
வயது 68. பின்வரும் ஃபண்டுகளில் 2016, 2017-ம் ஆண்டுகளில் எட்டு ஆண்டு இலக்குவைத்து முதலீடு செய்திருக்கிறேன். 13 மற்றும் 12 வயதாகும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்திருக்கிறேன். தற்போது ஆறு ஃபண்டுகள் முதலீட்டுத் தொகையைவிட 1% முதல் 23% வரை குறைந்துவிட்டன. என் போர்ட்ஃபோலியோவில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்..? என் முதலீடுகள் பின்வருமாறு…
ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் – ரூ.50,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் – ரூ.50,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் – ரூ.50,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் – ரூ.1,00,000, சுந்தரம் ரூரல் இந்தியா கன்சம்ஷன் – ரூ.50,000, சுந்தரம் மிட்கேப் – ரூ.50,000, எல் & டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் ரூ.1,00,000, எல் & டி இன்ஃப்ரா ஃபண்ட் – ரூ.50,000, ஐ.டி.எஃப்.சி இன்ஃப்ரா ஃபண்ட் – ரூ.1,00,000, டாடா இந்தியா கன்ஸ்யூமர் ஃபண்ட்- ரூ.50,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப்- ரூ.2,50,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் – ரூ.60,000, இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்- ரூ.1,00,000, இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் – ரூ.1,00,000, ஆக்ஸிஸ் புளூசிப் – ரூ.1,00,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட்- ரூ.1,00,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் – ரூ.1,00,000, ஹெச்.டி.எஃப்.சி பேல்ன்ஸ்டு அட்வான்டேஜ் – ரூ.7,00,000 (இது மட்டும் மாத டிவிடெண்ட் ஃபண்ட். எனது தேவைக்காக).
– தசரதன், இராஜபாளையம்.
“முதலீட்டாளர்கள் 0.5-0.8% செலவைக் குறைப்பதற்காக டைரக்ட் ஃபண்ட் தேர்வு முறையில் முதலீட்டைச் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம், மார்க்கெட் நிலவரம் எப்படி உள்ளது, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் இவற்றில் எதில் முதலீடு செய்ய வேண்டும், எந்த விகிதாசாரத்தில் முதலீடு செய்தால் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையெல்லாம் ஆராய்வதில்லை. இதற்குச் சரியான உதாரணம் உங்கள் போர்ட்ஃபோலியோ. 2017-ம் ஆண்டில் ஸ்மால்கேப் அதிக வருமானம் கொடுத்தது. அதன் அடிப்படையில் உங்கள் முதலீட்டில் 43% ஸ்மால்ேப்பில் முதலீடு செய்துள்ளீர்கள். அதன் விளைவு, 23% வரை உங்கள் முதலீடு அதிகபட்சமாகக் குறைந்திருக்கிறது. இனி முதலீடு செய்யும்போது காலத்தை நிர்ணயித்து, அதற்கேற்ப அஸெட் அலொகேஷன் செய்துகொள்வது சிறந்தது.

உங்கள் போர்ட்ஃபோலியோ இலக்குகளைப் பொறுத்து 20% லார்ஜ்கேப், 30% மல்டிகேப், 35% மிட் அண்ட் ஸ்மால்கேப், 15% ஹைபிரிட் ஃபண்ட் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது (பார்க்க அட்டவணை). ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தரக் குடும்பச் செலவுகள் இருக்கும் என்பதால், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு. உங்கள் மாதாந்தரச் செலவுகளைச் மேற்கொள்ள ‘சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான்’ (SWP) எடுத்துக்கொள்வதே சரியானது. டிவிடெண்ட் ஆப்ஷனைவிட இது சிறந்தது. இப்படிச் செய்வதால், டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டாக்ஸைத் தவிர்க்கலாம்; நீண்டகாலத்தில் அதிக வருமானம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எஸ்.டபிள்யூ.பி முறையில் ஆண்டுக்கு 8 சதவிகிதத்துக்கு மேல் தொகையை எடுக்காமல் இருப்பது நல்லது.”