
ஃபண்ட் கிளினிக்
ஒரு முதலீட்டாளரின் போர்ட் ஃபோலியோவில் லார்ஜ்கேப், மல்ட்டிகேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் கட்டாயம்!
என் வயது 37. நான் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். நான் நீண்டகால முதலீட்டாளர். ரிஸ்க் எடுக்கவும் தயார். எனது முதலீட்டில் மாற்றம் வேண்டுமா..? என் மகளுக்கு வயது 10. எனது ஃபண்டுகளில் சிலவற்றை மகள் பெயரில் மைனர் அக்கவுன்ட் தொடங்கி முதலீடு செய்து, அவளுக்கு 18 வயது ஆகும்போது அவள் வெளியேற நினைத்தால், வரிச் சேமிப்பு கிடைக்கும் என நம்புகிறேன். நான் தேர்வு செய்த ஃபண்டுகள் சரியென்றால், எந்தெந்த ஃபண்டுகளை அவள் பெயரில் தொடங்கலாம்?
எனது தற்போதைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் மிட்கேப் ரூ.5,000, கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.5,000. மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.10,000. பராக் பரிக் லாங் டேர்ம் ஃபண்ட் ரூ.3,000. எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000. ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000.
– பாலாஜி, சென்னை
“நாம் பரவலாகக் கூறிவருவது, ஒரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் லார்ஜ்கேப், மல்ட்டிகேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் கட்டாயம். இந்த மாதிரி முதலீடு செய்துவந்தால் போர்ட்ஃபோலியோ நீண்டகாலத்தில் ஒரு நிலையான வருமானம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலைப்படி, மல்ட்டிகேப் ஃபண்டுகள் பரவலாக 60-70% வரை லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்கின்றன. மீதமிருக்கும் தொகையை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்பில் முதலீடு செய்கின்றன. ஆனால், மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது லார்ஜ்கேப்பில் முதலீட்டைக் குறைத்துவிட்டு, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்பில் அதிக முதலீடு செய்கின்றன. எனவே, மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது மல்ட்டிகேப் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத இறங்குமுகத்தை சந்தை எதிர்நோக்கினால் அப்போது இவ்வகையான மல்ட்டிகேப் ஃபண்ட் மோசமான வருமானம் ஈட்டித் தரும். எப்போதும் நம் முதலீட்டில் 20% லார்ஜ்கேப்பில் இருந்தால் போர்ட்ஃபோலியோ வருமானம் ஓரளவுக்குச் சீராக இருக்கும். உங்கள் முதலீட்டில் மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.5,000 குறைத்து, அதை ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.
அடுத்து, குழந்தை பெயரில் முதலீடு செய்துவந்தால் என்ன லாபம் என்று கேட்டுள்ளீர்கள். இப்போது உங்கள் குழந்தைக்கு 10 வயது என்பதால், அவளுடைய பெயரில் சேமிப்புக் கணக்கை உருவாக்கி, அதன் வழியாக முதலீடு செய்துவந்தால் 18 வயது ஆகும்போது, அந்த முதலீடு முழுவதும் உங்கள் மகள் பெயருக்கு மாற்றம் அடையும்நிலையில், உங்கள் மகளின் வருமானம் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், ஃபண்ட் முதலீட்டில் பெறும் லாபத்துக்கு நீங்கள் வரிச் சலுகை பெற முடியும். எனவே, குழந்தை பெயரில், குழந்தையின் இலக்குக்கு எவ்வளவு தேவையோ அதை முதலீடு செய்து வரவும். இந்த மாற்றம் தவிர மற்ற முதலீட்டை அப்படியே தொடரவும்.”

என் வயது 31. நான் 2016 முதல் மாதாந்தர எஸ்.ஐ.பி மூலம் சில ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். அவை… எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.2,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, நிப்பன் பார்மா ஃபண்ட் ரூ.3,000.
எனது இலக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகானது. எனது ஓய்வுக்காலத்துக்கு நான் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன். என் முதலீட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? நிப்பான் பார்மா ஃபண்ட் நல்ல லாபத்தில் உள்ளது. நான் அதிலிருந்து பணத்தை இப்போது எடுக்கலாமா?
– ராஜா, பெங்களூரு
“உங்கள் வயதை வைத்துப் பார்க்கும் போது உங்கள் முதலீட்டிலிருக்கும் ரிஸ்க் பரவாயில்லை. ஆனால், அதேவேளையில் 50 சதவிகிதத்துக்கும்மேல் மிட் அண்ட் ஸ்மால்கேப்பில் இருப்பதால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, உங்கள் போர்ட்ஃபோலியோவில் 30-40% மிட் அண்ட் ஸ்மால்கேப்பில் பிராஃபிட் புக் செய்து மறுமுதலீடு செய்யவும். இதனால் ஓரளவுக்கு உங்கள் போர்ட்ஃபோலியோவில் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீட்டை நீண்டகாலத்துக்கு அப்படியே பராமரிப்பது நன்றாக இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குச் சந்தை ஓர் இறக்கத்தைச் சந்திக்கும் காலகட்டத்தில் இருப்பதால் மிட் அண்ட் ஸ்மால்கேப் வருமானம் 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்போது இவ்வாறு செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவில் மொத்த வருமானத்தைக் கூட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில், ஒரு விஷயத்தை மறக்காதீர்கள். இவ்வாறு பிராஃபிட் புக் செய்த பிறகு அதை ஒரு காலகட்டத்துக்குள் பங்கு சார்ந்த முதலீடுகளில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். அந்தப் பணத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். உங்களிடமிருக்கும் முதலீட்டை அப்படியே தொடரவும்.”
என் வயது 30. கடந்த சில வருடங்களாக சில மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய 50 வயதில் ரூ.70 லட்சம் சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. நான் என் முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?
என் முதலீடுகள்… ஆதித்ய பிர்லா ஈக்விட்டி அட்வான்ஸ்டு ஃபண்ட் ரூ.5,000, டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.5,000, ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்ட் ரூ.3,000.
– விக்னேஷ், மயிலாடுதுறை
“உங்கள் இலக்கை அடைவதற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,700 முதலீடு செய்து வர வேண்டும். அத்துடன் உங்கள் முதலீடு 11% வருமானம் ஈட்ட வேண்டும். இப்போது உங்களிடமிருக்கும் முதலீட்டில் ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 19/7/2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.