ய வேண்டும் அல்லது முதலீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டும். இல்லையென்றால் பல ஆண்டுகள் முதலீடு செய்தும், குறைவான வருமானத்தைப் பெறும் சூழ்நிலை உருவாகும். அடுத்த சந்தை ஏற்றத்தில் உங்களிடமிருக்கும் செக்டார் மற்றும் தீம் ஃபண்டுகளை விற்றுவிடவும்.
அதேபோல் இப்போது சராசரியாக ஸ்மால்கேப் ஃபண்டுகள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன என்றால், உடனே அந்த வகை ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீடு செய்வது நல்ல முதலீட்டாளர்களுக்கு அடையாளம் அல்ல.
இன்னொரு முக்கியமான விஷயம்… நேரடி முதலீட்டின் மூலம் முதலீடு செய்தால் 0.5- 0.75 சதவிகிதம் அதிகமாக லாபம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு, தவறான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது பணத்தைப் பெருக்குவதற்கான வழிமுறை அல்ல.
யூ.டி.ஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட், டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் பியூர் வேல்யூ ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் செய்துவரும் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அட்டவணை-1-ல் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். மற்ற முதலீடுகளை இப்போதைக்குத் தொடரவும்.”
குறைவான வருமானம் உள்ளவர்கள் பெரிய தொகையைச் சேர்ப்பது என்பது கடினமான காரியமல்ல!
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
என் வயது 34. நான் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சில ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவைதானா அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என ஆராய்ந்து சொன்னால் உதவியாக இருக்கும். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்….
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லார்ஜ்கேப் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மல்டி அஸெட் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.2,500.
இவற்றைத் தவிர கூடுதலாக மாதம் ரூ.20,000 முதலீடு செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு சரியான முதலீட்டு ஆலோசனையை வழங்கவும்.
– கே.ராதாகிருஷ்ணன், மெயில் மூலமாக.
“நீங்கள் உங்கள் முதலீடுகள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறீர்கள். எல்லா முதலீட்டையும் ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஃபண்ட் ஹவுஸ் எல்லா திட்டங்களையுமே நன்றாக நிர்வகிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக அது கடினம். அப்படியிருக்கும்போது நீங்கள் எல்லா முதலீடுகளையும் ஒரே நிறுவனத்தின் திட்டங்களில் முதலீடு செய்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.
ஐ.சி.ஐ.சி.ஐ இன்ஃப்ரா ஃபண்ட் மிக மோசமாக வருமானம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் சில நிறுவனங்களின் இன்ஃப்ரா ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுத்திருக்கின்றன். உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள மல்டிகேப் மற்றும் இன்ஃப்ரா ஃபண்டுகளை விற்றுவிடவும்.
இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துவரும் தொகைக்கும், நீங்கள் மேலும் கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் 20,000 ரூபாய்க்கும் அட்டவணை-2-ல் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.”
எனக்கு 22 வயது. இன்னும் 10 வருடங்களில் 20 லட்ச ரூபாய் சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. நான் திருமண விழாக்களில் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறேன். இதன் மூலம் மாதம் சுமார் ரூ.15,000 முதல் 20,000 வரை சம்பாதிக்கிறேன். என் மாத வருமானத்தில் ரூ.4,000 முதல் 5,000 வரை முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். சிறிய அளவிலான தொகையை அவ்வப்போது சேமித்தும் வருகிறேன். நான் எந்த மாதிரியான முதலீட்டை மேற்கொள்வது… என்னைப்போல 20,000 ரூபாய்க்கும்கீழ் மாத வருமானத்தைக் கொண்டவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஏற்ற முதலீடுகளைப் பரிந்துரை செய்யவும்.
– சந்துரு, திருநெல்வேலி-3
“குறைவான வருமானம் உள்ளவர்கள் பெரிய தொகையைச் சேர்ப்பது என்பது கடினமான காரியமல்ல. ஆனால் அதே நேரத்தில் முதலீடு செய்யும்போது, முதலீட்டு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
10 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் உங்களால் நீங்கள் நினைக்கும் இலக்கை அடைய முடியும். உதாரணமக, நீங்கள் மாதம் 8,700 ரூபாய் முதலீடு செய்து வந்து, அந்த முதலீடு 12% வருமானம் கொடுக்கும்பட்சத்தில் உங்கள் இலக்கை அடைய முடியும்.
நீங்கள் ரிஸ்க் குறைவாக எடுக்க வேண்டும் என்று சொன்னால் 10% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் உங்களால் ரூ.17.85 லட்சம் சேர்க்க முடியும். ஆனால், இப்போது உங்களால் 6,000 ரூபாய் சேர்க்க முடியுமென்றால் அதை ஆண்டுக்கு 10 சதவிகிதம் உயர்த்தினால் உங்களால் ரூ.20 லட்சத்தை அடைவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறது.
நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் தொகையில் 50 சதவிகிதத்தைக் கடன் மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளிலும், 50 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும். அப்படி நீங்கள் முதலீடு செய்து, பங்கு சார்ந்த ஃபண்டுகள் ஒருவேளை உங்களுக்கு எதிர்பார்த்த 12 சதவிகிதத்தைவிட அதிக வருமானம் கொடுத்தால், பிராஃபிட் புக் செய்து லிக்விட் ஃபண்டில் வைத்துக்கொள்ள வேண்டும். எஸ்.டி.பி முறையில் திரும்பவும் அதே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் நல்ல ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று, அவருடைய வழிகாட்டுதல்படி முதலீட்டை ஆரம்பித்தால் உங்கள் இலக்கை அடைவது உங்களுக்குச் சிரமமாக இருக்காது.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
This article was written by Mr. Suresh Parthasarathy and published in nanayam vikatan on 19 Jan 2020