
முதலீடு
உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் ஃபண்டுகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யுங்கள்!
நான் கடந்த மூன்று வருடங்களாகச் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீட்டில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா..? என் முதலீடுகள்… டி.எஸ்.பி பிளாக் ராக் மைக்ரோகேப் ஃபண்ட் ரூ.3,000, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினசஸ் ஃபண்ட் ரூ.5,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, சுந்தரம் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000.
– காசி, மெயில் மூலமாக
“உங்கள் முதலீட்டில் ஸ்மால்கேப் அளவு 70% உள்ளது. இந்த வகை பங்குகளில் விலை ஏற்றத்தாழ்வுகளின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த ரிஸ்க்கை அறிந்து அதிக பலன் பெறும் நோக்கில் செய்துள்ளீர்கள் எனில், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் ஃபோலியோவில் இங்கே சொல்லப்படும் மாற்றத்தைச் செய்யுங்கள். எல் அண்ட் டி எமெர்ஜிங் ஃபண்ட், சுந்தரம் ஸ்மால்கேப், சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றின் செயல்பாடு கடந்த மூன்று ஆண்டுகளாகச் சரியாக இல்லை. எனவே, அவற்றை நிறுத்திவிட்டு, பின்வரும் ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடங்குங்கள். கோட்டக் ஸ்மால்கேப் ரூ.5,000, நிப்பான் ஸ்மால்கேப் ரூ.1,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ரூ.1,000.
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட் ஃபோலியோவில் ரிஸ்க்கை சமன் செய்ய விரும்பினால், ஸ்மால்கேப்பை 30% – 40% என்ற அளவில் குறைத்துக்கொண்டு, ஏனைய முதலீடுகளை லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப், ஆக்ஸிஸ் மிட்கேப் மற்றும் யூ.டி.ஐ ஈக்விட்டி முதலீடுகளை அதிகப்படுத்துங்கள்.”
கடந்த நான்கு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். எனக்கு வயது 39. எனக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகள்கள். இவர்களின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக நான் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய இலக்கு ரூ.1 கோடி. நான் என் முதலீட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள்… பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, நிப்பான் இந்தியா பவர் அண்ட் இன்ஃப்ரா ஃபண்ட் ரூ.1,000, நிப்பான் இந்தியா டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.2,000.
– எஸ்.அசோக்குமார், கோவை
“நீங்கள் எவ்வளவு காலத்தில் ரூ.1 கோடி இலக்கை அடைய வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிடவில்லை. நீங்கள் செய்துவரும் முதலீடுகள் மூன்று ஆண்டுகள் என்ற அனுமானத்தில் கணக்கிட்டால், இப்போது முதலீட்டு மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். உங்கள் மகள் மற்றும் மகன் படிப்புச் செலவு தற்போதைய மதிப்பில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் எனில், 7% பணவீக்கத்தில் அவர்களின் கல்லூரிப் படிப்புக்குத் தேவை ரூ.20 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம். இதற்கு 12% வருட வருமானம் ஈட்டும் வகையில் எஸ்.ஐ.பி முறையில் முறையே ரூ.8,800, ரூ.5,300 முதலீடு செய்ய வேண்டும். அவர்களின் திருமணத்துக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் தேவைப்படும் எனில், ரூ. 4,400 மற்றும் ரூ.1,600-க்கான இரண்டு எஸ்.ஐ.பி முறையிலான முதலீடுகளை ஆண்டுக்கு 12% வருமானம் ஈட்டும் ஃபண்டுகளில் முறையே 16 மற்றும் 24 ஆண்டுகள் முதலீடு செய்யுங்கள். இப்போதுள்ள மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் தற்போதைய நிலையில் ஃபண்டுகளின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களை குறிப்பிடுகிறேன். நிப்பான் பவர் & இன்ஃப்ரா ஃபண்ட் ஒரு செக்டார் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட். இது, குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பலன் அளிக்கக்கூடியது. இதற்கு பதிலாக, ஆக்ஸிஸ் ஈக்விட்டி ஃபோகஸ்டு 25 ஃபண்டிலும், நிப்பான் டாக்ஸ் சேவர் ஃபண்டுக்குப் பதிலாக கனரா ராபிகோ டாக்ஸ் சேவர் ஃபண்டிலும், ஃப்ராங்க்ளின் ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக நிப்பான் ஸ்மால்கேப் ஃபண்டிலும் முதலீட்டைத் தொடருங்கள்.”
எனக்கு வயது 70. நான் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ரூ.27,000 முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடுகளை அப்படியே தொடரலாமா..? என் முதலீடுகள்… கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம் ரூ1,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ரூ.4,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் ரூ.4,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ரூ.4,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ரூ.4,000, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.4,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ரூ.2,000.
– குப்பம்மாள், மெயில் மூலமாக
“உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஃபண்டுகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்டுக்கு பதிலாக இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டிலும், ஃப்ராங்க்ளின் புளூசிப் ஃபண்டுக்குப் பதிலாக கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள். ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்ஸ்டு ஃபண்டுக்குப் பதிலாக எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டில் அதே அளவு தொகையைத் தொடரலாம். உங்கள் முதலீடுகள் உங்களுடைய அடுத்த சந்ததியினர் பலன் பெறும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்ற ஊகத்தில் இந்தப் பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.”
செக்டார் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பலன் அளிக்கக் கூடியது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டு தங்கள் முதலீடுகளைச் செய்ய வேண்டும்!
என் மகளுக்கு வயது 11, மகனுக்கு வயது 5. இவர்களின் மேற்படிப்பு, திருமணத்துக்காக மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் ரூ.17,000 முதலீடு செய்து வருகிறேன். நான் ஓய்வுக்கால முதலீடுகள் எதுவும் இன்னும் செய்யவில்லை. நான் செய்துள்ள முதலீடுகளை அப்படியே தொடரலாமா? என் முதலீடுகள்… ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ் சேவர் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.10,000.
– எஸ்.நிர்மலா, மெயில் மூலமாக
“உங்கள் மகள், மகன் கல்லூரிப் படிப்புக்கு தற்போதைய மதிப்பில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் தேவைப்படுவதாக வைத்துக் கொண்டால், ஆண்டுக்கு 10% பணவீக்கத்தில், மகளுக்கு 18 வயதில் ரூ.20 லட்சமும், மகனுக்கு 18 வயதில் ரூ.36.50 லட்சமும் தேவைப்படும். அதற்கு நீங்கள் சராசரியாக 12% வருமானம் ஈட்டக்கூடிய வகையில் முறையே ரூ.16,000 மற்றும் ரூ.10,000 என மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வாருங்கள். உங்களின் தற்போதைய முதலீடுகளை நிறுத்தி விட்டு, பின்வரும் முறையில் முதலீடுகளைத் தொடங்குங்கள். யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.4,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.4,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.8,000, கனரா ராபிகோ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.10,000. மகள், மகன் திருமணத்துக்கு செலவு மதிப்பீட்டின் அடிப்படையில் முதலீடுகளைத் தொடங்கலாம். உங்கள் ஓய்வுக்கால தொகைக்குத் தேவையான முதலீட்டை உடனே தொடங்குங்கள். அப்போதுதான் கூட்டு வட்டி தரும் நன்மைகளை (Advantage of compounding) நீங்கள் பெற முடியும்.”
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?
finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 26.09.2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.