
ஃபண்ட் கிளினிக்
எந்தவொரு முதலீட்டு ஆலோசகரும் ஒரே ஃபண்ட் ஹவுஸிலுள்ள ஃபண்டுகளைப் பரிந்துரை செய்வதில்லை!
தொகுப்பு: கா.முத்துசூரியா
என் வயது 35. நான் கடந்த மூன்று வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். எனது தற்போதைய முதலீட்டுத் தொகையைவிட சந்தை மதிப்பு ரூ.50,000 குறைவாகவே உள்ளது. எனினும், எனது இலக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகானதே. நான் முதலீடு செய்துவரும் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?
என்னுடைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, நிப்பான் இந்தியா டாக்ஸ் ஃபண்ட் ரூ.4,500, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000.
– அப்துல், திருநெல்வேலி
“உங்களிடமிருக்கும் முதலீட்டில் ஸ்மால்கேப் அதிகமாக இருக்கிறது. மிட்கேப் மிகக் குறைவாக உள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் நீங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது பிராஃபிட் புக் செய்வது சிறந்தது. சராசரியாக அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் ஸ்மால்கேப்பில் 30% முதலீடு செய்யலாம்.
நீங்கள் ரிஸ்க் எடுப்பவராக இல்லாமல், ஏதோ ஒரு முதலீடு என்ற வகையில் செய்திருந்தால், போர்ட்ஃபோலியோவை அலொகேஷன்படி மாற்றி அமைக்கவும். உங்களிடமிருக்கும் இரண்டு டாக்ஸ் ஃபண்டுகளும் லார்ஜ்கேப் வகையைச் சார்ந்திருப்பதால் பரவாயில்லை. இருப்பினும், நிப்பான் இந்தியா டாக்ஸ் ஃபண்டின் செயல்பாடு மிகவும் சுமாராக இருப்பதால், அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோட்டக் டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்யவும். மார்க்கெட் ஏறுமுகத்தில் நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டின் செயல்பாடு நன்றாக இருக்கும். எனவே, வரும் காலத்தில் ஸ்மால்கேப் ஏறுமுகமாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதால், அதில் முதலீட்டைத் தொடரவும்.
அதேவேளையில், ஸ்மால்கேப் ஃபண்டின் நிர்வகிக்கும் தொகை அதிகரிக்கும்போது அதன் செயல்பாடு குறையக்கூடும். எனவே, இந்த ஃபண்டைக் கூர்ந்து கவனித்து வரவும். சராசரியாக இப்போது ரூ.7,000 கோடி இதில் உள்ளது. இது மிகவும் அதி கரிக்கும் பட்சத்தில், இதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டால் அதில் முதலீடு செய்வதை நிறுத்தி விடவும்.
கோவிட்-19 எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு நிகழ்வு. இதனால் பல ஃபண்டுகளில் வருமானம் மிகவும் குறைந்துபோய் விட்டது. அதற்காக நீங்கள் பதற்றமடை யாமல், உங்களுக்கானது நீண்டகால இலக்குகள் என்பதால் முதலீட்டைத் தொடரவும்.”
நான் பின்வரும் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்துள்ளேன். எனக்கு வயது 67 ஆகிறது. இன்னும் 2-3 வருடங்களில் எனது மகன் திருமணத்துக்காகப் பணம் சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். என் மகனின் திருமணத்துக்கு மொத்த முதலீடாக ரூ.11 லட்சத்தை 2-3 வருடங்களுக்கு ஆக்ஸிஸ் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? எனக்கு ஆக்ஸிஸ் ஃபண்ட் தவிர, பிற ஃபண்டுகளின் வளர்ச்சி திருப்தியளிக்க வில்லை. நான் நினைப்பது சரியா?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் குரோத் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000.
– வி.சந்திரசேகரன், மெயில் மூலமாக
“எந்தவொரு முதலீட்டு ஆலோ சகரும் ஒரே ஃபண்ட் ஹவுஸிலுள்ள ஃபண்டு களைப் பரிந்துரை செய்வதில்லை. உங்களுக்கு அப்படிப் பரிந்துரை செய்யப் பட்டிருந்தால், நீங்களாவது சிந்தித்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.
முக்கியமாக, உலகத்திலிருக்கும் எந்த ஃபண்ட் மேனேஜரும் தொடர்ந்து 15, 20 ஆண்டுகள் டாப் பர்ஃபாமென்ஸ் செய்வதில்லை. ஏனென்றால், பங்குச் சந்தை எல்லோரையும்விட புத்திசாலியானது. ஆகையால், உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஃபண்ட் ஹவுஸ் ஃபண்டுகள்தான் நன்றாக வருமானம் தரும் என்பது தவறான நம்பிக்கை. அதே நேரம், கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஸிஸ் அதிக வருமானம் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
உங்கள் மகன் திருமணத்துக்குப் பணம் தேவைப்படுவதால், 2022-ல் மார்க்கெட் உச்சத்தை அடைந்தால் அப்போது முதலீட்டை மாற்றி, லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யவும் அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் அடுத்த ஆண்டு உங்கள் முதலீடு 15 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கொடுத்தால் முதலீடு முழுவதையும் லிக்விட் ஃபண்டில் மாற்றி விடவும்.”
என் வயது 42. என் மகளுக்கு 6 வயதாகிறது. 2017 முதல் நான் சில ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். என் மகளின் மேற்படிப்பு மற்றும் என் ஓய்வுக் காலத்துக்காக நான் முதலீடு செய்துவருகிறேன்.
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் 3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புளூசிப் ஈக்விட்டி ரீடெயில் ஃபண்ட் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் 4,000, மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட் 3,000.
இவை அல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் மாதந்தோறும் ரூ.2,500 முதலீடு செய்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டேன். ஆனால், பணத்தை எடுக்கவில்லை. இப்போது அதன் செயல்பாடு சரியில்லாததுபோல தோன்றுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
– எஸ்.கோவிந்தராஜ், மெயில் மூலமாக
“முதலில், உங்களுக்கான ஓய்வுக்காலத் தீர்வைப் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் சேர்ந்து மாதம் ரூ.25,000 குடும்பச் செலவுக்குத் தேவை ஏற்பட்டால், உங்களுடைய 58 வயதுக்குப் பிறகு ரூ.74,000 தேவையாக இருக்கும். இது பணவீக்கம் 7% என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ஓய்வுக்கால நிதியாக உங்களிடம் ரூ2.08 கோடி தேவை. இந்த இலக்கை அடைவதற்கு நீங்கள் மாதம் தோராயமாக ரூ.36,300 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பி.எஃப் முதலீடு எவ்வளவு செலுத்தப்பட்டு வருகிறதோ அந்தத் தொகையைக் கழித்துக்கொண்டு, முதலீட்டுத் தொகையை நிர்ணயம் செய்துகொள்ளவும்.
நீங்கள் தற்போது முதலீடு செய்துவருவது உங்கள் இலக்குகளை அடைவதற்கு போதுமானதாக இல்லை. உங்கள் மகளின் மேற்படிப்பு என்பதும் உங்கள் இலக்காக இருப்பதால் கூடுதல் முதலீடு அவசியம். உங்களிடம் பணம் இருக்கும்பட்சத்தில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கவும். ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்டின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதால் மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது அதை விற்றுவிடவும்.”
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 26/7/2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.